For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடிசன் நகரில் பொழிந்த தமிழ் மழை.. திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் குழந்தைகள் விழா!

Google Oneindia Tamil News

எடிசன், நியூஜெர்சி: நியூஜெர்சி மாநிலம் எடிசன் நகரில், ஞாயிறு, டிசம்பர் 10-ஆம் தேதி அன்று, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஜான் ஆடம்ஸ் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளில், 3 வயது முதல் 15 வயது வரையிலான சுமார் 125 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காலை 9 மணி அளவில், கலையரங்கில் குழுமியிருந்த பார்வையாளர்களும் மாணவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்ப்பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளையும், பெற்றோர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் வரவேற்று, நடக்கவிருக்கும் வெவ்வேறு போட்டிகளுக்கான நடுவர்களையும் அரங்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். 3 முதல் 4 வயது வரையிலான மாணவர்கள் மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டனர்.

கலப்பையைத் தோளில் சுமந்த உழவன், சிலம்பும் கையுமாக தலைவிரி கோலத்தில் கண்ணகி, தங்க கிரீடம் அணிந்து கைகளில் வாளும் கேடயமும் ஏந்திய இராஜராஜ சோழன், வீறுநடை போட்டு வீர வசனம் பேசும் அரசி வேலுநாச்சியார், ஹிட்லர் மீசையும் கையில் புத்தகத்துடனும் புரட்சிக் கவி பாரதிதாசன், சமூகப் போராளியும் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் முத்துலட்சமி ரெட்டி போலவும், இன்னபிற ஆளுமைகள் போலவும் வேடம் பூண்டு மழலைகள் மேடையில் பவனி வந்து தக்க உடல்மொழி, முகபாவனையோடு குறுவசனம் பேச, பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

பொருள் விளக்கத்தோடு ஒப்பித்தல்

பொருள் விளக்கத்தோடு ஒப்பித்தல்

5 முதல் 6 வயது வரையிலான மாணவர்கள் ஆத்திச்சூடி ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாணவரும் ஆத்திச்சூடி ககர வருக்கம், சகர வருக்கத்திலுள்ள 23 பாக்களை மனனம் செய்து, கொடுக்கப்பட்ட ஒரு நிமிட நேர அவகாசத்திற்குள் தம்மால் இயன்றவரை பொருள் விளக்கத்தோடு ஒப்பித்தனர். 7 முதல் 8 வயது வரையிலான மாணவர்கள் திருக்குறள் சார்ந்த நீதிக்கதை சொல்லுதல் போட்டியில் கலந்து கொண்டனர். அறத்துப்பால்/பொருட்பால் பிரிவுகளிலிருந்து ஏதேனும் ஒரு குறளை ஒப்பித்து, அதன் பொருள் கூறி, அக்குறளை அடிப்படையாகக் கொண்ட நீதிக்கதையையும் சொன்னார்கள். பிழையின்றி ஒப்பித்தல், சரியாக உச்சரித்தல், சரியான பொருள் விளக்கம் அளித்தல் போன்ற வரைமுறைகளின்படி, நடுவர்கள் வெற்றிப்பெறும் குழந்தைகளைத் தேர்வு செய்தனர்.

சிந்தனையைக் கிளறிய மழலைகள்

சிந்தனையைக் கிளறிய மழலைகள்

மாணவர்கள் தம் மழலைக் குரலில் அறம் பற்றி பேசியது பார்வையாளர்களை உள்ளம் நெகிழச் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சிந்தனையைக் கிளரும் விதமாகவும், உலகின் ஒப்பற்ற நூல்களான ஆத்திச்சூடி, திருக்குறள் ஆகியவற்றின் அரும்பெருமையை உணரச் செய்யும் விதமாகவும் அமைந்திருந்தது. 9 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்குத் திருக்குறள் விளையாட்டு நடைபெற்றது. மேடையில் மாணவர்கள் வரிசையாக நின்று, ஒருவர் பின் ஒருவராக, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 30 குறட்பாக்களிலிருந்து ஒன்றை, அவரவர் முறை வரும்போது ஒப்பிக்க வேண்டும். பிறர் ஒப்பித்த குறளை மீண்டும் ஒப்பித்தால் நீக்கப்படுவர். இவ்விளையாட்டு பார்வையாளர்களைப் பதட்டத்தில் நகம் கடிக்கச்செய்து, இருக்கைகளின் நுனிக்குத் தள்ளியது என்றே சொல்ல வேண்டும். போட்டி முடியும் வரை, மாணவர்களைப் பாராட்ட அவ்வப்போது எழுப்பப்படும் கரவொலியைத் தவிர பார்வையாளர்களிடையே வேறெந்த சலசலப்பும் இல்லை.

உணர்ச்சி பொங்கப் பேசிய மாணவர்கள்

உணர்ச்சி பொங்கப் பேசிய மாணவர்கள்

மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளில், 11 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள், "சமூகத்தில் என்ன மாற்றம் வேண்டும்?", "அன்றைய தலைவர்கள் இன்று இருந்தால்..." ஆகிய தலைப்புகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், "உலக வெப்ப நிலை, ஒரு வெட்க நிலை!", "அழியும் உயிரினங்களின் கூக்குரல்" ஆகிய தலைப்புகளிலும் தலா 3 நிமிடங்களுக்குப் பேசினர். மாணவர்கள் உணர்வு பொங்க மிகுந்த எழுச்சியோடும், பார்வையாளர்களைச் செயலில் ஈடுபட தூண்டும் விதத்திலும் செம்மையாக உரையாற்றினர். போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்குப் பதக்கமும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழும், பணப்பரிசும் அளிக்கப்பட்டன.

பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டி

பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டி

மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு பெற்றபின், பெரியவர்களுக்கான "கேள்வி நேரம்" விளையாட்டும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் அரசர்கள்/தலைவர்கள், தமிழ்நாட்டின் வரலாற்று/பண்பாட்டு அடையாளச் சின்னங்கள், தமிழ்த் திரைப்படங்கள், கலை, இலக்கியம் என பல துறைகளிலிலிருந்து கேள்விகள் கேட்கப்பட, இந்நிகழ்ச்சி சுவையாகவும் அறிவை மேம்படுத்திக்கொள்ளும் விதத்திலும் அமைந்திருந்தது. முதல்வர் சாந்தி தங்கராஜ், துணைமுதல்வர் லட்சுமிகாந்தன் இருவரும் முன்னின்று, பிற ஆசிரியர்கள், பெற்றோர்களின் துணையோடு, அனைத்துக் குழந்தைகள் போட்டிகளையும் நடத்தினர்.

டிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி

டிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி


2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி,
"அகரம் முதலாம் தமிழெனுந் தேன்
அடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,"
என்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டு, புலம்பெயர்ந்து நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை வெற்றிகரமாக பயிற்றுவித்து வருகிறது. தற்போது, 100 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 575 மாணவர்களுக்குத் தமிழைப் பேச, படிக்க, எழுத உதவும் சேவையைச் செய்து வருகிறது. இப்பள்ளியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற இந்திய மொழிகளைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் கற்கிறார்கள், இவ்வாண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிசன் நளபாகம்

எடிசன் நளபாகம்

நிகழ்ச்சியின் இறுதியில், துணைமுதல்வர் லட்சுமிகாந்தன் நன்றியுரையாற்றினார். போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களுக்குச் சிறப்பாக பயிற்சியளித்த பெற்றோர்களையும் பாராட்டினார். கலையரங்கில் ஒலி மற்றும் பிற மின் சாதனங்களையும் நேர்த்தியாக கையாண்டு, நிகழ்ச்சி சீராக நடைபெற உதவிய இளங்கோ சௌந்தர்ராஜனுக்கு நன்றி தெரிவித்தார். நாள் முழுதும் வெவ்வேறு துறைகளில் தத்தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றி போட்டிகளை வெற்றிகரமாக நிகழ்த்த உதவிய அனைத்து தன்னார்வர்லர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்தார். சிற்றுண்டியும், மதிய உணவும், பழச்சாறும் சகாய விலைக்குக் கொடுத்து, நாள் முழுதும் இன்முகத்துடன் உணவு பரிமாறி, எல்லா விதத்திலும் திருப்திகரமாக செயல்பட்ட எடிசன் நளபாகம் உணவக உரிமையாளர்களையும் பாராட்டி பள்ளித் துணைமுதல்வர் நன்றி தெரிவித்தார்.

பொழிந்த தமிழ் மழை

பொழிந்த தமிழ் மழை

தொலைதூரம் பயணம் செய்து, போட்டி நடுவர்களாக பணிபுரிய பிற தமிழ்ப்பள்ளிகளிலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள் - குமாரசாமி தமிழ்ப்பள்ளி, சவுத் ப்ரன்ஸ்விக்கில் இருந்து சுபா செல்லப்பன் , பார்கவி வெங்கடேசன், கபிலன் வெள்ளியகௌண்டர், ஆஷா பொன்னம்பலம், வள்ளலார் தமிழ்ப்பள்ளி, வெஸ்ட் வின்ட்சாரிலிருந்து நித்யா சொக்கலிங்கம், ஹம்சா நாராயணன், சங்கீதா செல்வகுமார், சண்முகம் மஞ்சமுத்து, அருணகிரி சுப்ரமணியன் ஆகியோருக்கு எடிசன் திருவள்ளுவர் பள்ளி முதல்வர் மலர்க்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார். மாலை 5 மணிக்கு போட்டி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. குழந்தைகள் ஆர்வத்துத்தடன் போட்டிகளில் பங்குகொண்டு தமிழில் பேசுவதைக் கேட்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆனந்தமும் பெருமிதமும் கொண்டார்கள் என்றால் மிகையாகாது.

http://www.jerseytamilacademy.org/

English summary
Thiruvalluvar school in Edison, NJ, had conducted a children's festival recently in the town and many children participated the festival and showed their mettle. So Many teachers, parents also attended the same and encouraged the kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X