உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா.... இன்று உலகப் பெண் குழந்தைகள் தினம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகப் பெண் குழந்தைகள் தினம். இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவது பெருமைக்குரிய ஒன்றா? என்ற கேள்வியோடு போராட்டம் நிகழ்த்துகையில் மனதில் தோன்றிய கேள்விகள், அதற்கான விடைகள், அவற்றிற்கு இடையே நிகழ்ந்த விவாதங்கள் எண்ணற்றவை.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் ஐ.நா. சபையின் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக அக்டோபர் 11 ஆம் நாள் 'உலகப் பெண் குழந்தைகள் தினம்' அறிவிக்கப்பட்டது.

வாழ்க்கை என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. அதில் ஆண் ஆளும் சக்தியாகத் தன்னை காலப்போக்கில் மாற்றிக் கொண்டதன் விளைவே இப்படியொரு நாளை அறிவித்து பெண்களை வாழவிடுங்கள் என்று உலகத்தில் உள்ள ஆண்களிடம் போராடவும், விடுதலை தர வேண்டியும் நிற்கும் சூழல் உருவாகி உள்ளது.

World Girl Child Day

வெகுசிலர் காட்டும் அன்பும் அரவணைப்புமே பெண்கள் பல துயர்களுக்கு இடையில் வாழக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இன்று அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் பெண் இருந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் பெண்ணிற்கான கொடுமை நிகழ்த்தப்படுகிறது. பெண் கொடுமை பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஊடகத்திலும் செய்திகள் வெளிவருவதே இல்லை.

பெண்ணிற்கு வாழ்வில் ஏற்படும் முன்னேற்றத்துடன் சேர்ந்து புதிது புதிதாகக் கொடுமைகளின் மாற்றங்களும் கொடூரமாக வளர்ந்து வருகின்றன. பிறப்பு தொடங்கி இறப்பு வரை, குழந்தை முதல் கிழவி வரை பெண்ணாக இந்த மாபெரும் உலகத்தில் வாழ்தல் எளிதான ஒன்று அல்ல. பெண் சிசுக் கொலை என்பதும், கருவிலேயே பெண் என்றால் கருக்கலைப்புச் செய்வதும், அதற்கும் மேலாகப் பெண் குழந்தை பெற்ற தாயைத் தண்டிப்பதும் எனப் பெண்ணிற்கு எதிராக நடக்கும் மனிதமற்ற செயல்களின் பட்டியல் எண்ணிக்கையில் அடங்காது.

இதையும் தாண்டி ஒரு பெண் உயிர் பெற்று வாழும் பொழுது, எதிர்கொள்ளும் கொடுமைகள், தண்டனைகள், அவமதிப்புகள், பாலியல் வன்முறைகள் என ஒவ்வொரு விடியலும், இரவும் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலேயே கழிகிறது. அதற்கெனத் தனிப்பெரும் முயற்சியும், கவனமும் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம், பெண் விடுதலை போன்ற வார்த்தைகள் கேட்பதற்கு ஆறுதலாக இருந்தாலும் ஆபத்திற்கு அவை உதவாது.

சட்டங்கள் மாறினாலும், புதிதாகச் சட்டங்கள் இயற்றினாலும் ஒதுக்கீட்டில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது பெண் வாழ்வு. சிறு வயதில் தொலைக்காட்சியில், "பொண்ணாப் பொறந்ததாலே பல பொறுப்பு வந்தது மேலே" என்று பெண் விடுதலைக்கான செய்திகள் அடங்கிய பாடலை, வண்டி இழுத்துக்கொண்டே ராஜீவ் பாடுவது ஒலிபரப்பாகும்.

டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கம் உலகெங்கும் கேட்கும் நிலையிலும், இப்படியொரு தினத்தைப் பற்றி எழுதும் பொழுது பாரதியின் பாடலைச் சொல்லி சொல்லி உள்ளம் அழுது ஊமையாகிறது.

'உயிரைக் காக்கும்; உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக்கு உயிராய் இன்பமாகிடும்;
உயிரும் இந்தப் பெண்மை இனிதடா;
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே'

மகாகவியின் வாக்குப் பலிக்கட்டும். திக்கெட்டும் பெண்மை ஒளிரட்டும்.

- முனைவர். சித்ரா மகேஷ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
World Girl Child Day observed today, October 11.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற