For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் வீட்டுப் பனைமரம்!

By Staff
Google Oneindia Tamil News

எங்கள்வீட்டுத் திண்ணையொடு சேர்ந்துநிற்கும் பனைமரம் - அது
எத்தனையோ வருடங்கள் பழமையான பனைமரம்!
திங்கள்தொறும் தங்கநாடார் கள்எடுத்த பனைமரம் - நான்
தேன்பதனீர் குடிப்பதற்குச் சண்டைபோட்ட பனைமரம்!

மாலைதோறும் பனம்பழத்தின் மணம்பரப்பும் பனைமரம் - அடை
மழையடித்தும் காற்றடித்தும் சாய்ந்திடாத பனைமரம்!
ஓலைகளின் சலசலப்பால் உறங்கவைத்த பனைமரம் - நான்
ஓய்வெடுத்த திண்ணைக்கும் நிழல்கொடுத்த பனைமரம்!

தெருவோரம் செல்பவர்கள் சாய்ந்துகொள்ளும் பனைமரம் - சில
திருடர்களை இழுத்துவந்து கட்டிவைத்த பனைமரம்!
திருநாளில் ஒளிவிளக்கு தொங்கவிட்ட பனைமரம் - நான்
சிலம்பாட்டம் பயில்வதற்குத் தரைகொடுத்த பனைமரம்!

அதிகாலைக் கடிகாரக் காக்கைகளின் பனைமரம் - என்
அன்னைஎனைக் குளிப்பாட்ட அனுமதித்த பனைமரம்!
குடிகாரக் கிழவர்சிலர் கதையளந்த பனைமரம் - நான்
கோலியாடித் தோற்றபோது ரசித்துநின்ற பனைமரம்!

மலைவேடர் வந்தமர்ந்து மருந்துவிற்ற பனைமரம் - சில
மகுடிவித்தைக் காரருக்கு வாய்ப்புதந்த பனைமரம்!
வலைவீசும் காணியர்கள் மால்முடித்த பனைமரம் - சிறு
வாண்டுகளைப் பாண்டியாட வரவழைத்த பனைமரம்!

கருக்கலிலே கன்றுமாட்டைக் கட்டிப்போட்ட பனைமரம் - அது
கண்ணயர்ந்து தூங்கும்போது காவல்நின்ற பனைமரம்!
மரைக்காயர் மகள்ஒருநாள் மறைந்துநின்ற பனைமரம் - அவள்
மணிவதனம் கண்டுகாதல் மலரவைத்த பனைமரம்!

காடழிப்போர் கோடாரிக்குத் தப்பிவிட்ட பனைமரம் - இது
காலம்வரை தனிமரமாய்க் கனிதரும்எம் பனைமரம்!
கூடுகட்டி முட்டையிடும் குயிலினத்தின் பனைமரம் - இசை
கூடுமட்டும் கூடவிட்டுப் பாடவிடும் பனைமரம்!

முந்தியசீர் தமிழ்க்குடியை முன்னிறுத்தும் பனைமரம் - எம்
மூவேந்தர் மார்புக்கு மாலைதந்த பனைமரம்!
செந்தமிழர்ச் சுவடிகட்கு ஓலைதந்த பனைமரம் - என்
சிந்தனைக்குத் தினம்தோறும் தினவுதரும் பனைமரம்!

ஓங்குதமிழ்ப் புகழுணர்த்தி உயர்ந்துநிற்கும் பனைமரம் -தன்
உச்சிமுதல் அடிவரைக்கும் உரம்பாய்ந்த பனைமரம்!
வான்குறளோன் இலக்கியத்தில் வந்திருக்கும் பனைமரம் - இது
வளையாத செங்கோலை வலியுறுத்தும் பனைமரம்!

எத்தனைநாட் பின்னும்என்றன் எண்ணம்நிறை பனைமரம் - எனக்(கு)
ஏழுபனை ஈழதேசம் நினைவூட்டும் பனைமரம்!
இத்தனைக்குப் பின்னும்என்னை எழுதவைக்கும் பனைமரம் - என்
இனியதமிழ் வாழும்வரை இருக்கும்அந்தப் பனைமரம்!!

- தொ. சூசைமிக்கேல்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. திருக்குறள்
2. ழகரம் பழகு!
3. ரமதான் வாழ்த்து!


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X