• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோளிப்பள்ளியார்

By Staff
|

கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை

- ச.மாடசாமி

Marriageகுடும்பமும் திருமணமும்

""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய்எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட்கருத்து.

"வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது.

அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்துகிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள்பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்லாம், அந்தப்பிடிமண்ணில் இருந்து பழைய முனியப்பசாமிகளும், கருப்பசாமிகளும்முளைக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக வயமாக்கலும், பண்பாட்டு வயமாக்கலும் (enculturaration) குடும்பத்திலிருந்து தான் தொடங்குகின்றன (2). தொடக்கம்மிக வலுவாக இருக்கிறது.

தொடர்ந்து நிலைத்திருப்பது, உலகளாவி இருப்பது என்ற அம்சங்களில் குடும்பத்துக்கு இணையான இன்னொரு அமைப்பைக்காணமுடியாது. ஆனாலும் உலகெங்கிலும் இந்த அமைப்பு ஒரே வடிவத்தில் இல்லை. குடும்பத்தின் வடிவம் மிக இறுக்கமாகஇருப்பதாக கருதப்படும் இந்தியாவிலேயே ஏராளமான நெகிழ்ந்த வடிவங்களைச் சமூகவியலாளர் கண்டறிந்திருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 1999இல் ஒரிசாவில் பெய்த கடும் மழையும், அதன் விளைவான பெருவெள்ளமும் குடும்பங்களைச்சிதறடித்தன. உயிர்ப்போராட்டத்தில் புதிய பிணைப்புகள் உண்டாயின. சம்பிரதாயமான பழைய துணைகளைக் கைவிட்டு,நம்பகமான புதிய துணைகளைக் கண்டறிந்தவர்கள் பலர்.

வெள்ளம் வடிந்த பின், நூற்றுக்கணக்கில் புதிய கணவன்-மனைவி உறவுகளும், புதிய குடும்பங்களும் ஏற்பட்டன. "" ஒரேகூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு என்று குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.

"குடும்பம் வழங்கும் கூரை குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் குடும்பம் கூரையோடு மட்டும் இல்லை. மறித்துஎழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும் தான் அது இருக்கிறது.

குடும்ப அமைப்பின் அடிப்படையாக திருமணம் திகழ்கிறது.வரன்முறைப்படுத்தப்பட்ட பாலியல் ஒழுக்கத்தைத் திருமணம்உறுதிப்படுத்துகிறது. தன் மரபு தொடரவேண்டும் (inheritance) என்ற அடிப்படை விருப்பத்தை பூர்த்தி செய்கிறது.

திருமணத்தில் மேற்கொள்ளப் பெறும் மணத்துணைப் பரிமாற்றம் பல்வேறு சமூக விதிகளையும், தடைகளையும் உருவாக்கி அதன்எதிர்வினையாக ஒத்துப்போதல், முரண்படுதல், மீறல், உடைத்தெறிதல் என்று மனித ஆளுமைகளில் புதுப்புதுப்பரிணாமங்களைக் கண்டிருக்கிறது. இந்தப் பரிமாணங்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்க் கலை இலக்கியங்களின்கருப்பொருள் ஆக இருந்து வந்திருக்கின்றன.

"கொடுப்பக் கொள்ளும் பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமாகவே தென்னிந்தியாவில் திருமணங்கள் காலம் காலமாகவேநடைபெற்று வந்திருப்பதாகச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்(4). தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞர்ஒருவரும் இந்த முடிவுக்கே வருகின்றார்(5).

காதல் திருமணங்கள் நடைபெறவில்லை என்பது இதன் பொருளன்று. "கொடுப்போர் இன்றியும் திருமணம் நிகழும் என்பதைதொல்காப்பியமே உறுதி செய்கிறது. "ஏற்பாட்டுத் திருமணங்களே பெரும்பான்மையானவை என்பதே ஆய்வாளர்கள்வெளிப்படுத்தும் கருத்து. "தாய்மாமன் என்ற உறவு, தமிழ்நாட்டில் திருமண உறவுகளிலும், நிகழ்வுகளிலும் பெற்றிருக்கின்றஇடத்தை அறியாதார் யார்?

Marriage"கொடுப்பது "எடுப்பது என்ற சொற்கள், எந்த விளக்கமும் தேவைப்படாதபடி தமிழ்ச்சூழலில் திருமணத்தை நினைவுக்குகொண்டு வருகின்றன. ""நினக்கியான் கொடுப்பக் கொண்மதி (புறநானூறு 200) என்று கபிலர் விச்சிக்கோவிடம் பாரிமகளைக்கொடுப்பதற்கு விண்ணப்பிக்கிறார்.

""பணக்காரக் கப்பலுன்னு பாத்துக் கொடுத்தீகளே, இது பாழடைஞ்ச கப்பலுன்னு பாத்தவுக சொல்லலையா ! எனவும், ""தேளுக்குரெண்டு கண்ணு; தெய்வங்கொடுத்த கண்ணு; தேளடையும் வாசலிலே என்னை தெரிஞ்சிருந்தும் கொடுத்திட்டீகளே எனவும்பெற்றோரிடம் பெண் விசும்பும் நாட்டுப்புறப் பாடல்களில் திருமணம் என்ற வார்த்தையில்லாதபோதும், கொடுத்தீகளே என்றவார்த்தையே திருமணத்தை மட்டுமன்றி, திருமணத்தின் வேதனையையும் உணர்த்துகிறது.

குடும்பம், திருமணம் என்ற அமைப்புகளில் பெண்ணுக்குரிய பாரபட்சமான இடம், உறுத்தும் பண்பாட்டுப் பிரச்சினையாக இன்றுமுன்னிற்கிறது.பிள்ளை பெற்றுத் தருவதை பெண்ணின் முதல் கடமையாக (ஈன்று புறத்தருதல் என்தலைக் கடனே) குடும்பம்வகுத்தது. இதன் தொடர்ச்சியாக ஆணுக்குப் பலதாரமண அங்கீகாரம்! உலகளவில் 554 சமூகங்களில் நடந்த ஆய்வில் 415சமூகங்களில் இன்றும் பலமனைவி முறை இருப்பது கண்டயறியப்பட்டுள்ளது (6). முதலாவது தாரம், ரெண்டாவது பாரம்,மூணாவது வாரம் (வாரம்-வேசை ) எனத் தமிழ் மக்கள் பரிமாறிக்கொள்ளும் அனுபவ ஞானம்,தமிழ்மண்ணில் நடைமுறையில்இருந்த பலதார மணத்தையும்,பலதாரமணவாளர்களின் மனவேக்காடுகளையும் வெளிப்படுத்துகிறது.

திருமணமும் சடங்கும்

சடங்குகளின் தன்மையை ஆராயவிரும்புவோர், இனக்குழுச் சமூகத்தில்தான் சடங்குகளின் மூலவேரைத் தேடுகின்றனர்.ஆய்வாளர்களின் கருத்துப்படி, இனக்குழுச் சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன.அச்சடங்குகள் இனக்குழுச் சமுதாயத்தை இயக்கின. இணைத்தன. அச்சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதிசெய்தன(7).

பலிஇடுதல், கூடிஉண்ணுதல் போன்ற சில காரியங்கள் இனக்குழுச் சடங்குகளில் தவறாமல் இடம் பெற்றிருந்தன. "சமூகஒருங்கிணைப்பு இனக்குழுச் சடங்குகளின் அடிநாதமாக இருந்தது. இனக்குழுச் சடங்குகளில் பெண்கள் விலக்கப்பட்டவர்களாகஇல்லை. இறைவழிபாட்டுச் சடங்கைக் கூட பெண்களே நடத்தி வைத்தமைக்குச் சங்கப்பாடல்களில் உதாரணங்கள் உண்டு. (எ.டு.திருமுருகாற்றுப்படையில் குறத்தி செய்யும் செவ்வேள் வழிபாடு).

ஒரு பாதிப்பு ஏற்படும்போதுதான் ஒரு சமூகத்தின் தோற்றமும் தொல்சமூகத்தில் நிகழ்கின்றது. "பொய்யும் வழுவும்தோன்றியமையால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்.

"நாடறி நன்மணம் (குறிஞ்சிப்பாட்டு, 232) இதற்கான தீர்வு. பெண்களுக்கும் அது பாதுகாப்பு. பாதுகாப்புக்கு வந்த சடங்குகள்நுகத்தடிகளாகி நகர்வுகளைத் தடுப்பது இயல்பான அடுத்த கட்டம். மோட்டுக் காமணமும், தட்டுக்காமணமும் (காவணம்-பந்தல்)போட்டு வீட்டுமுற்றத்தில் நடந்த எளிய திருமணங்கள் இன்று திருமண மண்டபங்களில் நடக்கும் மாற்றங்கள் குறித்துதெரிவிக்கிறார் நாஞ்சில் நாடன்(8).

வீட்டுக்குள் திருமணம் நடப்பதுதானே ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழகத்தில் இருந்த வழக்கம். அது எப்படி நடந்தது?திருநெல்வேலி மாவட்டக் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மணமகளைக் கண்ணைப் பொத்தித் திருமண மேடைக்குஅழைத்து வருவது வழக்கமாம்(9). காரணம் வெளிப்படை. நாற்பது வயதுக்காரனுக்கு 15 வயதுப் பெண்ணைஇரண்டாந்தாரமாகக் கட்டி வைப்பார்கள். "தலைநரைச்ச கிழவனுக்கு தாலிநான் கட்டமாட்டேன் என்று பெண் அடம்பிடித்துவிடக்கூடாது என்பதற்காகத் தாலி கட்டும் வரை கண்களைப் பொத்தி வைக்கிறார்கள்.

விருந்து,ஆடம்பரம் ஏதுமின்றி கடுங்காப்பியோடு இரவில் நடந்து முடிந்த திருமணங்களும் நம் கிராமங்களில் உண்டு. அந்ததிருமணங்களில் இடம்பெற்ற வேறு பொருத்தமின்மைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எளிமை மட்டும் ஒரு திருமணத்தின்பெருமையாகுமா ? பெண்ணின் சம்மதமும், பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படுதலும் எளிமையை விட இன்றியமையாததிருமணத் தகுதிகள். உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்ரகளும் சாட்சியாகக் கூடிய பொது இடங்களுக்கு திருமணம்இடம்பெயர்வது "கொண்டவனக் காங்கையிலே கொடலப் புரட்டுதடி என்று பெண் விடும் பெருமூச்சுக்கு ஒரு சின்னத் தீர்வு தான்.

ஜோடிப்பொருத்தம், வயதுப்பொருத்தம் பார்க்கும் பொதுசமூகத்தின் பார்வை மணமக்கள் மேல் விழுவதில் கொஞ்சம் சாதகமானவிஷயமும் இருக்கிறது. மேலைநாட்டில், மிகவும் தனிப்பட்ட காரியமாக, எளிமையாக நடக்கும் திருமணங்களை இங்குபொருத்திப் பார்ப்பது பயனளிக்காது. சாதி, சோதிடம், பெற்றோர் தலையீடுகளின்றி அவரவர் தங்களுக்குரிய மணத்துணையைத்தேர்வு செய்துகொள்ளும் திருமணங்கள் அவை. இங்கே மணமக்களை பிறர்தான் பொருத்துகிறார்கள். இந்தப் பொருத்தங்கள்சமூகத்தின் பொதுப்பார்வைக்குப் போவது தேவை தான்.

"கண்ணைக் கட்டித்திருமணம் என்ற கலாச்சார இழிவில் இருந்து வெளியே வந்தால், சாரட்டில் ஊர்வலம் என்ற ஆடம்பரத்தைநோக்கிச் சடங்கு நகர்கிறது. என்ன செய்ய ! சமூக வாழ்க்கை இங்கு இரு பெருச்சாளிகளுக்கிடையே வைத்த சிறிய ரொட்டித்துண்டுபோல இருக்கிறது. கலாச்சாரமும் பொருளாதாரமும் வாழ்வை மாறி மாறிச் சிதைக்கின்றன. ""கைத்தலத்துள்ள மாடு அழியக்கண்ணாலங்கள் (மாடு-செல்வம் ) செய்யும் வழக்கத்தைப் பெரியாழ்வார் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இக்காலக்கவிஞர்களிடம் வருத்தம், கோபமாக மாறி நிற்கிறது.

கல்யாண மண்டபங்களும்

சட்ட சபைகளும்

இந்த நாட்டின்

அர்த்தம் இழந்த ஆடம்பரங்கள் !

சடங்குகள்

ஆடைகள் என்றுதான்

Marriageஅறிமுகமாயின

வெகுவிரைவில்

ஆடைகள்

ரத்தங்குடிக்கக் கற்றுக் கொண்டன (10).

விமர்சனத்துக்குரியவையாக இருந்தபோதும், சடங்குகள் புதுப்புது ரூபம் எடுத்துத் தொடர்ந்து நிலைப்பதன் காரணம் கூட்டுவாழ்க்கையை அவை உறுதிப்படுத்துவதாலேயே! உறவினருடன் கூடி விருந்துண்டு மகிழ்தல், வாழ்வின் மறக்க முடியாததருணங்களில் ஒன்றாகும். "தன்னமர் ஆயமொடு நன்மணம் (ஐங்குறுநூறு, 379 ), "தமர்மணன் அயரவும் போன்ற பாடலடிகள்உறவினர் சூழ நடப்பது திருமணத்தின் முதல் மகிழ்ச்சியாக கருதப்பட்டமையைக் காட்டுகின்றன.

திருமணச் சடங்கின் இரண்டாவது இயல்பு, அது பெரிதும் பெண் சார்ந்ததாக இருப்பது- குறிப்பாகப் பெண்ணின் உடல் சார்ந்ததாகஇருப்பது. பெண்கள் உதயணனுடைய கையைப் பற்றி வாசவதத்தையின் உச்சிமுதல் பாதம் வரை தடவச் செய்யும்திருமணச்சடங்கு பற்றி பெருங்கதை கூறுகிறது.

திருமணச் சடங்கின் அலங்காரப் பொருளாகப் பெண் இருப்பது மட்டுமன்றி, திருமணச்சடங்குகள் ஒவ்வொன்றையும் நடத்துகிறஉரிமையையும் பெண்களே பெற்றிருந்தனர். ஒரு காலத்தில் பெண்கள் விரும்பி ஏற்ற சடங்குகளாக இவை இருந்திருக்கலாம்.இன்றும் கூட இந்த விருப்பம் குறைந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. இருப்பினும் "காது குத்துதல், மாராப்பு போடுதல்,பூப்புச்சடங்கு, வளைகாப்பு, சீமந்தம் போன்ற சடங்குகள் பெண்ணின் உடலை அவளுக்குரியதாக உணரவிடாது, பயன்பாட்டுத்தன்மையதாக மாற்றுவதாக (11) விழிப்புணர்வு பெற்ற பெண்கள் உணரும் போக்கும் தொடங்கிவிட்டது.

உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தை ஒருங்கிணைக்கவும் திருமணம், இறப்பு தொடர்பான சடங்குகள்பங்காற்றியுள்ளன. பெருங்கதை நூலில் உதயணன்- வாசவதத்தை திருமணம் நடந்து முடிந்த ஆறாம் மாதத்தில் மீண்டும்பந்தலிட்டு மணமக்களை மணவறையில் அமரச்செய்து அவர்களுக்கு உணவூட்டிய பின்னர், நாவிதர் மணமகனின் முகமயிர்களைந்ததாகக் கூறப்படுகிறது.

இன்றும்கூட, ஆயரவைசியர் திருமணங்களில், மணமகன் மணவறையில் அமரும்முன் நாவிதரைக் கொண்டு மழித்தல் சடங்குநடைபெறுவதை பேரா. பாமணி சுட்டிக் காட்டுகிறார்(12). அது மட்டுமின்றி, திருமணத்திற்குமுன் குயவர் வீட்டிற்குச் சென்றுஅவருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் ஆயிரவைசியத் திருமணங்களில் இருப்பதை பாமணி எடுத்துக்காட்டியுள்ளார். பலசமூகத்தாரின் திருமணங்களில் மணப்பந்தல் துணி அலங்காரம் செய்யும் உரிமை இன்றுவரை வண்ணார் சமூகத்தார்க்கேதரப்பட்டுள்ளது.

இத்தகைய சமூக ஒருங்கிணைப்பின் மறுதலையாக, "விலக்குதலும் திருமணச் சடங்குகளில் ஒரு பகுதியாக இருக்கிறது.மணச்சடங்கில் பங்கேற்கத் தகுதியான பெண்களை, "முதுசெம்பெண்டிர் என்றும் "புதல்வன் பயந்த மகளிர் என்றும் அகநானூற்றுப்பாடல் (பாடல் 86 ) குறிப்பிடுகிறது.

"முதுசெம்பெண்டிர் என்பதை மங்கல நாண் உடைய பேரிளம் பெண்டிர் எனவும் "புதல்வன் பயந்த மகளிர் என்பதை மக்களைப்பெற்ற மங்கல மகளிர் எனவும் ஆய்வாளர்கள் பொருள் விரித்தனர்(13). புதல்வன் பயந்த என்பது ஆண்மகனைப் பெற்றபெண்களைச் சிறப்பாகச் சுட்டுமா ? என்பதும் ஆய்வுக்குரியது. நிற்க. நாம் கவனிக்க வேண்டியது, கணவனை இழந்தகைம்பெண்களும், குழைந்தைப்பேறு பெறாத பெண்களும் திருமணச் சடங்குகளில் இருந்து விலக்கப்பட்ட நிலையையே!

இனக்குழு மக்களின் இன்றைய திருமணச் சடங்குகளை ஆராய்வோர், தரும் தகவல்களும் இங்கு குறிக்கத்தக்கன. பெண்கேட்பதில் இருக்கும் நாகரிகம் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. பெண் வேண்டும் என்று கேட்காமல், "வாழை மரம் வேண்டும்என்று பெண் கேட்டு வரும் மரபு இருளப்பர் சமூகத்தில் இருப்பதாகப் பெரியாழ்வார் கூறுகிறார்.

திருமணத்துக்கு முன் குறைந்தது ஆறு மாதமாவது பெண் வீட்டில் தங்கி அங்கு பணிகள் செய்து பெண்ணை மணம்புரியும்சேவைத்திருமணம் பற்றிச் சமூகவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். "எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவள்கிடைக்கமாட்டாள். அவள் தந்தையுடன் உப்பங்கழிகளில் உழன்று, புணையேறி, மீன்பிடித்துத் தந்து, அவன் அன்பைப் பெற்றால்அவன் மகளைப் பெறுவது சாத்தியமாகலாம் (அகநானூறு 280 ) என்று சிந்திக்கும் சங்கத்தலைவனைக் காண்கையில்,பழங்காலத்திலேயே இது வழக்கிலிருந்த முறை என அறியலாம். குக்கி, பெய்கர், கோண்டு, இருளர் போன்ற பழங்குடிகள்மத்தியில் இன்றும் இந்த நடைமுறை நீடிக்கிறது.

Marriageபெண்வீட்டாரின் அன்பைப்பெற பெண்வீட்டில் தங்கி உழைக்கும் ஆடவனை இருளர்கள் "மென மாப்பிள்ளை எனஅழைக்கிறார்களாம்(15). ஆண் என்ற அகந்தையின் முதுகலைப்பட்டமாக "மணமகன் அகந்தை சமூகத்தில் உள்ளது. "மெனமாப்பிள்ளைகள் இந்த அகந்தையைக் கைவிட்டவர்கள்.

சடங்குப் பொருள்கள் குறித்தும் ஆய்வாளர் உணர்த்தும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. தானியங்கள், பூக்கள்,பழங்கள்,வெற்றிலை, உப்பு, நீர் போன்றவை திருமணச்சடங்குகளில் இன்றுவரை இடம்பெற்றிருப்பவை. நிச்சய தாம்பூலத்தின்முதல்கட்டமாக, இருதரப்பாரும் தண்ணீர்ச் செம்புகளை மாற்றிக்கொள்வது பல சமூகங்களில் காணப்படும் சடங்காகும்.

"மண்ணையும் நீரையும் கொண்டாடுவது இந்தியாவின் பூர்வீகப்பண்பாடாகவும், வானத்தையும் நெருப்பையும் கொண்டாடுவதுஆரியப்பண்பாடாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்(16).

சடங்குகளில் இடம்பெறும் பொருள்கள் குறித்தும் பல்வேறு யூகங்கள் தோன்றியிருக்கின்றன. இந்தியத் திருமணங்களில் உப்புதவறாமல் இடம்பெறுகிறது. திருமணவீட்டில் உப்பைக் குவித்து அதன் மீது எழுத்தாணியை அல்லது ஒரு இரும்பாணியைக் குத்திவைக்கும் (17) வழக்கம் தமிழகத்தில் சில உயர்சாதி சமூகங்களில் நிலை பெற்றிருக்கிறது.

தங்களின் பூர்விக உப்பு வாணிகம், கல்வித்தேடல் ஆகியவற்றின் அடையாளங்கள் உப்பும் எழுத்தாணியும் என அச்சமூகத்தின்பெரியவர்கள் சிலர் கருதுகின்றனர். திருமண உப்பு குறித்து வேறு விதமான கருத்தும் உண்டு. ஆலன்டண்டிஸ், ஏர்னஸ் ஜோன்ஸ்போன்றோர் உப்பு ஆண் விந்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர்(18).

உப்பு, இன உற்பத்தி அடையாளமாகத் திருமண வீடுகளில் இடம்பெறுகிறது என்பது அவர்கள் கருத்து. விஷமுறிவுக்காணிக்கையாக கோவில்களில் உப்பு செலுத்தப்படுவதும் கூட இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. கேரளத்தில் உள்ள (விசாரி) பகவதிஅம்மன் கோவிலில் கோவிலில் வழிபட வரும் வேடர்களுக்குப் பிரசாதமாக உப்பு அளிக்கப்படுவதை பி.எல். சாமிதெரிவிக்கிறார்(19).

உப்பு ஒரு தட்டிலும், சீனி ஒரு தட்டிலும் திருமண வீடுகளில் இடம்பெறுவதன் காரணம் குறித்து இக்கட்டுரையாளர், ஒருபெரியவரை வினவியபோது அவர் சொன்னார். "இது தெரியாதா ? உப்பும் சீனியும் எத்தனை வருஷம் ஆனாலும்கெட்டுப்போகாது. அதனால் தான் !பல சமூகத்தினரும், பல காரணங்களுக்காகச் சடங்குகளில் எடுத்த பொருள்கள் குறித்து ஒற்றைமுடிவை வழங்க முடியாது என்று தெரிகிறது.

சடங்குகளில் மாற்றம் உண்டாவது இயல்பு. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமூகத்தில் திருமணம் நடந்த எட்டாவது நாள்கடைப்பிடிக்கப்பட்ட "தாலி பெருக்கிப்போடுதல் என்ற சடங்கும், அந்தச் சடங்கின்போது குடிப்பதற்கு வழங்கப்பட்ட"திருமாங்கல்யக்காடியும் காணாமல் போனதாக நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்(20).

சில இழிவான சடங்குகளை அகற்ற இயக்கங்களும், போராட்டங்களும் தேவைப்பட்டன. கேரளத்தில் நம்பூதிரி பிராமணர்கள்நாயர் குடும்பப் பெண்களுடன் (நாயர் ஆண்களின் எதிர்ப்பின்றி) கட்டுப்பாடற்ற உறவு வைத்திருந்த "சம்பந்த மணமுறை (21),விவசாயம் செழித்திருந்த தமிழகத்தின் சில பகுதிகளில், பண்ணையில் வேலை பார்க்கும் தலித் இளைஞன் திருமணத்தன்று தன்புதுமனைவியைக் கன்னிமை கழிக்கப் பண்ணையாரிடம் அனுப்பும் "சாணியெடுத்தல்(22) சடங்கு ஆகியவை இயக்கங்கள்எடுத்த போராட்டங்கள் மூலம் ஒழிக்கப்பட்டவையாகும்.

பணப்பரிமாற்றங்களுக்குச் சமூகம் நன்கு பழகிய பிறகு, தமிழர் திருமணங்களில் இடம்பெற்றிருந்த சம்பிரதாயச் சடங்குகள்எல்லாம் பணச்சடங்குகள் ஆயின. ஆரத்தி பணம், கொடுக்கும் பணம், சுருள் பணம், கொளுந்தி பணம் போன்றவைஉதாரணங்கள். கொழுந்தி பணம் போன்றவை கட்டாயம் நீக்கப்பட வேண்டியவை.

மணப்பெண் மீது யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறது என்பதை இச்சடங்கு தெரிவிக்கிறது(23). திருமணத்தின்போது நடக்கும்இச்சடங்கில் வீட்டின் மூத்த மாப்பிள்ளைகள், மணப்பெண்ணை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக மணப்பெண்மணவறையில் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்து பிறகு விட்டுக்கொடுப்பார்கள். அதற்குப் பணம் கொடுக்கவேண்டும்.

ஏழைக்குடும்பமானால் ரூபாய் 5 அல்லது 10 வாங்கிக்கொண்டு மூத்த மாப்பிள்ளைகள் மணப்பெண் உரிமையைவிட்டுக்கொடுப்பார்கள். அதுவே வசதியான குடும்பமென்றால் ஆயிரம், இரண்டாயிரம் ஆகும். நகர்மயமாதல்,மேற்கத்தியமாதல், சமஸ்கிருதமயமாதல் போன்ற காரணங்களாலும் சடங்குகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றன.

சமூகப்பெரியவர் அல்லது மூத்த பெண்டிர் நடத்தி வைத்த தமிழர் திருமணங்களைப் புரோகிதர் கொண்டு நடத்துதல்,ஜாதகப்பொருத்தம் திருமணத்தின் முதல் கட்டமாக மாறியிருப்பது, வரதட்சிணை காணச்சகியாத கோரரூபம் எடுத்திருப்பது,சினிமா படப்பிடிப்பு போல திருமணச்சடங்கு மாறியிருப்பது ஆகியவை எல்லாம் திருமண விழாக்களைக் கவ்விப்பிடித்திருக்கும்புதிய மாற்றங்கள்.

சங்ககாலம் தொடங்கி..

பண்டைத் தமிழகத்தில் திருமணம் ஒரு பெருமைக்குரிய சடங்காகக் கருதப்பட்டிருக்கிறது. மேல் வருணத்தார் மூவர்க்கு மட்டுமேஉரிமையாக இருந்த இச்சடங்கை கீழ்வருணத்தாரும் கைப்பற்ற ஒரு காலம் பிடித்தது என்பது தொல்காப்பியம் தரும் செய்தி.

""மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

(தொல். பொருள்-கற்பியல், 3)

தோன்றும் போதே, சமூக உயர்வு தாழ்வு கற்பித்துப் பிறந்த நிறுவனமாகத் திருமணம் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் காதலும்,திருமணமும் உணர்வுகளை வென்றெடுக்கும் கருப்பொருள்கள் ஆகிவிட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் காதல்திருமணமா ? பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமா ? என்பது குறித்துப் போதுமான விவாதங்கள் நடந்து விட்டன.

தமிழ்ப்பற்றுள்ள அறிஞர்கள் இப்பிரச்சினையை தொடும்போதெல்லாம், ""சங்க காலத்தில் களவு மணம் பெருவழக்கில் இருந்தது.களவு வாழ்க்கையின்றித் திருமணம் நடைபெறவில்லை என்று கூடக்கூறலாம் (24) என்ற உணர்ச்சிவசப்பட்ட முடிவுக்கேவருகின்றனர்.

களவு மணம் வழக்கில் இருந்தது என்பது தெளிவான விஷயம். ஆனால் அதுவே பெருவழக்காக இருந்தது என்பதற்கு எதுஆதாரம்? சங்க இலக்கிய காதல் பாடல்களா ? அப்படியெனில் கடந்த 50 ஆண்டுத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஓர்ஆய்வாளர், "தமிழ்ச் சமூகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகச் சாதி, மதம் தாண்டிய புரட்சித் திருமணமே பெருவழக்காக இருந்துவருகிறது என்ற முடிவுக்குப் போவது பொருத்தமாக இருக்குமா ?

காதல் திருமணம் பெருவழக்காக இருந்த சமூகத்தில், காதல் பாடல்கள் இத்தனை தவிப்புடனும், தடைகளுடனும்பாடப்பட்டிருக்கக் கூடுமா? இன்னும் அழியாத கண்ணீர்த்தடங்களுடன் பாடல்கள் காட்சி தரவேண்டிய அவசியம் என்ன ?

சங்க இலக்கியக் காதல் பாடல்களை ஆய்வு செய்து, அக்காலத்தில் பெற்றோர் ஏற்பாட்டு மணமே பெருவழக்காக இருந்திருக்கமுடியும் என்று முடிவுக்கு வரும் ஆய்வாளர்களும் உளர் (25). "பெற்றோர் அனுமதி திருமணத்தின் மிக ஆதாரமானபிரச்சினையாக இருப்பதை அவர்கள் பல பாடல்களின் வழி எடுத்துக்காட்டுகின்றனர்.

Marriage"உன் தாய் யார்? என் தாய் யார் ? என வியக்கும் குறுந்தொகைப் பாடல் கூட (பாடல் 40 ) வழக்கமான நடைமுறையில் இருந்துநம் காதல் விலகியிருக்கிறது பார்! என்ற உணர்வையும் பொருளையும் தானே தருகிறது!

குடும்பம் என்ற சொல் முதலில் திருக்குறளில் தான் இடம்பெறுகிறது. சங்க இலக்கியங்கள் குடி என்ற சொல்லை ஆள்கின்றன. குடிஎன்னும் சொல், தொழிலாலும், ஒத்த உறவாலும் நெருக்கமுடைய குடும்பங்களின் தொகுதியைக் குறிக்கிறது (26) என்னும் ஆய்வுமுடிவுகள் இங்கு கருதத்தக்கன.

குடி, பெற்றோர் அனுமதி,பொருள் ஆகியவை, சங்ககால திருமணம நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தின - இயக்கின என்பதுவெளிப்படை. "பெற்றோர் என்பது கூட நழுவுகிற பொதுச்சொல்லாக இருக்கிறது. தந்தையே மகள் திருமணத்தை முடிவு செய்யும்அதிகாரம் பெற்றிருந்தான். தன்னை முறைப்படி வணங்காதவர்க்குத் தன் மகளைத் தந்தை மணமுடித்துத் தருவதில்லையாம்.

""தன்தக,வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் (புறநானூறு, 338) என்கிறது ஒரு புறப்பாடல். குடிகளுக்கிடையே, அல்லது ஒருகுடிக்குள்ளேயே பெற்றோர் ஏற்பாட்டுடன் நடந்த ஒரு திருமண அமைப்பின் இறுகிய தளத்தைக் கீறி, குடி, திணை, ஊர் என்றஎல்லைகளைத் தாண்டி ஆண் பெண்ணிடையே காதல் முளை விடுவதும், அந்தக் காதல் பழைய இறுகிய அமைப்பின் சம்மதம்பெற்றுத் திருமணம் புரியத் தவிப்பதும் சங்க இலக்கியம் உயிர்த்துடிப்புடன் முன்வைக்கும் செய்திகளாக இருக்கின்றன.

""ஒரே பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தால் களவு மணம் கற்பு மணமாக மாறுவது இலகுவாக இருந்தது (27) என்கிறார்மனோன்மணி சண்முகதாஸ். இவ் ஆய்வு உண்மை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது. சூழல் நுண்ணுணர்வை இந்தியப்பண்பாட்டின் இயல்பாகக் குறிப்பிடுவார் ஏ.கே.ராமானுஜன் (28). சூழலுக்குக் கட்டுப்படாததாக மேற்கத்திய பண்பாடுஇருக்கிறது. சங்க காலத்தில் சூழல் உணர்வு என்பது திணை சார்ந்தது; பிரதேசம் சார்ந்தது. பிரதேசத் தனித்துவம் காரணமாகவேகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்கள் பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு திணையும் கட்டிக்காத்த நுண்ணுணர்வுகள் -பிரதேச தனித்துவங்கள் விரிவான ஆய்வுக்குரியவை. காதலை விடக்கூடஇந்தப்பிரதேச உணர்வு சில உள்ளங்களில் ஆழமாக ஊன்றியிருக்கிறது. "நெய்தல் தழையைத் தவிர வேறொன்றை ஏற்கமாட்டோம் எனத் தலைவன் தரும் கையுறை (பரிசுப்பொருள்) மறுத்து நிற்கும் தலைவியின் பிடிவாதம் (ஐங்குறுநூறு, 187)நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இன்னொரு பக்கம், அதே நெய்தல் நிலத்தின் "சுதந்திரவெளி பிரதேசக் கட்டுமானங்களைத் தகர்க்கக் கூடியதாக இருக்கிறது. அதுவாணிகம் நடக்கும் கடற்கரையின் சுதந்திரவெளி. ""நீ என்னைப் பார்க்க வரலாம்; தடையில்லை; எங்கள் ஊர்க்காரர்களுக்கேஒருவரை இன்னொருவருக்குத் தெரியாது. பிறர் வருவது யாருக்குத் தெரியப்போகிறது ? என்று தலைவி தலைவனுக்கு அழைப்புவிடுவது கடற்கரைப் பிரதேசத்தில் சாத்தியமாக இருக்கிறது.

""இனிவரின் தவறும் இல்லை; எனையதூஉம்

பிறர்பிறர் அறிதல் யாவது

தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே (நற்றிணை, 331)

அது மட்டுமல்ல. அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில், மகளைக் கடுங்காவல் காப்பளாகவும் தாய் இல்லை. எல்லோருக்கும்வெளியே வேலை இருக்கிறது. "சுறாமீன் தாக்கிய புண் ஆறி, தந்தை மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட்டாான். தாய்உப்பை விற்று நெல்லை வாங்கும் பொருட்டு உப்பளம் சென்று விட்டாள். இப்பொழுது வந்தாலும் தலைவி பார்ப்பதற்குஎளியவள் (குறுந்தொகை, 269) என்று தலைவனுக்கு அனுப்பப்படும் தூதும் நெய்தலின் "சுதந்திர வெளிக்குச் சாட்சி.

காளையடக்கித் திருமணம் புரியும் நிகழ்ச்சி முல்லையில் மட்டும் நடப்பது முல்லையின் தனித்துவமாக இருக்கிறது. ஒவ்வொருபிரதேசமும் இத்தகைய தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

பிற திணைகளில் தெரியாத பரத்தமையொழுக்கம் மருதத்தில் மட்டும் தெரிவதேன் ? என்ற வினாவுக்கு " செல்வச் செழிப்பு,பண்புகளில் உண்டாக்கிய குந்தகம் என்று ஏற்கனவே ஆய்வுகளில் விடை சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும்இப்பிரச்சினையை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மனோன்மணி. மலை, கடல், காடு ஆகிய பிரதேங்களில் குடிகளின் கூட்டுவாழ்க்கை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மருதமோ கூட்டு வாழ்க்கையிலிருந்து குடும்பங்கள் சுதந்திரம் பெற்ற நிலையாகும். ""நிலையாக ஓரிடத்தில் இருந்து பயிர் செய்துவாழ்ந்த அப்பிரதேச மக்களிடையே குடும்பங்கள் தனித்து வாழ்வு நடத்தக்கூடிய வாய்ப்பிருந்தது.(29) என்கிறார் மனோன்மணி.சமூகக் கட்டுக்கோப்பிலிருந்து குடும்பங்களுக்கு கிடைத்த சுதந்திரம் பரத்தமை ஒழுக்கத்திற்கு கதவு திறக்கிறது.

இந்த ரீதியில் சிந்திக்கும் மனோன்மணி, ""தமிழர் திருமண நடைமுறைகள் பிரதேச சூழலுக்கேற்ப அமைவதும் சாத்தியமாயிற்று(30) என்ற முடிவை எட்டுகிறார். நிலங்கடந்து மணம் செய்துகொள்ள சங்க காலத்தில் தடை இல்லை. இருப்பினும் இத்தகையமணங்கள் பலவாகக் காணப்படவில்லை (31) என்று முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.சமூகவியல் நோக்கில், சங்கத் திருமணங்களை நிலப்பரப்பு சார்ந்த அகமணம் (Territorial Endogamy ) என வரையறுப்பதுபொருத்தமாகப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு முரணாக உள்ள பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறுவயது முதல் சண்டையிட்டு, ஓடிப்பிடித்துவிளையாடி ஒன்றாக வளர்ந்தவர்களும் கூட, பெற்றோர் சம்மதம் கிடைக்காமல் உடன்போக்குத் திருமணம் மேற்கொள்ளும் நிலை(குறுந்தொகை, 229 ) ஏற்படுவதையும் காண்கிறோம்.

நிலப்பரப்புக்குள்-நெருங்கிய உறவுக்குள்- நிகழ்ந்த காதலுக்கும் அனுமதி கிட்டவில்லை. திருமண முடிவுகளில் நிலப்பரப்புக்கும்மேலான முன்னுரிமை பொருளாதாரத்துக்குக் கிடைக்கத் தொடங்கி விட்டதை ஒருவாறு நாம் யூகிக்கலாம். பொருளாதாரஏற்றத்தாழ்வுகள் திருமணத்தை உறுதி செய்ய எவ்வாறு தடைகளாக அமைந்து விட்டன என்பதை நற்றிணை 45வது பாடல்விளக்குகிறது, " மீன் எறி பரதவர் மகள்," கடுந்தேர்ச் செல்வன் மகனை மணப்பதில் உள்ள தடைகளை அப்பாடலில்காண்கிறோம். புலவு நாற்றம் உள்ள தங்களுடைய "சிறு வாழ்க்கையைத் தாழ்வு மனப்பான்மையோடு தலைவி தலைவனோடுபகிர்ந்து கொள்வது மனதைத் தொடுகிறது.

ஊர், பெற்றோர், ஆகிய குறுக்கீடுகளுக்குப் பணியாமல் காதலின் சக்தியால் ஆபத்துகளைத் தாண்டிப் புறப்படுகிறதுஉடன்போக்குத் திருமணம். இன்று சாதி, மதங்களைத் தாண்டி நடைபோடுகிற திருமணங்கள் எடுத்து வைத்த முதல் எட்டாகஉடன்போக்குத் திருமணம் திகழ்கிறது. இத்துணிச்சலின் மறுபக்கமாகப் பெண்ணின் பாதுகாப்பு குறித்த அச்சமும் உடன்போக்கில்வெளிப்படுகிறது.

"" முலை தளர்ந்து, கூந்தல் நரைத்து இவள் முதியவளாகும் போதும் இவளைக் கைவிட்டு விடாதே (32) என்று கைகூப்பிவழியனுப்பும் தோழியின் கூற்று இப்பயத்தைப் பிரதிபலிக்கிறது.

காதலித்தவளைக் கைப்பிடித்தற்காக, "மடலேறி நடக்கும் திருமணம் -மிரட்டல் திருமணமா? அல்லது காதல்போராட்டமா?-என்பது குறித்த முடிவுக்கு வரமுடியவில்லை. இத்தகைய போராட்டம் பெண்ணின் சம்மதத்துடன் தான் நடக்கிறதாஎன்றும் அறிய முடியவில்லை.

ஆனால் மடலூர்தல் பெண்ணின் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்த, "" பாண்டியனுக்குத் திறை செலுத்துவது போல,மடலூர்ந்தவனுக்கு அவர்கள் பெண்ணைத் தருகிறார்கள் (33). நீராட்டுதல், சிலம்பு கழிதல், அலங்காரம் செய்தல், வெண்ணூல்கட்டுதல், மலர் சூடுதல், மண அடுப்பில் பால் காய்ச்சுதல் எனச் சங்ககாலத் திருமணச் சடங்குகள் எல்லாம் பெண்ணைமையப்படுத்தியவையே.வாழ்த்தும் கூட பெண்ணுக்குத் தான். "" கணவன் விரும்பும் மனைவியாக இரு (34) என்பது தான்வாழ்த்து.

பெண்ணுக்கு ஒரு விலை தந்து (நறுநுதல் அரிவை விலை, அகம், 90), தண்டூன்றிய கையும் நரைத்த தலையும் உடையபெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து, மணம் பேசி முடிக்கும் வழக்கம் (குறுந், 146 ) - அதாவது பெண்ணைத் தேடிவரும் வழக்கம் அகப்பாடல்களில் தெரிகிறது. புறப்பாடல்களில் தெரியும் திருமணங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

கபிலர் பாரிமகளிர்க்குத் திருமணம் முடிக்க, பாரி மகளிரோடு அரண்மனைகளில் ஏறி இறங்குகிறார். அரசன் பெண்ணைக் கேட்டுப்பெறாமல், போரெடுத்துப் பெறும் வழக்கமும் புறத்தில் தெரிகிறது (புறம், 341 ). அகமும் புறமும் ஒன்றையொன்றுஎதிரொளிக்கவில்லை. முரண்பாடுகள் பளிச்சிடுகின்றன. அகத்தோடு புறத்தையும் இணைத்துத்தான் பழந்தமிழ்ச் சமூகத்தைப்புரிந்து கொள்ளமுடியும்.

பெண் கேட்கும் வழக்கத்தைத் "தூது என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிக்கிறது. வீடு வந்து பெண் பார்க்கும் வழக்கத்தைஅறிய முடியவில்லை. பொது இடங்களில், திருவிழாக்களில் பெண் பார்க்கும் வழக்கம் ஒருவேளை இருந்திருக்கலாம். விழாவில்துணங்கைக் கூத்தாடும் பெண்களையும், அவர்களில் தாங்கள் விருப்பப்பட்ட பெண்களைப் பெறப் போர் செய்யும்மள்ளர்களையும் ஒரு சேரக்காட்டும் குறுந்தொகைப்பாடல் (பாடல் 364), பொது நிகழ்ச்சிகளில் பெண் தேடும் வழக்கத்திற்குஆதாரமாக இருக்கிறது.

இன்றும் கூட சில சமூகத்தார், திருவிழாக்களில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியையும் சேர்த்தே நடத்துவது தமிழகத்தில் நன்குஅறியப்பட்ட செய்தியே.

திருமணச்சடங்கு பெண்ணுக்கான தேவை என்பது முன்னரே கூறப்பட்டது. சங்க இலக்கியத்தில் இந்தத் தேவை, அழுத்தமாகப்பதிந்திருக்கிறது. "" என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை மணந்து கொள் (நயவாய் ஆயினும் வரைந்தனைகொண்மோ - ஐங்குறுநூறு, 276 ) என்றும், "" மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடு (பெண்டெனப்படுத்தே, ஐங்குறு, 276 )என்றும் பெண் ஆணிடம் கெஞ்சிக் கதறுவது, பெண்ணின் திருமணத் தேவையை உறைக்கும்படி வெளிப்படுத்துகிறது.

திருமண நாள் பெண்ணுக்கு எவ்வளவு இனிய நாள் என்பதை விளக்க, "" வதுவை நாளினும் இனியனால் நமக்கே (அகம். 352 )என்ற ஒரு வரி போதுமானது.

தனித்திருக்கும் பெண் மீதான சமூகப்பார்வை, பெரும்பாலும் அனுதாபம் போர்த்திய வக்கிரமாகவே இருக்கிறது. திருமணம்ஆகாத பெண், திருமணம் ஆகிக் கணவனைப் பிரிந்திருக்கும் பெண் ஆகியோர் மீது அனுதாபச் சாணி அடிப்பது சமூகத்தின்கைவந்த கலை.

"" கெழமானாலும் கெட்டானாலும்

Marriageகட்டிக்கிட்டவ பிழைப்பாள்

""பத்து வயசுக்கு மேலே - ஒரு

பறையனுக்கானது தள்ளி விடணும்

என்ற சொலவடைகள் சமூக வக்கிரத்தின் வெளிப்பாடுகள்.

தவறு செய்பவனாக இருந்தாலும், கணவனோடு தான் சேர்ந்து வாழவேண்டும். பெண் மட்டும் கைக்குழந்தையோடு தனியேஇருந்து உண்டு வாழும் வாழ்க்கையால் பயன் என்ன ? என்று அகநானூற்றுப்பாடல் (35). " தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைஏற்றுக்கொள் எனப் பெண்ணைச் சார்ந்தோர் கூச்சமின்றி வற்புறுத்தும் வார்த்தைகளும் இப்பாடலில் இடம் பெற்றிருக்கின்றன.

குழந்தை பெறாத பெண்ணும், குடும்பத்தின் அங்கீகாரம் இழப்பது நடைமுறையாக உள்ளது. இதற்குப் பயந்து, அவள் கணவனின்மறுமணத்தையும் வரவேற்று ஏற்கக்கூடிய நிலை உள்ளது. "" நின்னினும் சிறந்தனள் எமக்கே (ஐங்குறு, 292 ) என்றுதலைவனுக்கும் மேலாக அவனது இரண்டாவது மனைவியை நேசித்து வரவேற்று முதல் மனைவி பேசும் வார்த்தைகளில்வெளிப்படுவது பெண்ணின் குரல் தானா ? என்ற ஐயம் இயல்பாக எழுகிறது.

காலந்தோறும் திருமணங்கள் .. ..

சங்க இலக்கியத்துக்குப் பின்னர் வந்த இலக்கியங்களின் வழி நாம் அறியும் திருமணங்களில் பெரும்பாலானவை செல்வந்தர்கள்,அரசர்கள், கடவுளர், கடவுளடியார் ஆகியோரின் திருமணங்களே. புதிய சடங்குகளையும் நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தித்தடபுடலாக நடந்த அந்தத் திருமணங்களைத் தமிழ்த் திருமணங்களின் மாதிரிகளாகக் கொள்ள இயலாது.

இருப்பினும் அவ் இலக்கியங்களின் வழி, சில சந்தேகங்கள் நிவர்த்தி ஆகின்றன. அத்தை-மாமன் வழி உறவுத் திருமணங்கள் சங்ககாலத்தில் இருந்தனவா என்ற கேள்விக்கு விடை சங்க இலக்கியத்தில் இல்லை. மணிமேகலை அத்தகைய உறவுத் திருமணத்தைஉறுதி செய்கிறது. தருமதத்தன் தன் மாமன் மகள் விசாகையைத் திருமணம் முடிப்பது பற்றிய செய்தியை மணிமேகலை தருகிறது.

சங்க காலத்தில் தாலி இருந்ததா என்பது குறித்தும் சந்தேகம் இருந்தது. "பின்னமை நெடுவீழ் ( நெடுநல்வாடை) "ஈகையறியஇழையணி (புறநானூறு, 127 ) போன்ற தொடர்கள் தாலியைக் குறிக்கின்றனவா ? என்றறிய ஆய்வுகள் நடந்தன. பின்னர் வந்தபெரியபுராணம், "கோதில் மங்கல நூல் தாலி (குங்கிலியக்கலைய நாயனார் புராணம் ) என்று தெளிவுபடத் திருமணத்தில்தாலியை நிலைநிறுத்தியது.

சமூகத்தில் மதிப்புமிக்கோர் புரிந்த திருமணங்கள் ஆதலால், விமரிசையுள்ள பொது நிகழ்ச்சிகளாகவே இது நடந்தேறின.கண்ணகி-கோவலன் திருமண விழாவில் அரச வாழ்த்தும் இடம்பெற்றது. திருமண விழாக்களில் அரசியலும் இடம்பெற்றது ஒருபுதிய மரபே.

வீதி ஊர்வலமும் ஒரு புதிய நிகழ்ச்சியாகத் திருமணத்தில் இணைகிறது. சிலப்பதிகாரத்தில் மங்கல அணிக்கு ஊர்வலம்; சீவகசிந்தாமணியில் மணப்பெண்ணின் ஊர்வலம் (கோவிந்தையார்); பெரியபுராணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம்;(திருஞானசம்பந்தர்). மங்கல அணி ஊர்வலத்திலும், மணப்பெண் ஊர்வலத்திலும் தோன்றாத வரவேற்பு முறைகள் மாப்பிள்ளைஊர்வலத்தில் தோன்றின. ஊர்வலமாக வரும் மணமகனின் காலைக் கழுவி , மணமகளின் பெற்றோர் மணமண்டபத்துக்குள்வரவேற்பதாக பெரியபுராணம் கூறுகிறது.

அம்மி மிதித்தல், மணமகள் நெற்றியில் குங்குமம் அப்பல் போன்ற புதிய பழக்கங்கள் தமிழர் திருமணத்திற்குள் நுழைந்தமையைஆண்டாளின் திருமணக் கனவுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

மணவறை, வேள்விமன்று, திருமண மண்டபம் போன்ற சொற்களும் இடைக்கால இலக்கியத்தில் புழக்கத்துக்கு வரலாயின.மணவறையில் நீர், விளக்கு இவற்றோடு அரசிலை, தர்ப்பைப்புல் ஆகியவையும் இடம்பிடித்தன. சோதிடர்கள் ஆராய்ந்து கூறியநல்ல நாளில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடக்கும் நேரத்தைப் "பழுதில் நற்பொழுது என்கிறது பெரியபுராணம். "குலம் பேசியே திருமணங்கள்நிச்சயிக்கப்பட்டன. நிலப்பரப்பு சார்ந்த மணம், குலம் கோத்திரம் சார்ந்த மணமாக வடிவம் மாறுகிறது.

பெண்ணை தாரை வார்த்துத் தருதலும், தீவலம் வரும் சப்தபதிச் சடங்கும் இடைக்காலத்தில் தான் பிரபலம் பெறுகின்றன.

தழைவிலை, அரிவை விலை எனச் சங்க காலத்தில் பல பெயர்களில் நிலவி வந்த "மணப்பெண் பரிசு (பரிசம் ) படிப்படியாகக்கைவிடப்பட்டு மணமகனுக்கான சீதனமாக மாற்றம் பெறுகிறது. பரிசம், சீதனம் இரண்டுமே பெண்ணை ஒரு பொருளாகக் கருதியநடைமுறை தான்.

முன்னதில் பெண்ணுக்கு ஒரு மரியாதை இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. சீதனமோ ஒரு சமூகக் குற்றமாகும்.குணமாலையின் தந்தை பொன் பொருளோடு இளம் பெண்களையும் சீவகனுக்குச் சீதனமாகத் தந்ததாகச் சீவகசிந்தாமணிபாடுகிறது.

"" அருள் இலஞ்சி வேலர் தமக்கொரு

பெண்ணைக் கொடுத்தோம்; ஆதீனத்து

மலைகளெல்லாம் சீதனமாகக் கொடுத்தோம்

என்று சீதனம் தந்த பெருமைகளைக் குதூகலித்துப் பாடுகிறது குற்றாலக் குறவஞ்சி. இடைக்காலத் தமிழர் திருமண முறைகளில்ஏற்பட்ட மாற்றங்களில் முற்போக்கான மாற்றம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தமிழகத்தில் திருமணச் சிந்தனைகள்:

Marriage தமிழுணர்வு, தமிழ்ப்பண்பாடு ஆகியவை குறித்த ஒரு விழிப்புணர்வு 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல மலர்ந்து 1930ம்ஆண்டுகளில் சற்றுத் தீவிரம் காண்கிறது.

1937இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சிஅமைத்தது. தமிழகத்தில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முனைந்தது. இந்த முயற்சியின்எதிர்வினையாகத் தமிழுணர்வு சட்டென மேலெழுந்தது.

கடவுள் நம்பிக்கையுடைய சைவரியக்கம், கடவுள் மறுப்பைக் கோட்பாடுடைய சுயமரியாதை இயக்கம் இரண்டும் ஒன்றிணைந்து1937இல் இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட்டன. இரு இயக்கங்களுக்கும் பொதுவான உந்துதலாக "பார்ப்பன எதிர்ப்புஇருந்தது(36). 1939இல் இரு முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தன. இரண்டும் ஜூலை மாதத்தில் நடந்தன.

ஒன்று, தாழ்த்தப்பட்ட மக்களின் மதுரை மீனாட்சி கோவில் ஆலயப்பிரவேசம்;(37) மற்றொன்று, சென்னையில் நடந்த தமிழர்திருமண மாநாடு (38). தமிழர் திருமண மாநாட்டில் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், சரவண ஆறுமுகமுதலியார் ஆகிய தமிழறிஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் நிகழ்த்தப் பெற்ற கருத்துரைகளைப் பார்க்கையில், 1937-1938இல்நடைபெற்ற இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் உணர்ச்சி வேகம் தமிழர் திருமண மாநாட்டிலும் தொடர்வதைக் காணமுடிகிறது.

மாநாட்டின் சாராம்சமாக இருப்பது "புரோகிதர் எதிர்ப்பும் சமஸ்கிருத எதிர்ப்புமே! ""காதலிலுமா தமிழன் மானங்கெட்டுப்புரோகிதனை அழைப்பது ? என்று அறிஞர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பினர்.

புரோகிதர் வைத்து திருமணம் நடத்துவது,சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது ஆகிய இரு நடைமுறைகளை மட்டும் கடுமையாகஎதிர்த்து, பிற சடங்குகளில் மிகவும் நெளிவு சுளிவான அணுகுமுறையை மாநாடு கடைப்பிடித்தது. தாலி கட்டல், தீவலம் வருதல்,அம்மி மிதித்தல் எல்லாம் தமிழர்க்கே உரிய சடங்குகள் என்று மறைமலையடிகள் உறுதிபடச் சொன்னார்.

"" சடங்குகள் எப்படியாயினும் இருக்கட்டும் என்றே பிற அறிஞர்களும் சொன்னார்கள். சாதீயத் தடைகள், பலதாரமணம் போன்றசமூகப் பிரச்சினைகளை மாநாடு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. "" அந்தணப் புரோகிதர்களின் இடத்தில்சைவப்பெரியோர், வடமொழி மந்திரங்களுக்கு மாறாகத் தமிழ்ப் பாடல்கள் என்பதே சைவர்கள் உருவாக்கிய தமிழ்த் திருமணமுறை (39) என்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி. எனவே முற்போக்காளர் மத்தியில் இத் திருமண மாநாட்டுக் கருத்துரைகள்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

"" தமிழில் நடக்கும் திருமணம் எல்லாம் தமிழர் திருமணம் ஆகிவிடாது(40) என்று மறுக்கும் நிலையே உருவானது.மா.இராசமாணிக்கனார் (தமிழர் திருமண நூல்), சு.வித்தியானந்தன் (தமிழர் சால்பு),பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் (தமிழ்த்திருமணம்) ஆகியோர் எழுதிய நூல்களிலும் சடங்குகளைத் தமிழ்ப் படுத்தும் முயற்சியே முனைப்பாக இருந்தது.

சடங்குகளைக் கைவிடுவது, முற்போக்கான மாற்றங்களைக் கொண்டுவருவது, திருமணத்தில் கலந்துவிட்ட சமூகக் குற்றங்களைச்சாடுவது போன்ற சிந்தனைகள் எல்லாம் அக்காலத்திற்குப் புதியன ஒன்றும் அல்ல. ஆனால் தமிழ்த் திருமணம் குறித்துஎழுதப்பட்ட நூல்களில் அக்குரல் ஒலிக்கவில்லை.

தமிழறிஞர்கள் முன்வைத்த - பழைய சடங்குகளே நிறைந்த - தமிழர் திருமண முறைக்கு மாற்றாக, திராவிடர் புரட்சித் திருமணம்என்று ஒரு புதிய வடிவத்தைச் சிந்தித்தார் பாவேந்தர் பாரதிதாசன் (41). தாலிக்குப் பதிலாக மோதிரம் மாற்றுதலைஅறிமுகப்படுத்தினார் கவிஞர். அறிஞர் பெருமக்கள் மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சிக்கும் அவர் முக்கியத்துவம் தந்தார்.

"" உள்ளம் ஒப்புவது மணமாம் என்ற கருத்தை வலிமையாகச் சொன்னவர் பாவேந்தர். ""கொடியச் சாதிய நாய் குலைக்கு முன்னேநடந்து வா அன்னமே என்று அவருடைய பாடலில் தலைவன் தலைவியை அழைப்பான். தமிழறிஞர்கள் சிந்திக்க மறந்த சமூகப்பிரச்சினைகளை எல்லாம் சிந்தித்தவர் பாரதிதாசன்.

அவருடைய திருமணத் திட்டத்தில் இருந்த ஒரே குறை - மனைத்தக்க மாண்புடையாள் ஆகவேண்டும்; தன்னையும் காத்து தன்கொழுநனையும் காக்க வேண்டும் என்று மணவிழா அறிவுரைகள் எல்லாம் பெண்ணை நோக்கியே இருப்பது. "" கணவன்விரும்பும் பெண்ணாக இரு என்ற சங்க கால வாழ்த்தின் தொடர்ச்சியாகவே பாரதிதாசன் வாழ்த்தும் அமைந்தது.

பழைய மரபுகளில் இருந்து முற்றிலும் விலகித் திருமணம் குறித்துச் சிந்தித்தவர் பெரியார். தமிழர் திருமண மாநாடு நடப்பதற்குபல ஆண்டுகளுக்கு முன்னரே, சுயமரியதைத் திருமணம் குறித்த சிந்தனைகளைப் பெரியார் தமிழகத்தில் பரப்பத்தொடங்கியிருந்தார். புரோகித எதிர்ப்பு மட்டுமல்ல, சுயமரியாதைத் திருமணம். சடங்குகளையும் ஆடம்பரங்களையும் நீக்குதல்,சோதிடம் சாதகம் ஆகியவற்றைத் தவிர்த்தல், ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தல், தாலி கட்டிக்கொள்ளாமை - எனச்சுயமரியாதைத் திருமணம், தமிழர்கள் இதுவரை சிந்தித்தே இராத தளத்தில் இருந்து பேசியது.

திராவிட இயக்கச் சிந்தனையாளரான பாரதிதாசன் ஒரு சமரச நோக்கில் முன்வைத்த கணையாழி மாற்றுதல் என்பதற்குக் கூடசுயமரியாதைத் திருமணத்தில் இடமில்லை. தாலி கட்டும் சடங்கைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆண் பெண் அடிமைகொள்ளுவதற்கான ஒரு விளம்பரச் சின்னம் தான் தாலி என்பது பெரியாரின் கருத்து. "" சுயமரியாதை உள்ள பெண்கள் தாலியைஅறுத்தெறியெட்டும், இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்டட்டும் என்றார் பெரியார்.

28.05.1928இல் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணத்தைப் பெரியார் நடத்திவைத்தார். ஒரே மேடையில் மூனறு திருமணங்கள் நடந்தன. மணவறையில் ஓமம் வளர்க்கப்படவில்லை. மணமக்கள் எளியகதராடையே அணிந்திருந்தனர். மூன்று திருமணங்களையும் பார்க்க வந்திருந்த ஆயிரக்கணக்கானோர்க்கு வேற்றுமையின்றிசமபந்தி தரப்பட்டது.

சிறப்புடைய இத்திருமணத்தில் சுயமரியாதைக்கு எதிரான சில தடைகளும் இருந்தன. மூன்று திருமணங்களிலும் தாலி கட்டும்நிகழ்ச்சி இடம்பெற்றது. தாலி கட்டும்போது " சுயமரியாதைக்கு ஜே ! வைக்கம் வீரருக்கு ஜே ! என்று முழக்கமிட்டுப் பெரியார்தொண்டர்கள் ஒருவாறு ஆறுதலைடைந்தனர்.

இரண்டு திருமணங்களில் ஒரு மாப்பிள்ளைக்கு இரு மணப்பெண்கள். வலப்பக்கத்தில் ஒரு பெண்ணையும், இடப்பக்கத்தில் ஒருபெண்ணையும் வைத்துத் தாலி கட்டித் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ளவந்த கி.ஆ.பெ.விசுவநாதம்பிள்ளை "ராதா ருக்மணியுடன் கிருஷ்ண பகவான் இருந்தது போல வாழவேண்டும் என மணமக்களை வாழ்த்தினார். உடனிருந்ததண்டபாணிப்பிள்ளை "சுப்பிரமணியருடன் வள்ளி தெய்வானையைப் போல வாழவேண்டும் என வாழ்த்தினார். எல்லாஇயக்கங்களும் சந்தித்தாக வேண்டிய பழமைவாத உள்தடைகளைச் சுயமரியாதை இயக்கமும் சந்தித்தது.

வெளித்தடைகளும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இருந்தன. 1953இல் சென்னை உயர்நீதிமன்றம், தெய்வானை ஆச்சி-சிதம்பரம் செட்டியார் பாகப்பிரிவினை வழக்கில் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. நெருப்பை ஏழுமுறைசுற்றிவரும்- சப்தபதிச் சடங்கு நடக்காத திருமணத்தை வழக்கமான திருமணமாக அங்கீகரிக்க மறுத்தது நீதிமன்றம்.

"" இதைக் கண்டு இயக்கத்தினர் கொதித்தனர் என்றாலும் சுயமரியாதைத் திருமணம் பெருகியதே தவிர குறையவில்லை (42)என்கிறார் கி.வீரமணி.

1954இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனித்திருமணச் சட்டத்தின் மூலம் சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்யவாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் 1967இல் அண்ணா அவர்கள் கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டத்தின்மூலமே சுயமரியாதைத் திருமணத்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்தது.

இச்சட்டத்தின்படி, இரு சாட்சிகள் இருந்தாலே போதும். சுயமரியாதைத் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.பிற்பட்டோர் இயக்கங்களின் கலாச்சால வரலாற்றில் சுயமரியாதைத் திருமணம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.

இன்றென்ன நிலை ?

கல்யாண முறைகள் கார் மாடலைப் போலத்தான் என்றார் பெரியார். அதாவது காலத்துக்கு ஏற்றபடி மாறக்கூடியவை.வெடிச்சத்தம் இல்லாத ஒரு மத்தியவர்க்கக் கல்யாணத்தை இன்று தமிழ்நாட்டில் பார்க்க முடியாது, வாழ்த்துப் போஸ்டர்கள்,பேண்ட் வாத்தியங்கள், பத்திரிகை விளம்பரங்கள், கச்சேரிகள் -எனச் சடங்குகள் விரிவடைந்து கொண்டே போகின்றன.இலக்கியம் சொல்லாத சடங்குகள் ! திருமணம் முடிந்ததும் உற்சாகம் மிக்க இளைஞர் கூட்டம் விளையாட்டுகளை நடத்தி பரிசுப்பொருள்களும் வழங்குகிறது. சிரித்த முகங்கள் மனதுக்கு நிறைவான காட்சி. ஆனால், கல்யாணச் செலவுகளால் நிரந்தரமாய்ச்சிரிப்பை இழக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

மேற்கத்திய பாணியில் கோட்டணிந்து, புரோகித பாணியில் நெருப்பு வளர்த்து, தொல்குடிமரபில் உப்பும் நீரும் மணப்பரிமாற்றம்செய்து, தன் பூர்வீகத்தின் குலக்குறியை ( totem) மணவறையில் பக்கத்தில் வைத்து, அரசியல் வெற்றி போல சிவகாசி வேட்டுவெடித்து - என்று இப்படி எல்லாம் கலந்த கலவையாக, தமிழர் வீட்டுத் திருமணம் நடக்கிறது. மேற்கத்திய கோட்டும், மேற்கத்தியவிஸ்கியும் வந்து கலந்த அளவுக்கு, துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் - திருமணத்தைத் தனிப்பபட்ட சொந்தச்சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்தியப் பண்பாடு வந்து கலக்கவில்லை.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞன் பீட்சா, பர்கர்களுக்குப் பழகிவிட்டான். சூதாட்ட விடுதிகளுக்குக் குற்றஉணர்வின்றிச் செல்கிறான். திருமணம் என்று வந்து விட்டால், சாதி , ஜாதகம் என்றே தொடங்குகிறான். இந்த இரட்டை நிலைபுத்திசாலித்தனமா ? சந்தர்ப்பவாதமா ? பாசாங்கா ?

பண்ட விளம்பரங்கள் திருமணத்தேர்வில் உருவாக்கியிருக்கும் ஒரு தவிப்பு - அழகு முகத் தவிப்பு. சிவப்பு நிறத்தின் மீதுதமிழனுக்குள்ள ஈடுபாட்டை அளவிட்டுச் சொல்லமுடியாது. பெண் தேடுவோர் தரும் விளம்பரங்களில் -கடந்தஇருபதாண்டுகளாக ஞூச்டிணூ,ண்டூடிட்,ஞஞுச்தணாடிஞூதடூ என்ற வார்த்தைகள், இளைஞனின் கொள்கை முழக்கம் போல இடம் பிடித்திருக்கின்றன.இளைஞர்களின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாகச் சிறிய ஊர்களில் கூட, புதிய வியாபாரமாக அழகு நிலையங்கள்முளைத்திருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அழகான பெண்ணை எதிர்பார்க்கும் இளைஞனின் விருப்பம் வரதட்சிணைப்பிரச்சினையின் கனத்தைக் குறைத்திருக்கிறதா ? இல்லை.

புதிய சடங்குகள் நுழையும் போது, பழைய சடங்குகளும் அர்த்தமின்றி இயந்திரமாய்த் தொடர்கின்றன. புதியவிருப்பங்கள்,தேவைகள் தோன்றும்போது, பழைய ஆசைகளும் விடாப்பிடியாய்க் கூடவே வருகின்றன. இந்த இரட்டைநிலை,ஒரு பண்பாட்டின் சுமை அல்லவா ?

சுதந்திரத்திற்குப் பின் மிகப் பிரமாண்ட அளவில் வளர்ச்சி பெற்றிருக்கும் மத்திய வர்க்கமே பண்பாட்டில் இரட்டைச் சுமைகள்தோன்றக் காரணம் என்பது அறிஞர் சிலரின் கருத்து (43).

துணைதேட இன்று -டி.வி, பத்திரிகை, இண்டர்நெட் என ஏராளமான புதிய வழிகள்! புதிய வழிகளிலும் பழைய படுகுழிகளேகண்ணில் தெரிகின்றன. எடுத்துக்காட்டாக தினமலரிலும், Hindu பத்திரிகையிலும் வரக்கூடிய மணமகன்-மணமகள் தேவைவிளம்பரங்களைப் பார்க்கலாம். தினமலரில் வாரம் ஒரு முறை வரும் இப்பகுதியில் 180 முதல் 200 விளம்பரங்கள் வரை இடம்பெறுகின்றன.

இவற்றில் சாதி மதம் தேவை இல்லை என வரும் விளம்பரங்கள் 3 முதல் 5 மட்டுமே. Hindu பத்திரிகையில் தமிழ்த் திருமணவிளம்பரங்களாக வாரம் ஒரு முறை 800 விளம்பரங்கள் வருகின்றன. இவற்றில் caste no bar என்ற அறிவிப்போடு வருபவை10 முதல் 15 மட்டுமே.

இது விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்த காலம். மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்டிருக்கும் புரட்சியைப் பற்றி நாம்பேசாத நாளில்லை. இந்த மாற்றங்கள், தமிழர் திருமணங்களில் முக அலங்காரங்களாகத்தான் வந்து நுழைந்திருக்கின்றன.ஆன்மாவில் மாற்றம் உண்டாகவில்லை.

நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கிய கேடும் சிந்திக்கத்தக்கது. புதிய டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை இப்போதுகல்யாண வீடுகளில் காட்சிக்கு வைக்கிறார்கள். வரதட்சணை வாங்குவதிலும், கொடுப்பதிலும் கூச்சம் போய்விட்டது. என்கிராமத்தின் கதை என்ற நிகழ்ச்சியில் (ம.சு.பல்கலை, நெல்லை), ஒரு மாணவி தன் கிராமத்தில் முதன் முதலாக வரதட்சணைபெற்றவரைப் பற்றிக் கூறினார். அவருக்கு வரதட்சணையாக இரண்டு மாடுகள் கிடைத்தனவாம். மாடுகள் இன்று மாருதிகார்களாகி விட்டன என்று அந்த மாணவி கூறினார்.

பெண் பார்த்தல் என்பது பெண் அனுபவிக்கும் வதைகளில் ஒன்று. பெண் கேட்டல் என்பது பழைய வழக்கம். சினிமா முகங்களைவீடுகளுக்குள் தேடி, ஊர் ஊராக இன்று பெண் பார்க்கிறார்கள். நான் கலந்து கொண்ட திருமணத்தில் மணமகனின் தந்தை, 72பையன்களைப் பார்த்தோம். முதலில் பார்த்த இந்தப் பெண்ணையே முடித்து விட்டோம் என்று பெருமையாகச் சொன்னார். பெண்பார்த்தல் சடங்கு உருவாக்கும் புதிய தற்கொலைகள் பற்றி மருத்துவக் கருத்தரங்குகள் தெரிவிக்கின்றன. மதுரை ராஜாஜிமருத்துவமனையில் மட்டும், ஒரே நாளில் பெண் பார்த்தல் சடங்குகள் உண்டாக்கிய ஏமாற்றம் காரணமாக ஆடையில் தீ வைத்துக்கொண்ட நான்கு இளம் பெண்கள் உயிருக்குப் போராடும் நிலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கட்டாயம் ஜனநாயகப்படுத்த வேண்டிய அமைப்பாகத் தமிழர் வீட்டுத் திருமணம் இருப்பது உறுதி. தமிழ் அடையாளங்கள் என்றுஎதுவும் அத்திருமணங்களில் இல்லை. மனித நேய அடையாளங்களாவது தமிழன் திருமணத்தில் மிஞ்ச வேண்டும் என்பது நம்கவலை.

(30-11-2004, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழல்புலமும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய உலகத்தமிழாசிரியர்களுக்கான தமிழர் பண்பாட்டுச் சிறப்பு பயிற்சி வகுப்பு, மதுரை.)

குறிப்புகள்:

1.மேற்கோள்: The Collected essays of A.K. Ramanujan, 2003, P.46.,

2.சீ. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.342

3.மேற்கோள்: மைதிலி சிவராமன், பெண்ணுரிமை சில பார்வைகள், ப. 79.

4. M.N.Srinivas,Social change in modern india, P.43.

5. George Hart , The Poems of Ancient Tamil Their Mileu and their Sanskrit counterparts 2003,p.127.

6. சீ.பக்தவச்சல பாரதி, ப. 386

7. கா.சுப்பிரமணியன் ,சங்ககாலச் சமுதாயம் ,ப.10.

8. நாஞ்சில் நாடன் , நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை ,ப.61.

9. 1998 ஜனவரியில்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "என் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் மாணவர்கள்கட்டுரை படைத்தனர்.ஒரு மாணவி ஒரு பாட்டி திருமணமாக வெளிப்படுத்திய செய்தி இது.

10. வைரமுத்து,இன்னொரு தேசிய கீதம்,ப.30

11. ச. முத்துச் சிதம்பரம்,வெ.பத்மா, இந்தியாவில் பெண்களின் நிலை, ப.32

12. பெ.ச.பாமணி, ஆயிரவைசியர் மரபும் குலச்சடங்குகளும்,ப.69

13. அ.சண்முக தாஸ், மனோன்மணி சண்முக தாஸ், தமிழர் திருமண நடைமுறைகள்,ப. 54

14. வானமாமலை,மக்களும் மரபுகளும், பக்.130-132.

15. lbid,p.137.

16. ந.முத்து மோகன், இந்தியக் கதை : ஏகம், அநேகம்,சாதியம்,ப 2, ப 7

17. பெ.ச.பாமணி,ப 62

18. Alan Dundes, Essays in Folklore Theory and Method , p. 184.

19. மக்களும் மரபுகளும், ப 31

20. நாஞ்சில் நாடன், ப 61

21. விரிவறிய : K.N.Panikkar,Culture, Ideology and Hegemony, pp.180182.

22. விரிவறிய : கு. சின்னப்ப பாரதி,தாகம், ப. 384.

23. lbid., p.50.

24. முனைவர் வி.சி.சசிவல்லி,தமிழர் திருமணம், ப 76.

25. George Hart, pp.4748.

26. கு.வெ.பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், ப 37.

27. தமிழர் திருமண நடைமுறைகள், ப 25.

28. A.K.Ramanujan, p 41.

29. தமிழர் திருமண நடைமுறைகள்,ப 21.

30. lbid, p 21.

31. கு.வெ.பாலசுப்பிரமணியன்,ப 265.

32. நற்றிணை, 10

33. ""வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர் கவி. 141.

34. ""பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு (அகம்.86)

35. ""தாமட்டுண்டு தமியராகி (அகம் 316)

36. விரிவறிய : ஆ. இரா. வேங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாரும், ப 49.

37. விரிவறிய : தொ. பரமசிவன், தெய்வங்களும் சமுக மரபுகளும், பக் 93-108.

38. விரிவறிய : முல்லை பிஎல். முத்தையா, தமிழர் திருமணம்,1994.

39. கி.வீரமணி, சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும்,ப 118.

41. முல்லை பிஎல். முத்தையா, பக் 54-63.

42. கி.வீரமணி, ப 85.

43. விரிவறிய : Pavan K.Varma, The Great Indian Middle Class, 2003.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more