For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் - 21: சூடான பனிப்போர்!

By Shankar
Google Oneindia Tamil News

பிரித்தானியப் பேரரசு, தன் வலிமையை இழக்கும் ஒரு தருணம் வரலாற்றில் ஏற்படும் என்ற நம்பிக்கை, அமெரிக்காவிற்கு நெடுங்காலமாகவே இருந்தது. அதற்காகவே காத்திருந்தது என்று கூடக் கூறலாம்.

அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) பல்லாண்டுகள் பணியாற்றி, இன்றும் அந் நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியராக உள்ள, உலகப் புகழ் பெற்ற, மொழியியலாளரும், அரசியல் விமர்சகருமான நோம் சாம்ஸ்கி (Noam chamsky), இது குறித்துத் தன் நூலொன்றில் விரிவாகவே கூறுகின்றார்.

Subavee's Arinthum Ariyamalum - Part 21

இதனை ட்ரூமன் கோட்பாடு (Truman Doctrine) என்று கூறும் சாம்ஸ்கி, "அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கோட்பாடு, ஒரு விபத்தாகத் தோன்றியதில்லை. அது நீண்ட வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாகும்" என்கிறார்.

அட்லாண்டிக், பசிபிக் ஆகிய இரு பெரும் கடல்களால் அரணாகச் சூழப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் தம்முள் மோதி மோதி வலிமையிழக்கும் வரலாற்று நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இரண்டாம் உலகப் போர் முடியும் வேளையில், அந்நிலை ஐரோப்பாவில் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் அமெரிக்கா எதிர்பாராத ஒரு நிகழ்வும் அப்போது நடந்தேறியது. பிரித்தானியப் பேரரசு தன்னளவில் சுருங்கினாலும், சோவியத் நாடு பெரும் வலிமையோடு எழுந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பிறந்த நாடு சோவியத். அப்போது அந்நாட்டின் அதிபராகப் பங்கேற்ற லெனின், நாடு பிடிக்கும் இந்த ஏகாதிபத்தியப் போரில், தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறி விலகி நின்றார்.

ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது, சோவியத் அதிபராக இருந்த ஸ்டாலின், ஒரு கட்டத்தில் உள்ளிழுக்கப்பட்டார். தேவையற்று, சோவியத்தின் மீது தாக்குதல் நடத்திய இட்லரின் ஆணவம், இன்னொரு உலகப் பேரரசு உருவாகக் காரணமாகியது.

1956ஆம் ஆண்டு, சூயஸ் கால்வாய்ப் போரின் முடிவில், அமெரிக்கா, சோவியத் ஆகிய இரு நாடுகளும் நாசருக்கு ஆதரவாக நின்று, ஐரோப்பிய அரசுகளை ஒடுக்கிய பின், உலகின் போக்கை அவ்விரு நாடுகளும் தீர்மானிக்கத் தொடங்கின.

உலக நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்று சில நாடுகள், சோவியத் தலைமையில் அணி வகுத்தன. கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்க்கிறோம் என்று கூறி, அமெரிக்காவின் தலைமையில் சில நாடுகள் இணைந்தன. இரண்டு நாடுகளுமே வல்லாதிக்க நாடுகளாக வளர்ந்தன என்று நோம் சாம்ஸ்கி போன்றோர் கருதினர்.

1986ஆம் ஆண்டு, நிகரகுவாவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் (University of Centroamericana) உரையாற்றிய சாம்ஸ்கி, "உலகில் இன்று இருபெரும் வல்லரசுகள் உள்ளன. ஒன்று, மிகப் பெரும் வல்லரசாக (huge super power) இருந்து கொண்டு, உங்கள் கழுத்தில் தன் காலை வைத்துள்ளது. இன்னொன்று சற்று வலிமை குறைந்த வல்லரசாக நின்று, வேறு சில நாடுகளின் கழுத்தில் தன் காலை ஊன்றியுள்ளது" என்றார். சோவியத்தின் வீழ்ச்சிக்கு ஐந்தாறு ஆண்டுகள் முன்பாகவே, அது தன் வலிமையில் சிறுத்து வருவதைச் சாம்ஸ்கி நன்றாகவே உணர்ந்து கூறியுள்ளார்.

நிகரகுவாவை மட்டுமின்றித் தன் அண்டை நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா ஒடுக்கியது. சிறிது சிறிதாகத் தன் ஆட்சிப் பரப்பை அது மிகுதியாக்கிக் கொண்டே இருந்தது. கியூபாவைத் தவிர, பிற தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பிடியில்தான் இருந்தன. வெனிசுலா போன்ற நாடுகள் அவ்வப்போது எதிர்த்தாலும், அமெரிக்காவை அவற்றால் அசைக்க முடியவில்லை.

சோவியத் நாடும் தன் பங்கிற்குப் பிற நாடுகளின் மீதான ஆதிக்கத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சோவியத் கைப்பற்றியது. அணி சேரா நாடுகளும், காலப்போக்கில் அணிசேரவே தொடங்கின.

1957ஆம் ஆண்டு, சோவியத் அதிபர் குருஷேவ் (Nikita Khrushchev), தங்கள் இராணுவத்தின் அளவில், மூன்றில் ஒரு பகுதியைக் குறைத்தார். அது சமாதானம் நோக்கிய முயற்சி அன்று. ஏவுகணைகளை (missiles)த் தயாரிக்கத் திட்டமிடப்பட்டதால், தரைப் படைகளின் அளவைக் குறைக்க முடிவெடுத்தார்.

1957 - உலக வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக ஆனது. அந்த ஆண்டில்தான், சோவியத் தனது ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்னும் விண்கலத்தை வானில் ஏவியது. அந்த அறிவிப்பை 57ஆம் ஆண்டு மத்தியில், குருஷேவ் வெளியிட்டபோது, மேலை நாடுகள் அதனை நம்பவில்லை. அதனை வெறும் மிரட்டல் என்றே கருதினர். ஆனால், 1957 அக்டோபர் 4ஆம் நாள் அந்த விண்கலம் உண்மையிலேயே ஏவப்பட்டபோது, அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகள் அனைத்தும் மலைத்து நின்றன.

ஸ்புட்னிக் பூமியை வலம் வந்து கொண்டே இருந்தது. 96 நிமிடங்களில் பூமியை ஒரு முறை சுற்றிவந்துவிடும் அதன் வேகமும், அது எடுத்து அனுப்பிய படங்களும், சோவியத்தின் உயரத்தை உலகுக்கு உணர்த்தின. 3 மாதங்கள் மட்டுமே அந்த விண்கலம் வானில் சுற்றியது என்றாலும், உலக அரசியலில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகக் கூடுதலானது என்றே கூற வேண்டும்.

அன்று வரை ரகசியமாக வைத்திருந்த, தன் ஏவுகணை, விண்கலத் திட்டங்களை அமெரிக்காவும் வெளியிட்டது. முப்படைகளைத் தாண்டி, நான்காவதாக விண்வெளிப் படை அடித்தளம் கொண்ட காலம் என்று அதனைக் கூறலாம். விண்வெளிப் பந்தயம் (Space race) உலகில் தொடங்கியது. மூன்றாவது உலகப் போர் மூளுமானால், அது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளால் முடிவு செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டது.

போருக்கான முயற்சிகள் ஒருபுறமும், சமாதானத்திற்கான பாவனைகள் மறுபுறமும் நடந்து கொண்டே இருந்தன. மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என அந்நாடு இரண்டாகப் பிரிந்தபின், அந்த நாடுகளுக்கு இடையிலான எல்லைச் சிக்கல் தீராமலே இருந்தது. அது குறித்து குருஷேவ் அடிக்கடி எச்சரித்துக் கொண்டே இருந்தார். அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முன்வந்தது.

அன்றைய அமெரிக்காவின் துணை அதிபர் நிக்சன், 1959 மத்தியில் சோவியத்திற்குச் சென்றார். அம்முயற்சி வெற்றி பெறவில்லை. அமெரிக்காவிற்கு வந்து அதிபர் ஐசனோவருடன் பேச்சு நடத்துமாறு, சோவியத் அதிபர் குருஷேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று, 1959 செப்டம்பர் 15 அன்று, குருஷேவ் வாஷிங்டன் சென்--று சேர்ந்தார். அமெரிக்க மண்ணில் சோவியத் அதிபர் கால் வைத்த அந்த நாள், வரலாற்-றுச் சிறப்புடையதாக அன்று கருதப்பட்டது. நிக்சனால் வரவேற்கப்பட்டு, அமெரிக்காவின் பல மாநிலங்களையும் சுற்றிப் பார்த்த அவர், இறுதியில் கேம்ப் டேவிட் என்னுமிடத்தில் அதிபர் ஐசனோவரைச் சந்தித்து உரையாடினார். கிழக்கு ஜெர்மனியின் எல்லை குறித்துப் பிறகு முடிவு செய்யலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. பயணத்தை முடித்துக் கொண்டு குருஷேவ் நாடு திரும்பிய வேளையில் எல்லாம் நல்லபடியாக நடக்கின்றன என்பது போன்ற எண்ணம் உலகில் ஏற்பட்டது. ஆனால் எதுவுமே நல்லபடியாக நடக்கவில்லை என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளின் நிகழ்வுகள் உணர்த்தின.

1960 ஏப்ரலில், சோவியத் வான்வெளியில், U, 2 என்னும், அமெரிக்காவின் உளவு விமானம் பறப்பதை ரஷ்யர்கள் கண்டறிந்தனர். அதனைக் கண்டித்து மிகக் கடுமையாக சோவியத் குரல் கொடுக்க, மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அதற்கு அமெரிக்கா எதிர்வினை ஆற்றாததால், மே முதல் நாள் அந்த உளவு விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது. அதிலிருந்து பாராசூட்டில் தரையிறங்கிய அதன் ஓட்டுனர் (Pilot) பிரான்சிஸ் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஐசனோவரின் பதவிக்காலம் முடிந்து, அடுத்து நடைபெற்ற தேர்தலில் துணை அதிபர் நிக்சன் தோல்வியடைய, ஜான் கென்னடி வெற்றி பெற்றார். பொலிவும், அழகும் மிக்கவராகவும், இளைஞராகவும் இருந்த கென்னடி உலகிற்குப் புதுவழி காட்டுவார் என்று அனைவரும் நம்பினர், குருஷேவ் உள்பட! அந்த நம்பிக்கையில் மீண்டும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அது தோல்வியடைந்த போது கென்னடி சொன்னார், " இங்கு கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் சோவியத் பேச்சு நடத்தவில்லை. எல்லாவற்றையும் கொடு, எதையும் பெறாதே (‘All give and no take') என்பதாகத்தான் அவர்கள் போக்கு உள்ளது" என்றார். மீண்டும் பகை மூட்டம் தெரிந்தது.

அந்தப் பகை அடுத்து கியூபாவில் மையம் கொண்டது. வழக்கம்போல், கியூபாவை அமெரிக்கா மிரட்ட, சோவியத் வெளிப்படையாகவே கியூபாவிற்குத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அது மட்டுமின்றி, அமெரிக்கக் கடற்கரையிலிருந்து சரியாக 140 கி.மீ தூரத்தில், ஏவுகணை மையம் ஒன்றையும் அமைக்க முன்வந்தது.

ரகசியமாக ஏவுகணைகளை அனுப்பி வைக்கிறேன் என்றார் குருஷேவ். அதற்கு கியூப அதிபர், பிடல் காஸ்ட்ரோ அளித்த விடை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

"எங்கள் தேசம் இறையாண்மை உடையது. எந்த ஓர் ஆயுத இறக்குமதியையும், அமெரிக்கா அறியாமல் ரகசியமாய்ச் செய்ய வேண்டிய தேவை இல்லை. எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவையோ, அதனை நாங்கள் உங்களிடம் வெளிப்படையாகவே வேண்டிப் பெறுவோம்" என்றார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோவின் நேர்மையும், துணிவும் இரு வல்லரசுகளையும் சிந்திக்க வைத்தன. இருவரும் மீண்டும் பேசினர். தேவையற்ற ஒரு போர் தடுக்கப்பட்டது.
1963 நவம்பர் 22 அன்று, அமெரிக்க அதிபர் கென்னடி டெக்ஸாஸ் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட போது, உலக வரலாறு மீண்டும் சில திருப்பங்களைக் கண்டது.

பனிப்போரின் அடுத்த பகுதி மேலும் சூடாக இருந்தது.

(வியாழன்தோறும் சந்திப்போம்)

English summary
The 21th chapter of Subavee's Arinthum Ariyamalum is speaks about the cold war phase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X