• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்செய்வோம்!

By Staff
|

அலைகடலே! ஆழித் தீயே!

அடங்கிவிட்டதா, உனது ஆனைத் தீ?

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

கடற்கரை மணல்வெளி எங்கும் இப்போது

கல்லறைத் தோட்டங்கள்

நிறைவேறிவிட்டதா, உனது நெடுநாட் கனவு?

Wonen crying for victims

பால்கொடுத்த கொங்கைகளும்

பால்குடித்த மழலைகளும்

மால்முடித்த மீனவ மறவர்களும்

மரணத்தை நொடிப்பொழுதில் முத்தமிட வைத்தாய்!

மா ரணத்தை எம் மனத்தில் ஆழப் பதித்தாய்!

தீர்ந்துவிட்டதா, உனது தினவு?

மூச்சடக்கி முத்தெடுத்தவர்தம் மணிமார்பங்கள்

மூச்சு அடங்கிக் கிடக்கும் காட்சி,

எங்கள் மூர்ச்சையைப் பறித்துக் கொள்கிறது..

முடிந்துவிட்டதா, உனது கோரத் தாண்டவம்?

காற்றோடு இசை கலந்து - எம்மைக்

கனிவோடு தீண்டிவந்த நீ,

கூற்றோடு இணைகலந்து

கொலைக் கூத்து நடத்திவிட்டாயே

உன்னை நாங்கள் "அன்னை" என்றல்லவா

அழைத்திருந்தோம்? ஆராதித்திருந்தோம்?

அணைத்திருந்த கைகள் கொண்டு தன் குழந்தையையே

அன்னையொருத்தி தின்னுவது

என்ன தர்மம் அம்மா?

தினந்தோறும் எம்மைத் தாலாட்டிய உனக்குத்

திடீரென்று எப்படியம்மா எங்கள்

செந்நீர் தேவைப்பட்டது?

கலையார்வம் மேலிட,

காலம்காலமாய் எம்மைக் காத்துநின்ற உன்னிடம்

கொலையார்வம் எப்படியம்மா

குடிபுகுந்து கொண்டது?

பாழும் கடலே! பாதகியே!

ஊழிக் காற்றுபோல் ஊரையெல்லாம் மேய்ந்துவிட்டு

ஒன்றும் அறியாள்போல்

ஓசைமட்டும் செய்கின்றாய்

என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு!

முட்டமும் பள்ளமும் மணக்குடியும் குளச்சலும்

முக்குவர் குலம்வாழும் பெருங்குடிகள் அனைத்திலும்

முட்டமுட்டக் கதறல்ஒலி காதைப் பிளக்கிறது

கத்துகடல் காதகியே, கேட்கிறதா உனக்கு?

முன்பொருநாள் முட்டத்தைச்

சொல்லாமலே தாக்கிச் சூறையாடிய சோழன்போல்,

நீயும் இன்று முட்டத்தைத் தாக்கினாய் -- அதன்

உயிர்ப் பரப்பை முற்றிலும் தூக்கினாய்!

சொல்லடி துரோகியே!

கூற்றுவன்தான் உன் துணைவனா? -- அவனும் அந்தச்

சோழனுக்குத் தோழனா?

போர்க்குணம் வாய்ந்த எங்கள் இரத்த நாளங்கள் மீது

உனக்கும் கூடவா பொறாமை வந்துவிட்டது?

புல்லறிவாண்மையிடம் நீ கூடவா

புகலிடம் தேடிக் கொள்கிறாய்?

இரக்கமற்ற அரக்கியே!

எங்களையா நீ பழிவாங்க வேண்டும? - உன்னை

நம்பியன்றோ எங்கள் நங்கூரங்கள் வாழ்ந்தன? -- உன்னைக்

கும்பிட்ட பிறகன்றோ எங்கள் கரங்கள் தூண்டிலைத் தொட்டன?

கும்பி எரிய வைத்துவிட்டாயே

துதிபுரிந்த எம்மவர்க்கே

சதிபுரிந்த சண்டாளீ! - உன்னை

எட்டி உதைப்பதா?

எட்டி நில்! என்பதா?

"செல்லப் பிள்ளை"யென்று நாங்கள்

செல்லமாய் விளிக்கும் திமிங்கலங்களே!

திருக்கை மீன்களே! சிப்பிக்குள் நண்டுகளே!

உல்லாசமாய்ச் சுற்றி உலாப்போகும் சுறாக்களே!

ஒருநாளேனும் கரையொதுங்கி முட்டையிடும் ஆமைகளே!

சற்றே நில்லுங்கள்: சற்றே நில்லுங்கள்:

உங்களைக் கட்டிமேய்க்கும் கடலன்னையிடம் வினவுங்கள்:

அவள் செய்தது சரிதானா, என்று!

இயற்கையின் சீற்றமாம் இது.

எவனுக்கடா தெரியாது, இது?

இயற்கையின் சீற்றத்தைத் தடுத்திட

எங்களால் இயலாதுதான்:

இறைவனே! உன்னாலுமா இயலவில்லை?

ஆண்டாண்டு காலமாய் யாம் நடத்திவந்த

ஆலய வழிபாடுகளுக்கெல்லாம் நீ கற்பித்திருக்கும்

அர்த்தம் இதுதானா?

ஐயகோ!

ஆறுதல் தேடிட ஆண்டவனைக் கூட

அணுகமுடியாத கொடுமையா எமக்கு?

என்செய்வோம்! என்செய்வோம்!!

- தொ. சூசைமிக்கேல்(tsmina2000@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. திருக்குறள்

2. ழகரம் பழகு!

3. ரமதான் வாழ்த்து!

4. எங்கள் வீட்டுப் பனைமரம்!

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X