For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் - பாகம் - 3

By BBC News தமிழ்
|

(இது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' மூலக் கதையின் சுருக்கம்.)

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.

Synopsis of ponniyin selvan- Part 3

ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலின் கதைச் சுருக்கத்தை மூன்று பகுதிகளாக பிபிசி வெளியிடுகிறது. முதல் பகுதியில் முதலிரண்டு பாகங்களின் சுருக்கமும் இரண்டாவது பகுதியில் 3வது, 4வது பாகங்களின் சுருக்கமும் இந்த மூன்றாவது பகுதியில், ஐந்தாவது பாகத்தின் சுருக்கத்தையும் படிக்கலாம்.

இதற்கு முந்தைய இரண்டாவது பகுதியில், ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனைக்கு வந்துவிட்டதையும் அங்கே அனைவரிடமும் குத்தலாகப் பேசிக்கொண்டிருந்தான் என்பதையும் பார்த்தோம். மதுராந்தகனை அழைத்துவர பழுவேட்டரையர் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். அன்று இரவு தன்னை வந்து சந்திக்கும்படி வந்தியத்தேவனிடம் நந்தினி கேட்டுக்கொண்டாள் என்பதோடு கதைச் சுருக்கத்தின் இரண்டாவது பகுதி நிறைவடைந்தது.

இதற்கிடையில் நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அருள்மொழி வர்மனும் தலைமை பிக்குவும் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள். தனக்கு உடல் நலம் சரியாகிவிட்டதால், தான் தஞ்சாவூருக்குப் போய் தனது தந்தை சுந்தரசோழரைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார் அருள்மொழி வர்மர்.

ஆனால், அவர் அங்கு தங்கியிருக்கும் விஷயம் வெளியில் பரவியதால், மக்கள் விஹாரைக்கு முன்பாக வெளியில் குவிந்துவிட்டார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டுமனக் கூச்சலிட்டார்கள். ஆகவே அருள்மொழி வர்மர் அங்கிருந்து சென்றுவிடுவதென்றும், அவர் சென்ற பிறகு யாராவது ஒருவரை உள்ளே அழைத்து வந்து காண்பிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. அந்தத் திட்டப்படி, கூட்டத்தில் இருந்த பூங்குழலியின் அண்ணன் முருகய்யன் உள்ளே அழைத்துவரப்பட்டான்.



அவன் இளவரசரை அங்கிருந்து, சிறிது தூரத்தில் இருந்த ஆனைமங்கலத்துக்கு விஹாரையின் பின்பக்கத்தில் இருந்த படகுத் துறை வழியாக, படகில் அழைத்துச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன், கடுமையான புயல் வீசியதில் சூடாமணி விகாரை நீரில் மூழ்குவதைப் பார்த்த அருள்மொழிவர்மர், திரும்பவும் அங்கே சென்று தலைமை பிக்குவை படகில் மீட்டுக்கொண்டு ஆனைமங்கலம் அரண்மனைக்கு வந்தார்.

அங்கே மழைக்காக பெரிய அளவில் மக்கள் கூட்டமும் ஒதுங்கியிருந்தது. மழை நின்ற பிறகு, ஒரு வியாபாரியின் வேடத்தில் இளவரசரும் முருகய்யனும் வெளியில்புறப்பட்டார்கள். அவர்களை வழியில் பார்த்த முருகய்யனின் மனைவி ராக்கம்மாள், இளவரசரை அடையாளம் கண்டுகொண்டு, கத்தினாள். இதையடுத்து அவர் நாகப்பட்டனம் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஒரு நாள் கழித்தார். பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு யானை மேல் ஏறி தஞ்சாவூருக்குச் சென்றார்.

புயல் அடித்துக்கொண்டிருந்த நாளில்தான் கடம்பூரிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார் பழுவேட்டரையர். தஞ்சாவூருக்குச் சென்று மதுராந்தகனை அழைத்துவரும்படி, நந்தினிதான் அவரை அனுப்பியிருந்தாள். அந்த சமயத்தில் கந்தமாறன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் என மூன்று இளைஞர்களுக்கு மத்தியில் நந்தினியை விட்டுவந்தது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. நந்தினி தொடர்பாக பல சந்தேகங்கள் அவருக்கு தோன்றியபடி இருந்தன. இவையெல்லாம் யோசித்தபடி கொள்ளிடத்தைக் கடப்பதற்கு படகில் பயணித்தார் பழுவேட்டரையர்.

படகு கரையை நெருங்கும் சமயம் அதனருகில் ஒரு மரம் விழுந்ததால், சட்டெனக் கவிழ்ந்தது. படகில் இருந்த மற்ற வீரர்கள் உஷார் நிலையில் இருந்ததால், நீந்திக் கரையேறினர். ஆனால், பழுவேட்டரையர் எதையோ யோசித்தபடி இருந்ததால் உடனடியாக கரையேற முடியவில்லை. ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு மிதந்த அவர், இரவுக்குப் பிறகு ஏதோ ஓர் இடத்தில் கரையேறி, அருகில் இருந்த துர்க்கை கோவிலை அடைந்து அங்கிருந்த பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு களைப்பில் தூங்கிப் போனார்.

நந்தினியை நம்ப வேண்டாமென துர்க்கை சொல்வதைப் போல அவருக்குக் கனவு வந்தது. அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோதும் கோவிலைச் சுற்றி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடம் திருப்புறம்பியம் என்பது அவருக்குப் புரிந்தது. அன்று இரவில் அந்த மண்டபத்தைவிட்டு அவர் வெளியேற நினைத்த போது, யாரோ 'ரவிதாஸா' என்று அழைக்கும் குரல் கேட்டது. பழுவேட்டரையருக்கு நந்தினியைத் தேடிவரும் மந்திரவாதியின் நினைவுவந்தது. உடனே, அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள மண்டபத்தின் முன்பு மயங்கிக் கிடப்பதைப் போல படுத்துக்கொண்டார். வந்தவன் தேவராளன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. கோவிலுக்குள் வந்த தேவராளன், பழுவேட்டரையர் அங்கு கிடப்பதைப் பார்த்து பயந்துபோய், அங்கிருந்து ஓடிவிட்டான்.

பழுவேட்டரையரும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார். முடிவில் பிருதிவீபதியின் பள்ளிப்படை கோவிலை சென்றடைந்தார். அங்கே தேவராளனும் ரவிதாஸனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் சுந்தர சோழனின் இரண்டு மகன்களும் செத்துப் போவார்கள் என்று தேவராளனிடம் சொன்னான் ரவிதாஸன்.

தேவராளனாக இருந்தவன், சில காலத்திற்கு முன்பாக அரண்மனையில் வேலை பார்த்து தன்னால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பரமேஸ்வரன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து பல விஷயங்கள் அவருக்குப் புரியவந்தன. அதாவது, தஞ்சாவூருக்கு இளவரசர் யானை மீது வந்துகொண்டிருப்பதாகவும் வரும் வழியில் பாகனை மாற்றிவிட்டு, அருள்மொழி வர்மனைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். சுந்தர சோழர் உள்ள அரண்மனையின் நிலவறையில் காத்திருக்கும் சோமன் சாம்பவன் வேலை எறிந்து சுந்தர சோழரை கொல்வான் என்றும் கூறினார்கள்.

மேலும், வீரபாண்டியன் இறப்பதற்கு முன்பாக பழுவூர் ராணியைத் தனது பட்ட மகிஷியாக்கிக் கொண்டதையும் பாண்டிய குமாரன் கையிலிருந்து வீரவாளைப் பெற்றுக்கொண்டதையும் ரவிதாஸன் நினைவுகூர்ந்தான்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டு, பழியை வந்தியத்தேவன் மீது போடுவதற்கு நந்தினி திட்டமிட்டிருப்பதையும் விளக்கினான். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட பழுவேட்டரையர், ரவிதாஸனையும் தேவராளனையும் பிடித்து தனது கைகளாலேயே இறுக்கிக் கொல்ல முயன்றார். ஆனால், அவர்கள் அவர் மீது பாழடைந்த மண்டபத்தை தள்ளிவிட்டுவிட்டு, தப்பிச் சென்றார்கள்.

நினைவிழந்து கிடந்த பழுவேட்டரையர் கண்விழித்துப் பார்த்தபோது வானத்தில் தூமகேது, மறைவதைப் பார்த்தார். அன்று திட்டமிடப்பட்டிருக்கும் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கருதினார். ஆகவே தட்டுத்தடுமாறி நடந்து சென்று குடந்தை ஜோதிடர் வீட்டை அடைந்தார். ஜோதிடரின் வீட்டில் குந்தவையும் வானதியும் இருந்தனர்.

தஞ்சைக்கு வரும் அருள்மொழி வர்மனை பழையாறையிலேயே தடுத்து நிறுத்துவதற்காகப் புறப்பட்ட குந்தவையும் வானதியும், ஜோதிடரைச் சந்தித்து ஆலோசனை கேட்க அங்கு வந்திருந்தனர். அவர்களிடம், அன்று நடக்கவிருந்த சதித் திட்டங்களையெல்லாம் விளக்கிவிட்டு, குந்தவை வந்த ரதத்தை எடுத்துக்கொண்டு தான் கடம்பூருக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னார் பழுவேட்டரையர். அங்கே சென்று நந்தினியைக் கொல்லப்போவதாகவும் சொன்னார்.

ஆனால், நந்தினி தங்கள் சகோதரி என்றும் அவளைக் கொல்ல வேண்டாமென்றும் குந்தவை கேட்டுக்கொண்டாள். பிறகு, தான் தஞ்சைக்கே திரும்பி காரியங்களைக் கவனிப்பதாகச் சொன்னாள் குந்தவை. பழுவேட்டரையர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு ஆழ்வார்க்கடியான் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்தான்.

வானதியை அருள்மொழி வர்மனுக்கு திருமணம் செய்துவைப்பதோடு, அவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென வலியுறுத்தியும் பழுவேட்டரையர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியும் தென்திசைத் தளபதி பூதி விக்கிரமகேசரி தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட வந்துகொண்டிருப்பதாக ஆழ்வார்க்கடியான் சொன்னான். மேலும் திருக்கோவலூர் மலையமானும் படையுடன் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.



அந்த நேரத்தில் பூங்குழலியும் அங்கே வந்தாள். தனது அத்தை சுரங்க நிலவறையில் சக்கரவர்த்தியை பாதுகாப்பதற்காக ஒளிந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். அந்த நேரத்தில் அருகில் இருந்த ஆற்றின் வெள்ளம் குடந்தை ஜோதிடரின் குடிசையை நெருங்கவே, எல்லோரும் அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் ஏறிக்கொண்டார்கள். வானதி மட்டும் கீழே சீக்கிக் கொண்டாள். பிறகு, அந்தப் பக்கம் மிதந்துவந்த குடந்தை ஜோதிடரின் கூரை மீது வானதி ஏறிக் கொண்டாள். அவளைக் காப்பாற்ற பூங்குழலி படகில் சென்றாள்.

இதற்கிடையில் இளவரசர் அருள்மொழி வர்மனைக் கொல்ல யானைப் பாகன் மூலம் திட்டமிடப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பாகனை விரட்டிவிட்டு அவரே பாகனைப் போல யானையைச் செலுத்த ஆரம்பித்தார். செல்லும் வழியில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருந்த பூங்குழலியையும் வானதியையும் காப்பாற்றி, நடந்த விஷயங்களையெல்லாம் கேட்டறிந்தார் அருள்மொழி வர்மர்.

அந்த நேரத்தில் கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிஞ்ச கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதையடுத்து தஞ்சைக் கோட்டையின் கதவுகளை மூட சின்னப் பழுவேட்டரையர் உத்தரவிட்டார். அடுத்ததாக என்னசெய்வதென்று கோட்டைக்கு பூதி விக்கிரமகேசரி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, யானை மீது வானதியும் பூங்குழலியும் வந்தனர். யானைப் பாகனாக வந்த அருள்மொழிவர்மனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

தான் சக்ரவர்த்திக்கு குந்தவையிடமிருந்து செய்தி கொண்டுவந்திருப்பதாக வானதி சொன்னாள். அருள்மொழி வர்மனுக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றி தான் சொல்ல முடியாது என்றும் கூறினாள். சக்கரவர்த்தியை சந்திக்க தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாள். இதையடுத்து "நாளை பகல் பொழுதுக்குள் தாங்கள் சக்கரவர்த்தியைத் தரிசிக்க முடியவில்லையென்றால், கோட்டையைத் தகர்ப்போம்" என சின்ன பழுவேட்டரையரிடம் சொல்லுமாறுகூறி வானதியை அனுப்பிவைத்தார் விக்கிரமகேசரி.

வானதி வந்திருக்கும் செய்தி தெரிந்ததும், கோட்டைக் கதவுகளைத் திறந்து யானையை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் சின்னப் பழுவேட்டரையர். பிறகு வானதி, பெரிய பழுவேட்டரையர் குடந்தை ஜோதிடர் வீட்டில் தங்களிடம் சொன்ன தகவல்களை அவரிடம் தெரிவித்தாள். சிறிது நேரத்தில், யானைப் பாகன் வேடத்தில் வந்தது அருள்மொழிவர்மன்தான் என்பதும் சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டருக்குப் புரிந்தது. பிறகு சக்கரவர்த்தியைப் பார்க்க அவர்கள் சென்றனர்.

சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகாமல், வெளியிலேயே நின்றுவிட்ட பூங்குழலி சின்னப் பழுவேட்டரையரிடம், பொக்கிஷ நிலவறையில் யாராவது ஒளிந்துகொண்டிருக்கலாம் என்று கூறினாள். அப்படி யாராவது இருந்தால் தேடிப் பார்க்கலாம் என்று சின்னப் பழுவேட்டரையரும் பூங்குழலியும் சென்றார். அந்த நேரத்தில் சுந்தர சோழர் இருந்த அந்தப்புர அறையில், ஒரு பெண் கத்தும் விபரீதமான சத்தம் கேட்டது. பூங்குழலி அந்தப்புரத்திற்குள் ஓடிப் போய் பார்த்தபோது, சுந்தரசோழர் அருள்மொழி வர்மனின் கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மந்தாகினி தேவி திடீரென அவர்களுக்கு முன்வந்து நின்றாள். சுந்தரசோழரை கொல்ல வீசப்பட்ட வேல், அவள் மீது பாய்ந்தது. சுந்தரசோழரின் மடியில் படுத்தபடி உயிர்நீத்தாள் மந்தாகினி.

கடம்பூர் அரண்மனையில் இருந்த நந்தினி மிகுந்த பரபரப்புடன் இருந்தாள். பெரிய பழுவேட்டரையரின் படகு மூழ்கிய செய்தி தெரிந்தபோதும் கலக்கமடையாமல் இருந்தாள். ஆதித்த கரிகாலன் உன்மத்தம் பிடித்த நிலையில் இருந்தான். நண்பர்கள் யாரையும் நம்பவில்லை. வந்தியத்தேவனை அன்று முழுவதும் தன் முகத்திலேயே விழிக்காதே என்று கூறிவிட்டான்.



இதற்குப் பிறகு வந்தியத்தேவனை சந்தித்த கந்தமாறனின் சகோதரி மணிமேகலை, வந்தியத்தேவன் கடம்பூரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் இல்லாவிட்டால் ஆபத்து ஏற்படுமென்றும் சொன்னாள். ஆனால், அதை அவன் ஏற்கவில்லை. பிறகு, கடம்பூர் மாளிகையின் வேட்டை மண்டபத்திற்குள் யாரோ இருப்பதாகத் தெரிவதாகவும் உள்ளே சென்று பார்க்கலாம் என்றும்கூறி மணிமேகலையும் வந்தியத்தேவனும் உள்ளே சென்றனர்.

அந்த மண்டபத்திற்குள் வந்த ரவிதாஸனும் வேறு சிலரும் சேர்ந்து வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் கட்டிப்போட்டனர். ஆனால், அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டனர். அப்போது அங்கு வந்த நந்தினி, விரைவில் ஆதித்த கரிகாலன் இங்கே வரவிருப்பதாகவும் அதற்குள் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடும்படியும் கூறினாள். வந்தியத்தேவன் நந்தினியிடம், ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் என்று சொன்னான்.

இதற்குள் கந்தமாறனும் ஆதித்த கரிகாலனும் வரும் ஓசை கேட்டது. அவர்கள் வந்ததும் வந்தியத்தேவன் திரைச்சீலைக்குப் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலையும் கந்தமாறனும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். தன்னைக் கொன்றுவிடும்படி கரிகாலன் நந்தினியிடம் சொன்னான். இதையெல்லாம் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு காளாமுக உருவம் கழுத்தை நெறித்தது. அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.

அந்தக் காளாமுகன் கத்தியைத் தூக்கி எறியவும் ஆதித்த கரிகாலன் மாண்டு கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் உடலை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சம்புவரையரும் கந்தமாறனும் வந்தியத்தேவன்தான் கொலைகாரன் எனக் குற்றம்சாட்டினர். கந்தமாறன் அவனைக் கொல்லப்போனபோது, அதனைத் தடுத்த சம்புவரையர் வந்தியத்தேவனை ஒரு கட்டிலின் காலில் கட்டிவைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

எப்படியோ அதிலிருந்து வந்தியத்தேவன் விடுவித்துக்கொண்டபோது, அந்த அறையில் தீ பரவியது. இதையடுத்து ஆதித்த கரிகாலனின் உடலை அங்கிருந்து மீட்ட வந்தியத்தேவன், கோட்டையைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்த மலையமானிடம் அந்த உடலை ஒப்படைத்தான். உடல் தஞ்சைக்குக் கொண்டுபோகப்பட்டது. வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

உண்மையான கொலைகாரர்களைத் தேடிவந்த ஆழ்வார்க்கடியான், நந்தினியும் அவளது கூட்டாளிகளும் பச்சை மலை அடிவாரத்திற்குப் போகும் செய்தி அறிந்து அங்கு புறப்பட்டான். மந்தாகினியின் மரணத்திற்குப் பழிவாங்க ஆழ்வார்க்கடியானுடன் பூங்குழலியும் சேர்ந்துகொண்டாள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது ஒரு குகையில் காளமுகன் தோற்றத்தில் பெரிய பழுவேட்டரையர் இருப்பதைப் பார்த்தார்கள்.

அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. அதாவது, காளாமுகன் தோற்றத்தில் சம்புவரையர் அரண்மனைக்கு வந்த பழுவேட்டரையர், வேட்டை அறையில் ஒளிந்திருந்தபடி நந்தினியைக் கொல்ல விரும்பினார். அவளை நோக்கிக் கத்தியை எறிந்தார். அது ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டது. இதைத் தெரிந்துகொண்ட ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து புறப்பட்டான்.

அந்த நேரத்தில், சின்னப்பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் அங்கே வந்தனர். நந்தினி அங்கிருந்து தப்பிச் சென்றாள்.

தஞ்சாவூரில் ஆதித்த கரிகாலனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, மதுராந்தகன் குறித்த உண்மைத் தகவலை செம்பியன் மாதேவி அவனிடம் தெரிவித்தாள். அதைக் கேட்டு அதிர்ந்துபோனான்.

இதற்கிடையில், குழப்பத்தில் இருந்த குந்தவையை வந்து சந்தித்த மணிமேகலை, தான்தான் ஆதித்த கரிகாலனைக் கொன்றவள் என்றாள். ஆதித்த கரிகாலன் குந்தவைக்கு எழுதிய ஒலை ஒன்றையும் கொடுத்தாள். அதில், ஆதித்த கரிகாலன் "வந்தியத்தேவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நன்றாகப் பாதுகாத்தான். கடம்பூரில் தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அது என் விதிதான்" என்று எழுதியிருந்தான்.

அங்கு வந்த அருள்மொழி வர்மன் குந்தவையுடன் பேசியபோது, நந்தினியும் மதுராந்தகனும் மந்தாகினியின் பிள்ளைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் சுந்தரசோழனின் குழந்தைகள் இல்லை என்றும் தெரிந்தது. இதனால், மதுராந்தகனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கக்கூடாது என்றாள் குந்தவை. இதற்கிடையில், பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை விடுவிக்க புறப்பட்ட அருள்மொழி வர்மனைத் தடுத்து நிறுத்தினார்கள் மலையமானும் பெரிய வேளாரும். இதற்கிடையில், சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைத் தளபதி பதவி பறிக்கப்பட்டது. பெரிய வேளாரிடம் அந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டது.

பிறகு எல்லோரும் பாதாளச் சிறையில் போய் வந்தியத்தேவனைச் சந்தித்து, ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால், அங்கே போனபோது வந்தியத்தேவனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பைத்தியக்காரன் ஒருவனும் தப்பித்துப் போயிருந்தார்கள். அவர்களுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணி அங்கே கட்டப்பட்டிருந்தான். அவனை விடுவித்தார்கள்.

சிறையிலிருந்து தப்பிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனும் சேந்தன் அமுதனின் வீட்டிற்குப் போனார்கள். அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த பினாகபாணி, சேந்தன் அமுதனை கொல்ல நினைத்து அவன் மீது வேலை எறிய முயன்றான். ஆனால், அதை வந்தியத்தேவன் தடுக்கவே, அவனைக் குத்திவிட்டு ஓடிவிட்டான் பினாகபாணி. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் வந்தியத்தேவனை குடிசைக்குள் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.

தப்பிச்சென்ற வந்தியத்தேவனைப் பிடிக்க கந்தமாறனும் பினாகபாணியும் சில வீரர்களும் சென்றார்கள். அவர்கள் ஒரு ஆற்றை மூங்கில் பாலத்தின் மூலம் கடக்க முயன்றபோது, கயிற்றை அவிழ்த்துவிட்டான் ஒளிந்திருந்த பைத்தியக்காரன். அனைவரும் ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் விழுந்த பினாகபாணியை கருத்திருமன் கத்தியால் குத்தக்கொன்றான்.

பூங்குழலியின் குடிசைக்குச் சென்ற ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன் மதுராந்தகனின் உடைகளை அணிந்துகொண்டு அவனைப்போல நடிக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படுமென்றும் தெரிவித்தான். முதலில் மறுத்த சேந்தன் அமுதன், பிறகு அதற்கு ஒப்புக்கொண்டான். யானை மீது அமர்ந்து சேந்தன் அமுதனும் சிவிகைக்குள் வந்தியத்தேவனும் இருந்தபடி, அநிருத்தரின் மாளிகையை சென்று அடைந்தார்கள்.

இதற்கிடையில் சுந்தர சோழர் சின்னப் பழுவேட்டரையருக்கு மீண்டும் கோட்டைத் தளபதி பதவியைத் தர உத்தரவிட்டார்.

இதற்குப் பிறகு சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என்றுகூறி சக்கரவர்த்தி முன்பு நிறுத்தினார்கள். தான் வளர்த்த மகன் உண்மையில் அரச குடும்பத்தவன் இல்லை என்பதால்தான் அவனுக்கு பட்டம் கட்டுவதை எதிர்த்ததாக செம்பியன் மாதேவி தெரிவித்தார்.

அரண்மனையில் சிகிச்சையில் இருந்த வந்தியத்தேவனை அருள்மொழி வர்மன் சந்தித்தார். அவரிடம் நடந்ததையெல்லாம் கூறிய வந்தியத்தேவன், காளாமுகர் உருவத்தில் வந்தது பெரிய பழுவேட்டரையர்தான் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகக் கூறினான்.

இதற்குப் பிறகு சுந்தரசோழர் மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் பல விஷயங்களை விளக்கினார். காளாமுக வேஷம் போட்டு நந்தினியின் அறைக்குச் சென்றதாகவும் நந்தினி மீது வீசிய கத்தி ஆதித்தன் மேல் பட்டு அவன் இறந்துவிட்டதாகவும் அதனால் ஆதித்தன் கொலைக்கு தானே காரணம் என்று சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக்கொள்ளப்போவதாகச் சொன்னார். அதை அருள்மொழிவர்மன் தடுத்தார்.

அப்போது ஆதித்தனைக் கொன்ற கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டார் பெரிய பழுவேட்டரையர். சாவதற்கு முன்பாக, அருள்மொழிவர்மருக்கு முடிசூட்ட வேண்டுமெனக் கூறிவிட்டு இறந்தார் பழுவேட்டரையர்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு வந்தியத்தேவன், கந்தமாறன், பார்த்திபேந்திரன் ஆகியோர் நண்பர்களானார்கள். பார்த்திபேந்திரனுக்கு வடதிசை மாதண்ட நாயகர் பதவி அளிக்கப்பட்டது. தைமாதம் பிறந்ததும் அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடாகியிருந்தது. புதிய மதுராந்தகனான சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் எளிய முறையில் திருமணமும் நடந்து முடிந்தது.

முடிசூட்டும் தினத்தன்று, தன் தலையில் சூட்டவிருந்த மகுடத்தை மதுராந்தகன் தலையில் சூட்டினார் அருள்மொழிவர்மர். இதையடுத்து உத்தமசோழன் என்ற பெயரில் மன்னனானான் சேந்தன் அமுதன்.

செம்பியன் மாதேவி வளர்த்த பழைய மதுராந்தகன், "அமரபுஜங்கள் நெடுஞ்செழியன்" என்ற பெயரில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு சேர்ந்து செயல்பட்டான். அருள்மொழி வர்மனுக்கும் வானதிக்கும் திருமணம் நடைபெற்றது.

இதற்குப் பிறகு, உடல்நலம் குன்றியிருந்த மணிமேகலையை சென்று வந்தியத்தேவன் பார்த்தான். அவனுடைய மடியிலேயே உயிர் துறந்தாள் மணிமேகலை.

பொன்னியின் செல்வன் கதை இதோடு நிறைவடைந்தது.

இதற்குப் பிறகு நாவல் தொடர்பான சில சந்தேகங்களுக்கு கல்கி விளக்கமளித்திருந்தார்.

1. குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், "இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

2. உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், அருள்மொவி வர்மர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜ ராஜ சோழன்' என்ற பட்டத்துடன் சோழ நாட்டை ஆள்கிறார்.

3. பழைய மதுராந்தகன் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். ராஜராஜ சோழன் பதவியேற்றதும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார்.

4. திருப்புறம்பயம் காட்டில் முடிசூட்டப்பட்ட இளம் பாண்டியனும் பிற்காலத்தில் ராஜேந்திர சோழனால் போரில் முறியடிக்கப் படுகிறான்.

5. வானதியும் அருள்மொழி வர்மனும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த மகனே ராஜேந்திரச் சோழன் என்ற பெயரில் புகழ்பெறுகிறான்.

6. சுந்தர சோழர் காஞ்சிபுரம் பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்' என்று பெயர் பெறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Story of ponniyin selvan: What is the story of ponniyin selvan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X