For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

By Staff
Google Oneindia Tamil News

தமிழ்நாடு போன்ற வறண்ட வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக உழவர்கள் மழை வேண்டிப் பல சடங்குகளைச் செய்கின்றனர். மழைச் செம்புஎடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு மணம் செய்து வைத்தல் போன்றன அவற்றுள் சில.

பொதுவாக, மழைச்சடங்குகள் என்பன மந்திரச் சடங்குகள் (Magical Rituals) ஆகும். இங்கே அது ஒத்த மந்திரச் சடங்காக (Imitative Magic)அல்லது பாவனை மந்திரச் சடங்காக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்பதே இம்மந்திரச் சடங்கின்அடிப்படையாகும். அதாவது, ஏற்பட வேண்டிய விளைவும் அதனை அடையச் செய்யும் செயலும் ஒத்திருக்கும். (1)

இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது நெல்லை மாவட்டம் (சங்கரன் கோவில்- புளியங்குடி முதன்மைச் சாலையிலுள்ள) முள்ளிக்குளம்எனும் சிற்றூரில் நடக்கும் மழைச்செம்புச் சடங்கையே. நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுள் சங்கரன்கோவில் பகுதியும் ஒன்றுஎன்பது நினைவில் கொள்ளத்தக்கது. மழைக்குரிய காலமாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்யாத போது இச்சடங்குநிகழ்த்தப்படுகின்றது. ஏதாவது ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் இது நடைபெறுகின்றது. இச்சடங்கைமுன்னின்று செய்பவர்கள் பெண்களே.

பூப்பெய்தாத மூன்று சிறுமிகள் செம்புகளில் தண்ணீர் நிரப்பி அவற்றை எருக்கலங்குழையால் மூடி எடுத்து வருவர். அச்செம்புகளுக்குமுறையே மழை (அ) குளச்செம்பு, வெள்ளாமைச்செம்பு, பஞ்சச் செம்பு என்று பெயர் கொடுப்பர். பின்னர் அவற்றை ஊர்ப்பொதுஇடத்தில் வைப்பர். அவற்றின் அருகே நிறைநாழிக்கு மாற்றாக முக்கால்வாசி நெல் நிரப்பிய நாழி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில்பெண்கள் தங்கள் தலையில் இருந்து ஒரு பேனை எடுத்துவிடுவர். பின்னர் நாழியை முழுவதும் நெல்லால் நிரப்புவர். அதன்மீது எருத்துண்டு,மஞ்சள் துண்டு, கரித்துண்டு மூன்றையும் வைப்பர். பின்னர் செம்புகளில் உள்ள தண்ணீரில் விளக்கெண்ணையைச் சொட்டுச் சொட்டாகமூன்று முறை விடுவர். அப்படி ஒவ்வொரு செம்பிலும் விடும்போது, மழை! மழை! (அ) குளம்! குளம்! என்று ஒரு சொட்டும், வெள்ளாமை!வெள்ளாமை! என்று ஒரு சொட்டும், பஞ்சம், பஞ்சம் என்று ஒரு சொட்டும் சொல்லிக்கொண்டே விடுவர். பின்னர் செம்புகளை மீண்டும்எருக்கலங்குழையால் மூடிவிடுவர்.

பிறகு 7 (அ) 9 வீடுகளில் பழஞ்சோறு வாங்கி அதை அவ்வூரைச் சேர்ந்த வண்ணார் சமூகப் பெண்ணிடம் (வண்ணாத்தியிடம்) கொடுப்பர்.அதன் பின்பு அந்தப் பெண்ணை எருக்கலங்குச்சி ஒன்றினால் அடித்து விரட்டுவது போன்று பாவனை செய்வர். அந்தப் பெண் மழை! மழை!என்று சத்தமிட்டபடியே ஊரின் வடக்குத் திசையை நோக்கி ஓடிப் போய்விடுவார். (மாறிவரும் சமூகச் சூழ்நிலைகளையொட்டிஇவ்வழக்கத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், இவ்வழக்கம் அண்மைக் காலங்களில் மாறிவருவதாகவும், மழைச் செம்புச்சடங்கை நடத்தும் பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார்.)

பின்னர் பஞ்சம் என்ற பெயர் கொடுக்கப்பட்ட செம்பை ஊருக்கு வெளியே வடக்கில் உள்ள ஒரு முச்சந்தியில் கொண்டு விட்டுவிட்டுத்திரும்பிப் பாராமல் வந்துவிடுவர். மற்ற இரண்டு செம்புகளில் உள்ள நீரையும் ஊருக்கு நடுவில் அல்லது கிழக்கு, தெற்குத் திசைகளில்விடுவர். மேற்குத் திசையில் விடுவதில்லை. ஊருக்கு மேற்கே மழை நீர் கொண்டுவரும் மேற்கு மலைத்தொடர் இருப்பது குறிக்கத்தக்கது.

பின்னர் சடங்கு நடைபெறும் ஊர்ப் பொது இடத்தில் பொங்கல் வைத்து அனைவரும் பகிர்ந்துண்ணுவர். இச்சடங்கில் நெல்லில் விடப்பட்டபேன் ஊர்ந்து எருவின் மீது ஏறினால் மிகுந்த செழிப்பு, மஞ்சளின் மீது ஏறினால் விளைச்சல் உறுதி, கரியின் மீது ஏறினால் நிலமும்கரியாகிவிடும் என்பதும், ஒவ்வொரு செம்பிலும் உள்ள பஞ்சச் சொட்டு மற்ற இரண்டுடனும் சேராது தனித்து இருந்தால் மழை பெய்யும்.சேர்ந்து விட்டால் மழை பெய்யாது என்பதும் இச்சடங்கின் வழி பெறப்படும் நம்பிக்கை ஆகும். (2)

இங்கே மழைவேண்டிச் செய்யப்படும் இத்தகைய நிறைநாழிப் பேன் சடங்கு தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களில் பெண்வீட்டாரால் மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது. இச்சடங்கில், மழைச் செம்புச் சடங்கில்இடம்பெறும் எருத்துண்டுக்குப் பதிலாக தங்க நகை வைக்கப்படும். நெல்லில் விடப்படும் மணப்பெண்ணின் தலைப்பேன் மஞ்சளில்ஏறினால் அந்தச் சம்பந்தம் மிகச் சிறந்தது. தங்க நகையில் ஏறினால் பெண்ணைக் கொடுக்கலாம். கரித்துண்டில் ஏறினால் மண உறவுநடைபெறாது என்பது இச்சடங்கின் மூலம் பெறப்படும் நம்பிக்கையாகும். (3)

மழைச்சடங்கு போன்றதொரு நாட்டார் சடங்கை, சமூக இயல் நோக்கில் ஆராயும்போது, அதில் பங்குபெறும் சாதிகளையே முதலில்கணக்கில் கொள்ள வேண்டும். அவ்வகையில் முள்ளிக்குளம் சிற்றூரில் நடைபெறும் சடங்கில் இரண்டு சாதியினர் பங்கு பெறுகின்றனர்.முதலாமவர், அச்சடங்கை நடத்துகின்ற கோனார் சாதியினர். இவர்களே அந்த ஊரில் ஆதிக்க சாதியினராகவும் நிலவுடமைச்சாதியினராகவும் உள்ளனர். இரண்டாமவர், அடித்தட்டு மற்றும் சேவைச்சாதியினரான வண்ணார் சாதியினர். சமூக இயல் ஆய்வுகளில்அடித்தட்டு மக்களின் சமூக வரலாற்றுப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி ஆராயும் போக்கு தற்போது வளர்ந்து வருகின்றது. இவ்வகையில்இச்சடங்கில் இடம் பெறும் வண்ணார் சாதியினரை, அவர்கள் இச்சடங்கில் பெறும் இடத்தின் காரணமாக, அச்சாதியினருடைய வழிபாடுமற்றும் தொல்சமயச் சடங்கியல் தொடர்புகள் குறித்து கவனமாக ஆராய்வது இங்கே அவசியமாகிறது.

வண்ணார் சாதி போன்ற அடித்தட்டு மற்றும் அவைதீகச் சாதிகளிடையே இன்றுள்ள சூழலில் எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் வழக்கம்உள்ளது. எனினும் சாதிய நிலையில் அவற்றோடு குறிப்பான உறவுடையவை எனக் கற்பிக்கப்பட்ட சில நாட்டார் தெய்வங்களை அல்லதுஅவைதீகத் தெய்வங்களை நம்மால் பட்டியலிட இயலும். இதை, பறையர்- காத்தவராயன், சக்கிலியர் - மதுரை வீரன், கொல்லாசாரிகள்-உலைக்கூடத்தான் (முள்ளிக்குளம்), வேளாளர்- கருப்பசாமி, நாடார்கள்- பத்திரகாளியம்மன் என்கிறவாறு நாம் காணலாம். தெளிவானவரையறை இல்லாத காரணத்தால் வண்ணார் சாதியும் அதற்குரிய தெய்வமும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆனால் நாம் ஏலவே விவரித்த மழைச் செம்புச் சடங்கும், அதில் வண்ணார் சாதி பெறும் இடமும், அச்சாதிக்குரியதாகக் கற்பிக்கப்பட்டதெய்வம் இன்னது என்பதைக் குறியீட்டு மற்றும் சடங்கு அடிப்படையில் வரையறை செய்ய உதவுகின்றன. இக்குறியீடுகளையும்,சடங்குகளையும் ஆராய்வதற்கு ஏதுவாக இச்சடங்கோடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட அவைதீகப் பெண் தெய்வத்தைப்பற்றி அறிவதுஅவசியமாகிறது. அவ்வகையில் மூத்ததேவி எனப்படும் மூதேவி பற்றிச் சில செய்திகளை ஒருங்கு திரட்டிக் காணவேண்டும்.

மூத்தவள் என்று பொருள்படும் பெயர் கொண்ட மூதேவி, இனக்குழு காலத்திய வளமை மற்றும் தாய்த்தெய்வம் ஆகும். வடமொழியில்ஜேஷ்டா என இவளை அழைப்பர். ஜேஷ்டா என்றால் மூத்த என்று பொருள். தமிழ்நாட்டில் குறிப்பாக வடதமிழ்நாட்டில் பல்லவர்காலத்திய மூதேவிச் சிற்பங்கள் தற்போது பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் படைப்பானகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஐம்பத்தெட்டுச் சுற்றுக் கோவில்களில், ஜேஷ்டாதேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன.நெல்லை மாவட்டத்தில் ஆய்வாளருக்குத் தெரிந்து ஊர்க்காட்டுச் சிற்றூரில் இத்தெய்வத்துக்குச் சிலை இருக்கிறது. இதனைக் கண்டறிந்ததொல்லியல் அறிஞர் மா.செந்தில் செல்வக்குமரன், உருவ இயல் அமைதி கொண்டு இதன் காலம் கி.பி.10ம் நூற்றாண்டு என வரையறைசெய்துள்ளார்.

பெருத்த வயிறும், பருத்துச்சரிந்து காணப்படும் மார்பகங்களும் இத்தெய்வச்சிலையின் பொது இயல்பாகும். இது இவள் வளமை காட்டும்தாய்த் தெய்வம் என்பதை உறுதிப்படுத்தும். அமர்ந்த கோலத்தில் வலது கை அபய முத்திரையுடனும், இடது கை தொடை மீது தொடை மீதுபதிந்தும் காணப்படும். சில இடங்களில் வலது கையில் நீலோற்பல மலரும், இடது கை இருக்கை மீதும் காணப்படும். இவள், கரியநிறமுடையவள், என விஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடுகிறது. மாட்டுமுகம் கொண்டு, வலது கையில் தண்டமும், இடது கையில்கயிறும் ஏந்தியவாறு மூதேவியின் வலப்புறம் காணப்படும் ஒரு ஆண் உருவம் இவளது மகனாகக் கருதப்படுகிறது. மாந்திகன் என இவன்அழைக்கப்படுகிறான். இவளின் இடப்புறம் காணப்படும் பெண் உருவம் இவளது மகள் எனக் கருதப்படுகிறது. இவள் மாந்தி எனஅழைக்கப்படுகிறாள். மூதேவியின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, கைக்கருவி விளக்குமாறு. மூதேவியின் தோற்றம் பற்றிவிஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடும் போது,

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும்போது அதிலிருந்து பல பொருட்களும், உயிர்களும் தோன்றின. அவற்றுள் லட்சுமிதேவியும் தோன்றினாள். அவளுக்கு முன்பு தோன்றியவள்தான் மூதேவி என்கிறது. லிங்க புராணம் இவள் தோற்றம் பற்றிக் கூறும்போது,பாற்கடலில் காலகூடம் எனும் உலகையே அழிக்கும் நஞ்சு தோன்றியது அதனைத் தொடர்ந்து மூதேவி தோன்றினாள் என்கிறது. மேலும்,(வேத மரபுக்கு எதிரான) பவுத்தர்கள் வாழும் இடங்களும், வைதீகமல்லாத சடங்குகள் நடைபெறும் இடங்களும் மூதேவி விரும்பி வாழும்இடங்கள் என்கிறது. (4 )

இவற்றோடு அரசமரத்தின் நிழல், விளாமரத்தின் அடி, விளக்கின் நிழல், மனிதர் நிழல், இருள், சாரமில்லாத அந்தணன் நிழல், உண்ட நீரின்எச்சில், ஆடை துவைத்த நீர், விளக்குமாற்றின் புழுதி, வெந்த சாம்பல், வேகாத கரிப்புழுதி, ஆட்டுத்தூசு ஆகியனவும் மூதேவிவாழிடங்களில் சிலவாக குறிப்பிடப்படுகின்றன. (5 )

மேலும், அவள் தனது கணவனான துசாக முனிவரால் கைவிடப்பட்டவளாகவும், உணவு, உறைவிடத்துக்காக அலைந்து திரிபவள் எனவும்,விஷ்ணுவின் கருணையைப் பெற்ற பின் விஷ்ணு பக்தர்களாலும், பெண்களாலும் உணவு படைக்கப்படுபவள் எனவும் லிங்க புராணம்விவரிக்கிறது. (6)

தமிழ் நிகண்டுகள் இவளைத் தவ்வை, காலடி, மூதேவி, காக்கைக் கொடியாள், கஸிதை வாகனத்தாள், முகடி, ஏகவேணி(ஒற்றைச்சடையாள்)என பல பெயர்களால் சுட்டுகின்றன. லிங்கபுராணம் இவளை லட்சுமி அல்லாதவள் என்று பொருள்பட அலெட்சுமி என்றும் அழைக்கிறது.தமிழ் நிகண்டுகள் இவளைத் திருவின்முன் செழுங்கடற் பிறந்தாள், திருவினுக்கு மூத்தாள் என்றும் அழைக்கின்றன. (7 )

இதே போன்று மூதேவியை லட்சுமிக்கு எதிர்வாகவும், சோம்பலின் வடிவாகவுமே வள்ளுவரும் பார்க்கிறார்.

மடி உளாள் மாமுகடி என்ப மடி இலான்

தாள் உளாள் தாமரையினாள் (அதி.62 ஆள்வினையுடைமை)

பார்ப்பனர்கள் துஷ்டர்களாக இருந்தாலும் வணங்கத்தக்கவர்களே, மாறாக அடித்தள மக்களான சூத்திரர்கள் நல்லவர்களாக இருந்தாலும்கீழ் மக்களே என்பதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் கற்பிக்க முயலும் பராசர ஸ்மிருதி,

பசுவொன்று துஷ்டத்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறது. குட்டிபோட்ட கழுதையொன்று சாதுவாகவும் வீட்டிலிருக்கிறது. இவ்விருமிருகங்களில் அறிஞன் பசுவை விட்டுவிட்டு கழுதையைக் கறந்து பாலைக் கிரகிப்பானா? என்று கேட்கிறது. (8)

இங்கே மேட்டிமையின் குறியீடாகக் காட்டப்படும் பசுவுக்கு எதிராக அடித்தள மக்களின் சார்பில் குட்டி போட்ட பெண் கழுதைகாட்டப்படுகிறது. மூதேவியின் வாகனம் கழுதை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் போரில் தோற்ற பகை அரசனை இழிவுபடுத்த வேண்டி அவனது நாட்டைக் கழுதை ஏர் பூட்டி உழுத இலக்கியச் செய்திகளும்,குற்றம் செய்தவர்களை இழிவுபடுத்தித் தண்டிப்பதற்காக அவர்களைக் கஸிதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருவது அண்மைக்காலம்வரை வழக்கமாக இருந்தது என்பதும், அத்தகைய தண்டனை பெற்றவர்கள் ஊர்ச்சபையின் வாரியப் பெருமக்களாக இருக்கத்தகுதியற்றவர்கள் என்று கூறும் உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கன. (9)

தமிழ் நிகண்டுகள் மூதேவியை கேட்டை, கெடலணங்கு, கேடி என அழைப்பதால் துன்பத்துக்கும், துரதிருஷ்டத்திற்கும், சோம்பலுக்கும், தீட்டுகண்ணேறு ஆகியவற்றுக்கும், அழுக்கிற்கும், அழகின்மைக்கும் குறியீடாக இன்றைக்கு ஆக்கப்பட்டிருக்கும் இத்தெய்வம் ஒரு காலத்தில்மக்களால் பரவலாக வழிபடப் பெற்றதாகும். பொதுவாக வழிபாட்டுச் சடங்குகளை இருவிதமாகப் பகுக்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள்.

ஒன்று வேண்டுதல் வழிபாடு மற்றொன்று விலக்குதல் வழிபாடு. திருமகளை வழிபடும் மக்களே மூதேவியையும் வழிபட்டது எதிர்மறைவழிபாட்டு முறையாகும் (விலக்குதல் வழிபாடு). மூதேவியே எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே என்றுவேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாட்டு முறை அமைந்ததாகும். (10 )

மேலும், சிறந்த கடவுளான திருமால் இருக்கையில் மூதேவியை வழிபடும் மக்களின் செய்கையைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கேலிசெய்வதிலிருந்தும்,

சேட்டை தன் மடியகத்துச்

செல்வம் பார்த்திருக்கின்றீரே!(தொண்டரடிப்பொடி திருமாலை-881)

இதனை நாம் அறிந்து கொள்ளலாம். துர்க்கைக்கும், ஜேஷ்டா தேவிக்கும் கி. பி.773 அளவில் திருப்பரங்குன்றத்தில் நக்கன் கொற்றி என்றபெண்ணால் தனித்தனிக் கோயில்கள் எடுக்கப்பட்டன என்ற கல்வெட்டுச் செய்தியும் இங்கு குறிப்பிடத்தகுந்தது ஆகும். (11)

கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை (கி.பி. 10, 11ம் நூற்றாண்டு வரை புலவர் தெ. இராசு) மக்களால் இத்தெய்வம் வழிபடப்பட்டு வந்தது.சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும், ஊரில் தனியாக மூதேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத்தனியாக சிற்ப சாத்திர நூல்கள் விரிவாகக் கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடு கி.பி.10, 11ம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும்பரவலாக இருந்தது. அதன் பின்னர் இத்தெய்வத்தின் நேரடி வழிபாடு பெருமளவு மறைந்தது. தற்போது ஒரு சில இடங்களில் மூதேவியின்கற்பிக்கப்பட்ட தன்மை தெரியாமல் வழிபடப்படுகிறது. (12)

சில இடங்களில் இத்தெய்வம் மூதேவியாக அறியப்படாமல் பல்வேறு உள்ளூர்ப் பெயர்களால் வழிபடப்படுகிறது. இன்னும் சிலஇடங்களில் இது உருமாற்றம் பெற்று கிராமத்துப் பந்தித் தெய்வப்பரிவாரங்களோடு ஒன்றாக ஆக்கப்பட்டு (ஐயனார் பரிவாரம் போன்றன)வழிபடப்படுகிறது. (13)

இவ்வாறு உருமாற்றம் பெற்ற ஒரு மூதேவி தெய்வம் மாகாளி சேஷ்டா தேவி என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம்முடிவைத்தானேந்தலில் வழிபடப்படுகிறது. (14 )

எனினும் துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும், சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாகக் கற்பிக்கப்பட்ட இத்தெய்வத்தின்நேரடியான(எதிர்மறை) வழிபாடு தற்போது சமூக உளவியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பழைய மூதேவி சிற்பமாகக் கருதப்படுவது செங்கற்பட்டு அருகில் உள்ள வல்லம் ஊரில் காணப்படுகிறது. இங்குகி.பி. 7ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில், இச்சிற்பம் காணப்படுகிறது.அங்கு நடுவில் சிவலிங்கமும் அதன் ஒரு புறம் பிள்ளையாரும் மறுபுறம் மூதேவியுமாக அச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. (15 )

மூதேவியைப் போலவே விநோதமான உருவமும், கிட்டத்தட்ட ஒத்த தன்மையும் உடைய தெய்வமே விக்கினஈசுவரன் என்ற கணபதிஆகும். (16 )

மூதேவிக்கும்கூட விக்கினபார்சாதா (vignaparshada) என்ற பெயர் உண்டு. (17)

மூதேவியின் வழிபாடு செல்வாக்கிழந்துவிட்ட இன்றைய நிலையில் கணபதி வழிபாடு பெருந்தெய்வ நெறிக்குள் (வைதீக நெறி) புகுந்து,மிகுந்த செல்வாக்குடன் திகழ்வதும், மூதேவி, கணபதி ஆகிய தெய்வங்களின் உறவும் தனி ஆய்வுக்குரியன. வைதீக எழுச்சிக்கு முன்வழிபடப்பட்ட பல வளமைத் தெய்வங்கள், பேரரசுகளின் உருவாக்கத்தின் போது வைதீகம் (அ) சமஸ்கிருத மரபுகளால் அழிக்கப்பட்டனஅல்லது தமதாக்கிக் கொள்ளப்பட்டன. இத்தகைய சமஸ்கிருத மயமாதலுக்கு ஆட்படாத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டன. மூதேவியும்இவ்விதமே இழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தெய்வத்தின் சிலைகளில் முப்புரிநூல் காணப்படாததும், கச்சை இல்லாத திரண்ட மார்பகங்களும் இவள் சமஸ்கிருத மரபை ஏற்காததிராவிடத் தொல்குடிகளின் வளமைத் தெய்வம் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இத்தெய்வம் வேதமரபுகளை ஏற்காததால் பெளத்தம்போன்ற அவைதீக மரபுக்குச் சென்றிருக்க வேண்டும். பின்னாளில் அரசுகளின் ஆதரவுடன் வைதீகம் நடத்திய மூர்க்கமான பண்பாட்டுத்தாக்குதலால் அவைதீக மரபுகள் செல்வாக்கிழந்த போது மூதேவி தெய்வமும் இழிவுக்குள்ளாகியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. (18 )

இத் தெய்வம் வைதீக மரபுகளை ஏற்காது என்ற லிங்கபுராணச் செய்தி போன்றன இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றைய வாழ்வியலில்கழுதை என்பது வண்ணார் சாதியாரின் தொழிலோடு உறவுடைய உயிரினமாக மட்டுமே கருதப்படுகிறது. மேலும், வண்ணார்கள் தங்கள்தொழிற்களமான வெள்ளாவி அடுப்புக்கும் பொங்கல் வைக்கும் பழக்கம் உடையவர்கள். பழைய கற்சிலைகளில் மூதேவியின்உருவத்தோடு மாட்டு முகம் கொண்ட ஆண் உருவம் இருப்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. இதுவே வண்ணார்கள் வழிபடும் மாடனாகஇருக்கலாம். மேலும், முள்ளிக்குளத்தில் வண்ணார் சமூகப் பெண்கள் மத்தியில் மாடத்தி நல்லமாடத்தி என்ற பெயர்கள் இன்றும் பெருவழக்காக உள்ளன. மேலும் வண்ணார்கள் வழிபடும் மாடனை வண்ணார மாடன் எனப் பரவலாக அழைக்கின்றனர். இவ்வாறு வேறுசாதிப்பெயர்கள் மாடன் தெய்வத்துக்கு முன்னெட்டாக வருவது தென்தமிழகத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (வண்ணார்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வழிபடும் மாடனை வண்ணாரமாடன் எனச் சாதி முன்னொட்டுச் சொல்லி அழைக்க இக்காலத்தில்விரும்பவில்லை. மற்ற சாதியினரே அவ்வாறு அழைக்கின்றனர். மாடன்(அ)மாடசாமி என அழைப்பதையே வண்ணார்கள்விரும்புகின்றனர்.)

சமூக மோதல்களில் கொலையுண்டவர்களையே மாடன் என வழிபடுகின்றனர் என்பது நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்.சிவசுப்பிரமணியம் போன்றவர்களின் கருத்து ஆகும். (19)

மாடன்வகைத் தெய்வங்களே 31க்கும் மேற்பட்டு உள்ளன. இவற்றைச் சில பொதுவான காரணங்கள் கொண்டு வகைப்படுத்தலாம். 1.சுடலைமாடன் வில்லிசைக் கதையில் வருவன. 2.ஊரின் பெயரை வைத்து அழைக்கப்படுவன. 3.கொலை, விபத்து போன்ற காரணங்களால்சுடலை மாடனாக குறிக்கப்படுவன என்று மூன்று வகையாகப் பேரா. அ.க. பெருமாள் இத்தெய்வங்களை வரையறை செய்ய முயல்கிறார்.(20) மேற்குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குள் அடங்காத தெய்வமாக வண்ணார மாடனை இவ்வாய்வு கருதுகிறது. மேலும் வண்ணார்களேஆதி கடவுளான புலைமாடன் தொடங்கி (21) தளவாய்மாடன், சுடலைமாடன், சப்பாணிமாடன் போன்ற பல மாடன் தெய்வங்களைவழிபடுகின்றனர் (22) என்பதும் கள ஆய்வில் தெரியவந்தது.

எனவே, மாடன் வகைகளுள், வண்ணார்கள் வழிபடும் மாட்டுத்தலை கொண்ட வண்ணார மாடனே, மூதேவியுடன் மாட்டுத்தலையுடன்காணப்படும் அவள் மகன் மாந்திகனாக இருக்கலாம் என இந்த ஆய்வு கருதுகிறது. மேலும், வெள்ளாவிப் பொங்கல் பற்றிக் கூறும்வண்ணார் சமூகத்தவர் ஒருவர், வெள்ளாவிப் பொங்கல் என்பது மாடசாமிக்குத்தான். வண்ணாரமாடன் என்பதும் அதுதான், (23) எனக்குறிப்பிடுவது இக்கருதுகோளை உறுதிப்படுத்துகின்றது.

மேலும் வன்னிக்கோனேந்தல் அருகில் உள்ள வண்ணார்கள் வழிபடும் சுடலைமாடன் கோயில் வளாகத்தில் கழுதை வாகனம் கொண்டபெண் தெய்வத்தின் சிலை ஒன்று உள்ளது என்றும், (24) எப்போதுவென்றான் அருகே உள்ள அருகன்குளத்தில் வண்ணார மாடசாமிகோயிலில் விழாக்காலங்களில் கழுதை முகம் கொண்ட பெண் தெய்வம் வழிபடப்படுகிறது என்றும், (25) மேலச்சாத்தான்குளம் அருகில்விஜயரங்கபுரத்தில் அழுக்கு மூட்டை சுமந்தபடி ஒரு வண்ணாரமாடத்தியின் உருவம் ஓவியமாக உள்ளது என்றும் தகவலாளிகள்தெரிவிக்கின்றனர்.(26)

தமிழில் வண்ணம் என்றால் அழகு என்று பொருள். அழுக்கானவற்றை வண்ணமாக்குவது என்ற பொருளில்தான் சலவைத் தொழிலாளருக்குவண்ணார் என்று பெயர் வந்ததாக எச்.எ. ஸ்டூவார்ட் குறிப்பிடுகிறார். (27) புராணக்கதைகளின்படி பிரஜாபதியான தட்சன் சிவனைமதிக்காமல் நடத்திய யாகத்தைத் தடை செய்யும் போது பலரைக் கொன்றதால் அந்தப் பாவத்துக்கு கழுவாயாக வீரபத்திரனைச் சிவன்மனிதர்களின் உடைகளைச் சுத்தம் செய்யச் சொன்னார். தமிழ் வண்ணார்களின் பெயர்களில் வீரபத்திரன் என்ற பெயர் அதிகமாகக்காணப்படுவதனை இக்கதையுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டும்.

வண்ணார் சாதி அடித்தள சாதிகளில் ஒன்றாகவும், சேவைச்சாதியாகவும், கற்பிக்கப்பட்டுள்ளது. ஊர்மக்களின் அழுக்கு உடைகளை சுத்தம்செய்வதோடு அல்லாமல் தீட்டுக்குரியனவாக கருதப்படும் பூப்பெய்திய பெண்கள், பிள்ளைபெற்ற பெண்கள், இறந்தவர்கள் ஆகியோரின்உடைகளை சுத்தம் செய்வது போன்ற இவர்களின் மீதான வைதீக ஒடுக்குமுறை இவர்களைச் சில நிலைகளில் தீட்டுக்குரிய சாதியினராகஇழிவுபடுத்துகின்றது. இவர்களில் ஒரு பிரிவினர் தீண்டத்தகாத மக்கள் எனக் கற்பிக்கப்பட்டுள்ள அடித்தள மக்களின் துணிகளைச் சுத்தம்செய்பவர்களாக உள்ளனர். இவர்கள் புரத வண்ணார் என அழைக்கப்பட்டு, பார்க்கவும், அணுகவும் கூடாதவர்களாகக் கற்பிக்கப்பட்டுவண்ணார்களிலேயே கீழ்சாதியினராகவும் கருதப்பட்டு வந்தனர். (28)

சுருக்கமாக சொல்லப்போனால், வருணாச்சிரம சமூக அடுக்கில் இன்னமும் வைதீக மயமாகாத, சாதீய மதிப்பைப் பெறாத அடித்தளமக்களின் சாதிகளுள் வண்ணார் சாதியும் ஒன்று.

மழைச்சடங்குகளையும், குறிப்பாக முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கையும், பொதுவாக வண்ணார் சாதியையும் குறிப்பாக இம்மழைச்செம்புச் சடங்கில் அவர்களின் பங்கையும், மூதேவி என்கிற வளமைத் தெய்வத்தின் தன்மைகளையும் தொகுத்து ஆராய்கின்ற போதுவண்ணார் சாதிக்கும், மூதேவி எனும் தெய்வத்துக்கும் கற்பிக்கப்பட்ட ஒரு உறவுநிலை இருப்பதாகத் தோன்றுகிறது. வேறுசில ஆதாரங்களும்இக்கருத்தை அரண் செய்கின்றன.

அழகின்மையின் குறியீடாகவும், புனிதமற்றதாகவும், கண்ணேறு கழிப்புக்குரிய உருவமாகவும், சிலநிலைகளில் இழவுக்குறிப்பாகவும், சிலஇடங்களில் மழை வேண்டிச் செய்யப்படும் சடங்கில் பயன்படுத்தப்படுவதுமாகிய கழுதை, மூதேவியின் வாகனம் என்பதும் தொழில்அடிப்படையில் அது வண்ணார் சமூகத்துடன் மட்டுமே பெருமளவு தொடர்புடையது என்பதும் குறிக்கத்தக்கன. இவ்வாய்வாளரின் களஆய்வின் போது வண்ணார் சமூகத்தவர் சிலர் கழுதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, கழுதை ஒரு வாகனம் என்றனர். (29) மேலும், தேவர்சமூகப் பெரியவர் ஒருவரும், கழுதை ஒரு வாகனம் எனவே அதை அடிக்கக் கூடாது என்றார்.(30) ஆனால் அது எந்தத் தெய்வத்தின்வாகனம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வாகனம் என்பது பொது நிலையில் ஊர்திகளையும், சமயநிலையில் தெய்வங்கள்ஏறிவரும் ஊர்திகளையும் குறிக்கப்பயன்படும் சொல், என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும், கள ஆய்வின்போது வண்ணார் சமூகப் பெரியவர் ஒருவர் கழுதையின் அதிர்ஷ்டச் சிறப்புகளை விவரிக்கும்போது, அவ(கழுதை) எதுக்க வந்தாலே சீதேவிதான் என்றார்.(31) துரதிருஷ்டத்துக்கு உரியவளான மூதேவியின் வாகனமான கழுதையை இங்குபெண்ணாகப் பார்ப்பதும், எதிர்கலாச்சார அடிப்படையில் சீதேவியாகப் பார்ப்பதும் குறிக்கத்தக்கன.

குடும்ப நிகழ்வுகளின் போதும், உரையாடலின் போதும் கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பது எல்லா சாதி மக்களிடமும் காணப்படும்நம்பிக்கையாகும். மேலும், வண்ணார மாடன் கோயில் குறித்துப் பிறசாதி மக்களிடையே அச்ச உணர்வு நிலவுவதைக் கள ஆய்வில் பார்க்கமுடிந்தது. சில இடங்களில் (வண்ணார) மாடனின் முன்னெட்டாக வரும் நல்லமாடன் என்ற பெயரையும் இங்கு எதிர்கலாச்சாரஅடிப்படையில் பார்க்க இயலும்.

மூதேவியின் கொடியான காக்கை அபிதான சிந்தாமணியாலும், (32) பொது வழக்காலும் துப்புரவுப் பணியோடு தொடர்புபடுத்தப்பட்டுஊர்த்தோட்டி என அழைக்கப்படுகிறது. மூதேவியின் பல பெயர்களுள் ஏகவேணி என்பதும் ஒன்று. ஏகவேணி என்றால் ஒற்றைச்சடையாள் என்று பொருள். வண்ணார்களுக்கு ஏகாலிகள் என்றே பெயர் உண்டு. ஒற்றைக்கால் என்பது இதன் பொருள். ஒத்தச்சடை,இரட்டைச்சடை என்பதைப் பொது வழக்காக ஒத்தைக்கால், இரட்டைக்கால் என்று வழங்குவதை நோக்க வேண்டும்.

வண்ணார்கள் தங்களின் துணிகள் வெள்ளாவியில் எரிந்து போகாமல் இருக்கவும், மழை பெய்து வளம் பெருகவும் வெள்ளாவி அடுப்புக்குமுன் வெள்ளாவிப் பொங்கல் இடும் வழக்கம் கொண்டவர்கள்.(33) மூதேவிக்கு ஜலமாயா என்ற பெயர் உண்டு என்பதும், மூதேவிவாழிடங்களில் ஆடை துவைத்த நீரும் ஒன்று என்பதும் நோக்கத்தக்கது. கள ஆய்வில், வண்ணார் சமூகப் பெரியவர் ஒருவர்வெள்ளாவிப்பொங்கல் என்பது மாடசாமிக்குத்தான், வண்ணாரமாடன் என்பதும் அந்த மாடசாமிதான், என்றது மீளவும் இங்கு நினைக்கத்தக்கது. இதன் தொடர்பில் வெள்ளாவிப் பொங்கலும் தனி ஆய்வுக்குரியது.

மழைச் சடங்குகளில் ஒன்றான கொடும்பாவி கட்டி எரித்தலில், இதன் தொடர்பில் ஒரு புதிய ஐயம் எழுந்துள்ளது. கொடும்பாவி என்பதுயாரைக் குறிக்கின்றது? என்பதே அது.

கொடும்பாவி சாகாளோ

கோடிமழை பெய்யாதோ!(34)

கொடும்பாவி சண்டாளி

ஒரு மழை பெய்யாதோ! (35)

என்று வருகிற கொடும்பாவி எரிப்புப் பாடல்களின் மூலம் கொடும்பாவியைப் பெண்ணாகவே பார்க்கின்றனர் என்பதும்,

கொடும்பாவி சாகாளோ

கோடிமழை பெய்யாதோ!

நாசகாரி சாகாளோ

நல்ல மழை பெய்யாதோ!

மூதேவி சாகாளோ

முழு வெள்ளம் பாயாதோ!

என்ற மழைச் சடங்குப் பாட்டின் (36) மூலம் இது போன்ற பாடல்களில் பெண்ணாகச் சுட்டப்படுபவள் மூதேவியே என்பதும்தெரியவருகிறது.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி எனும் ஊரில் கொடும்பாவியைக் கட்டி, விளக்குமாற்றால் அடித்து இழுத்து, மயானத்தில் வைத்துஎரித்துப் பின்னர் அதோடு தொடர்புடைய சடங்குப் பொருட்கள் மற்றும் துணி முதலியவற்றை வண்ணாருக்குக் கொடுக்கின்றனர் என்பதுதகவலாளிகள் மூலம் தெரிய வருகிறது. (37)

நெல்லை ராமையன்பட்டி அருகேயுள்ள சேதுராயன் புதூரில் நடைபெறும் கொடும்பாவி எரிப்பு மழைச்சடங்கில். கொடும்பாவியைஇழுத்து வரும்போது அதோடு கழுதை ஒன்றையும் ஊர்வலமாக இழுத்துவருவர். ஊர்ப் பொது இடத்தில் கொடும்பாவியை எரித்த பின்னர்,கழுதையின் காதில் தேங்காய்ச் சிரட்டையைக் கவ்வக்கொடுப்பர். (தேங்காய் அப்புறப்படுத்தப்பட்ட கனத்த சிரட்டையில் சிறிய பிளவைஏற்படுத்துவர். பிறகு அந்த கீறல் விழுந்த சிரட்டையை கழுதையின் காதில் கிளிப் போன்று பற்றிக்கொள்ளச்(கவ்விக் கொள்ள) செய்வர்.விசையுடன் பற்றிக்கொள்ளும் சிரட்டை, காதில் வலியை ஏற்படுத்துவதால் கழுதை கத்திக்கொண்டே ஓடும். இதனையே சிரட்டையைகவ்வக் கொடுத்தல் என்கின்றனர்.) அதனால் அது கத்திக்கொண்டே ஓடும்.

இவ்வூரில் கணிசமான மக்கள் தலித்துக்கள். இவர்களுக்குச் சேவைச் சாதியினராக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளின்வண்ணார்களான தீண்டா வண்ணார் எனப்படும் புரத வண்ணார் ஆவர். கொடும்பாவி எரிப்பு முடிந்ததும் ஊர் மக்கள் பகிர்ந்து கொண்டதுபோக மீதமுள்ள ஊர்ச் சோற்றை இப்புரத வண்ணார்களே எடுத்துக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(38)

கோவில்பட்டி அருகே கீழ வைப்பாறு ஊரில் மழைச் சடங்கில் பாடப்படும் பாடல் ஒன்று

எங்க காட்டுக்கும் பெய்யும் மழை

எருக்கலங்காட்டுக்கும் பெய்யும் மழை

வண்ணாத்தி வாசலிலே

வந்து வளத்தோடு பெய்யும் மழை! (39) என்கிறது.

எருக்கு (அ) கள்ளி என்பது ஒரு நிலையில் வறட்சியோடும், பஞ்சத்தோடும், வெறுமையோடும் தொடர்புடையது. முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கிலும், கீழ வைப்பாறு மழைச் சடங்குப் பாட்டிலும் எருக்கு காணப்படுவதோடு, அது வண்ணார் சமூகப் பெண்ணோடும்தொடர்புபடுத்தப்படுவது குறிக்கத்தக்கது. குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் உள்ள மீனவர் பகுதிகளில், தோசம் பிடித்த (மீன்)வலையைக் கடற்கரையில் வைத்து நடு இரவில் எருக்கம் இலையை எடுத்து, வயது வந்த ஆண்கள் நிர்வாணமாக நின்று கெட்டவார்த்தைகள் ஏசி வலையை சுற்றிச்சுற்றி அடிப்பார்கள். இதனால் வலையைப் பிடித்த தோசம் நீங்கிவிடுவதாக நம்புகிறார்கள் (40) என்றசெய்தியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கில் பெண்கள் மட்டுமே பங்கு பெறுவதும், அதில் பங்கெடுக்கும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவரும்பெண்ணாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அச்சடங்கின் ஒரு பகுதியாக அப்பெண் எருக்கலங்குச்சியால் அடித்துவிரட்டப்படுவது போன்ற பாவனைக்கு உள்ளாகி வடதிசை நோக்கி போய்விடுவார் என்பதை முன்பே கண்டோம். மூதேவிக்கு உரிய திசைவடமேற்கு திசையாகும். சிவன் கோயில் பிரகாரங்கள் சிலவற்றில் அவளுக்கு வடமேற்கு மூலையில்தான் சன்னதி அமைந்திருக்கும் என்றுஆகமங்கள் கூறுகின்றன. மேலும், வடமேற்கு திசைக்கு உரியவள் என்று பொருள்படும் நிருதி என்ற பெயரும் மூதேவிக்கு உண்டு என்றபுராணச் செய்தியையும், மழைச் செம்புச் சடங்கில் நிகழ்த்தப்படும் பாவனையையும் ஒப்பு நோக்க வேண்டும்.(41)

தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை பெய்தால், மழையை நிறுத்த வேண்டியும் சில சடங்குகள்செய்யப்படுகின்றன. அப்போது பெண்கள் விளக்குமாறுகளை வானத்தை நோக்கிக் காட்டுகின்றனர். (42) விளக்குமாறு மூதேவியின்கைக்கருவி என்பது நோக்கத்தக்கது. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்புபடுத்தி, பல நாள் மூதேவியைத்தாங்கலாம், ஒரு நாள் சீதேவியைத் தாங்கமுடியாது என வழங்கும் நாட்டார் நம்பிக்கையும் (43) இங்கு கருதத்தக்கது.

முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கில் எருக்கலங்குச்சியால் அடித்து விரட்டப்படுவது போன்ற பாவனைக்கு உள்ளாகின்ற வண்ணார்சமூகப் பெண், மூதேவியின் கற்பிக்கப்பட்ட பதிலியே என இவ்வாய்வு கருதுகிறது. இதன் மூலம் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டஅவைதீகப் பெண் தெய்வமான மூதேவி, சமூக இழிவுக்குள்ளான, இன்னமும் முழுமையாக வைதீகமயமாகாத அடித்தளச் சாதிகளுள்ஒன்றான வண்ணார் சாதியோடு தொடர்புடையதாகக் கற்பிக்கப்பட்டுள்ளது என்ற புதிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.

கற்பிக்கப்பட்ட மூதேவி வண்ணார் சமூகத்தொடர்பு என்பது நேரடியாக அல்லாமல் குறியீட்டு அளவிலும், சடங்கு வடிவத்திலும்காணப்படுகிறது. மழைச் செம்புச் சடங்கும், அதில் வண்ணார் சமூகப் பெண் பெறும் இடமும், அவைதீக தெய்வமான மூதேவியின்தன்மையும், அவைதீக சாதியான வண்ணார் பற்றிய செய்திகளும் அம்மூன்றுக்கும் உள்ள சடங்கு மற்றும் குறியீட்டு அடிப்படையிலானகற்பிக்கப்பட்ட உறவை வெளிப்படுத்துகின்றன.

மூதேவியின் வாகனமும், வண்ணார்கள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்துவதுமாகிய கஸிதை அவைதீக தெய்வத்தின் வாகனம் என்பதால்வைதீக மரபால் இழிவு படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. மழைச் சடங்கில் இழிவு படுத்தப்பட்டு எரிக்கப்படும் கொடும்பாவி என்பதுமூதேவியே என்ற சில புதிய கருத்துக்களையும் இவ்வாய்வு நிறுவுகின்றது. இப்புதிய செய்திகளுடன், தமிழ்நாட்டில் சில இடங்களில் மூதேவிதெய்வமானது உருமாற்றத்துக்குள்ளாகி காளி போன்ற நாட்டார் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டு இன்றும் வழிபாட்டில் உள்ளது என்றசெய்தியையும் இங்கு இணைத்துப்பார்ப்பது என்பது, தமிழ் நிலப்பகுதிகளில், நாட்டார் பண்பாட்டில் ஜேஷ்டா தேவியின் தோற்றம் குறித்துஏதுமில்லை. எனவே நாட்டார் தெய்வங்களுக்கிடையே அவள் உருவமும் காணப்படவில்லை (44) என்கிற பேரா. ஆர். வெங்கட்ராமனின்கருத்து தவறானது என்ற முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன. கள ஆய்வுகளுள், திரட்டப்பட்ட தகவல்களும் இதனையே உறுதிசெய்கின்றன.

இனக்குழுக் கால வளமைத் தெய்வங்களில் பல பின்னர் தோன்றிய நிலவுடமைச் சமூகத்தில் தேவையற்றதாக உணரப்பட்டன. எனவேஅவை புறந்தள்ளப்பட்டு, இழிவுக்குள்ளாக்கப்பட்டன. இந்தியச் சூழலில் நிலவுடமையின் தோற்றத்தோடு பிறந்ததும், அதனைநியாயப்படுத்தும் தத்துவ அரணாக விளங்குவதும் வருணாசிரம மரபே ஆகும். இம்மரபே இங்கு நிலவிய இனக்குழு, வளமைத்தெய்வங்களைத் தன் காலடியின் கீழ் கொண்டு வந்தது. மேலும், வருணாசிரம மயமாதலுக்கு உள்ளாகாத தெய்வங்களை இழிவுபடுத்தியதுஎன்பன போன்ற வரலாற்றுச் செய்திகள் இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதே வேளையில் அடித்தள வெகு மக்கள் மரபை ஒரு ஆதிக்க மரபு ஒடுக்கும்போது, ஒடுக்கப்படுகின்ற மரபானது அதன்அடையாளங்களை முற்றிலும் இழந்துவிடுவதில்லை. அதன் எச்சங்கள் சில ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இங்கே,வருணாசிரம ஆதிக்க மரபின் ஒடுக்க முறைக்கு உள்ளான, அவைதீக மரபான மூதேவி வழிபாடு, முற்றிலும் தன் அடையாளங்களை இழந்துவிடவில்லை. மாறாக மழைச் செம்புச் சடங்கு, கொடும்பாவி எரிப்பு என்பன போன்ற நாட்டார் சடங்குகளிலும், குறியீடுகளிலும் இன்னமும்வாழ்ந்து கொண்டுள்ளது என்பதும் இவ்வாய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

வைதீக மரபு, சமூகமனிதனைத் தனிமனிதனாக மாற்றுவதன் மூலம் அவனை வைதீக மயப்படுகிறது. அவைதீக மரபு, இனக்குழு மரபின்தொடர்ச்சியான கூட்டு வழிபாட்டைப் பேணுவதன் மூலம் சமூக உணர்வைத் தனி மனிதர்களிடம் ஏற்படுத்துகிறது என்கிற வரலாற்றுஉண்மைக்கும் இம் மழைச் செம்புச் சடங்கு மூதேவி வழிபாடு சான்றாக இருக்கிறது.

வருணாசிரம அழுக்கின் பிரதிநிதியாக மூதேவியையும், தூய்மை (அ) செழிப்பின் (சுத்தம், விருத்தி) பிரதிநிதியாக லட்சுமியையும் இன்றுஎதிரெதிராக நிறுத்தியுள்ளது. ஆனால் ஒரு காலத்தில், அழுக்கின் தெய்வமாக இப்போது கருதப்படும் மூதேவியே வளமையின்மூலத்தெய்வமாகவும் இருந்துள்ளது. மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் கழிவுகளே அழுக்கு என்றபெயரால் சுட்டப்படுகின்றன. அழுக்கு என்ற சொல் அழுகச் செய்யப்படுவது என்ற பொருளையே உணர்த்துவதாகும். இந்த அழுகல்என்ற நிகழ்வு மண்ணும் மற்ற இயக்கச் சக்திகளும், காலம் என்கிற பரிமாணத்தோடு கூடி அழுக்குகளின் மீது நிகழ்த்தும் வேதியியல்வினையாகும். இந்த வேதியியல் வினையின் விளைவாக மண்ணில் மூலவளம் (சாரம்) தன்னைக் காத்துக் கொள்கிறது. பெருக்கிக்கொள்கிறது. மண்ணில் மூல வளமாகிய உரச்சாரமே பயிர்களின் பெருக்கத்திற்கும் பிற அசை உயிர்களின் பெருக்கத்திற்கும் காரணமாகஅமைகின்றது.

வேறுவகையில் சொல்வதனால் பயிர்களும், உயிர்களுமாகிய செல்வங்களின் மூலவடிவம் உரமாகும். உரத்தின் மூலவடிவம் அழுக்காகும்.பழஞ்சமூகம் வேளாண் உற்பத்தியை மையமிட்டு நிலமானிய மதிப்பீடுகளைக் கொண்டதாகும். பழைய தெய்வங்களும் நிலமானியஉற்பத்தி முறைகளின் வெளிப்பாடுகளாகத்தான் அமைகின்றன. எனவே உயிர் வளர்ச்சியினையும், பயிர்வளர்ச்சியினையும் உருவாக்கும்-அடையாளப்படுத்தும் திரு (அ) லட்சுமியினைத் தங்கையாக்கி, அதற்குரிய மூலவளம் சேர்க்கும் உரத்தின் தெய்வத்தை தமக்கையாக (மூத்ததேவி) மூதேவி என்று அடையாளப்படுத்தினர். இது காலம் என்ற உறுதிப் பொருளினை (பிரமாணத்தை) அடிப்படையாகக்கொண்டதாகும்.

உரம் பயிராகும் கால இடைவெளியே தமக்கைக்கும், தங்கைக்கும் மூத்ததேவிக்கும், இளைய தேவிக்கும் அலெட்சுமிக்கும், லெட்சுமிக்கும்இடையிலுள்ள வேறுபாடாகும். எனவே, இந்த ஆராய்ச்சி முடிவின்படி, மூதேவியை அழுக்கின் தெய்வம் என்றதை எழுத்து மரபு சார்ந்தபார்ப்பனிய ஒடுக்குமுறைக் கருத்தியலாகவே பார்க்க முடிகின்றது. எனவேதான் பல்லவ அரசின் தொடக்கக் காலத்தில் மூதேவிபெருந்தெய்வக் கோவில்களில் பரிவாரத் தேவதையாக இருந்த போதிலும், பின்னர் சோழர்களின் பேரரசு தோன்றியபோது வைதீகநெறியாளர்களால் கோவிலுக்கு புறமாகத் தள்ளப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.

இதனை உறுதி செய்யும் சில சான்றுகளையும் கள ஆய்வில் காண முடிகின்றது. கார்த்திகைத் திருவிழாவின் போது பாண்டிச்சேரி-தென்னார்க்காடு பகுதிகளில் சில இடங்களில் உரக்குழி எனப்படும் குப்பைக் கிடங்குகளில் அகல்விளக்குகளை ஏற்றி, அதனைக் குப்பைநாச்சியார் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.(45) நாச்சியார் என்ற பெயர் உயர்குடிப்பெண்களையும், திருமகளின் குறியீடானதிருவிளக்கையும் குறிக்க வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. மேலும், செயங்கொண்டம் அருகில் உள்ள உதயநத்தம் என்ற ஊரில்குப்பைக் குழியில் விளக்கு வைத்து வழிபடுவதுடன், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டின் குப்பை குழியைப் பார்த்துஅவர்களின் செல்வ மதிப்பை அளவிடும் வழக்கமும் உள்ளது.(46)

மேலும், முள்ளிக்குளத்தில் நடைபெறும் மழைச் செம்புச் சடங்கில் எருத்துண்டு(வறட்டி) இடம் பெறுவதும், அவ்வூரில் குப்பை முத்துகுப்பை என்ற பெயர்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதும் குறிப்பிடத் தகுந்தது. மேலும் குப்பம்மாள் குப்பச்சி என்ற பெயர்கள் நெல்லைமாவட்டத்தில் வழக்கில் உள்ளவை ஆகும்.

இயற்கையின் இயங்கியல் போக்கில் ஏற்படுகின்ற இத்தகைய சிதைவு மற்றும் வளர்ச்சிப் போக்கினை வருணாசிரமம் உள்வாங்கிக்கொண்டது. அதனை அழுக்கு X தூய்மை என்கிற எதிர்வாக கற்பித்தது, ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான - இசைவான இப்போக்கினை, தன்ஆதிக்கத்தினை நிலைநாட்டும் பொருட்டே ஒன்றுக்கொன்று எதிர்வானதாகக் கற்பித்தது.

அழுக்கு X தூய்மை என்ற இந்த எதிர்வினை, காலநியமம், தேச(இட) நியமம், அதிகாரி (பிறப்பு வழி மேன்மை) நியமம், பல(வலிமை)நியமம் ஆகியவற்றைக் கொண்டு உடலுழைப்பை இழிவானதாகக் கருதும் சமூக உளவியலை உருவாக்கப் பயன்படுத்தியது. மூதேவிவழிபாட்டின் மறைவு அதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்கும் பண்பாட்டு வன்முறைகள் ஆதிக்க சக்திகளால் முனைப்புடன் நடத்தப்பட்டு வரும்இந்நாளில் அவைதீகத் தெய்வங்கள் மற்றும் அடித்தள.அவைதீகச் சாதிகளின் உறவும், தொடர்பும் விரிந்த ஆய்வுக்குரியன. ஒருபரந்துபட்ட களத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டாரம் அல்லது ஒரு குறிப்பிட்டசாதியை வரையறுத்துக் கொண்டு இந்த ஆய்வு தொடரப்படுமானால் பல புதிய உண்மைகள் வெளிவரக்கூடும்.

மேற்கோள்கள்:

1. . சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், மக்கள் வெளியீடு, 1999, சென்னை. பக்-3

2. மழைச் செம்புச் சடங்கு பற்றிய தகவல் அளித்தவர்கள்

வெ.திலட்சுதி, 69 (கோனார்) முள்ளிக்குளம்

சி.திலகவதி, 59(கோனார்) முள்ளிக்குளம்

லட்சுமி, 63(கோனார்) முள்ளிக்குளம்

கு.பாண்டியன், 59(கோனார்) முள்ளிக்குளம்

கோமதி,65(வண்ணார்) முள்ளிக்குளம்

3. பேனும் பெண்ணும், ஆனந்த விகடன் 15-04-2001

4. T.A.Gobinatharao.Elements Of Hindu Iconography Vol-I Part II. Page 390-399

5. புலவர் செ.இராசு, தமிழர் மறந்த தனித்தெய்வம், ஆய்வுக்கோவை, தொகுதி-3, 1988, பக்.96-99

6. T.A.Gobinatharao,Page. 390-399

7. மு. சண்முகம்பிள்ளை, நிகண்டுச் சொற்பொருள் கோவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1982

8. கு. நெடுஞ்செழியன்- பேரா.சக்குபாய், 1996, சமுகநீதி, மனிதம் பதிப்பகம்,திருச்சி

9. இரா.நாகசாமி(பதி) 1983, மதுரை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, தொகுதி3, வரலாற்றுப் பேரவை சென்னை 18, பக்29-30

10. புலவர் செ.இராசு, பக்96-99

11. A.R.37 Of 1908,Thirupparankundram S.I.I Vol XIV

12, புலவர் செ.இராசு, பக்96-99

13. K.G. Krishnan, Jyeshta - A forgotten Deity, studies in south indian history and geography, New Erapublications,1981, Madras, page. 1518

14. மு.இராமசாமி, நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு, ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர், 1976, பக்28

15. தி.நா.சுப்பிரமணியன், ஜ்யேஷ்டா தேவி, கலைமகள், 1944 மார்கழி. பக் 290.

16.K.Damodaran, (Ed) Jyeshta cult - an overview tamilnadu archaelogical perspective, Dept of archaelogy, 1999,Govt.of.Tamilnadu, Chennai, page 110-116.

17.K.G. Krishnan,1981, page-18

18. சொ. சாந்தலிங்கம், தமிழகத்தில் ஜேஷ்டாதேவி வழிபாடு, ஞானசம்பந்தம், தருமையாதீன

திங்களிதழ், 1-0-1--03. பக்-62--63

19. தகவலாளி பேரா. .சிவசுப்பிரமணியன் தூத்துக்குடி. 4-6-2001.

20. அ.கா. பெருமாள், 1992 தொல் பழம் சமயக்கூறுகள், பயோனியர் புக் சர்வீஸ், சென்னை - 5. பக் 135.

21. தகவலாளி சுடலை முத்து 45,(வண்ணார்) வண்ணாரமாடன் கோவில் சாமி கொண்டாடி, சின்னசங்கரன் கோவில், அம்பாசமுத்திரம்.21-4-2001.(கள ஆய்வு உதவி) யு.சுப்பிரமணியன் (ஊர்க்காடு), எஸ். கிருஷ்ணன் (அம்பை), ம.தி.தா.இந்துக்கல்லூரி மாணவர்கள்.

22. கள ஆய்வு, 2-4-2000 வண்ணாரமாடன் கோவில், வேட்ரம்பட்டி, புளியங்குடி(களய்வு உதவி) சு. சக்திவேல், (சிங்கிலிப்பட்டி)ம.தி.தா.இந்துக் கல்லூரி மாணவர். வண்ணாரமாடன் கோவில், சின்னசங்கரன் கோவில், அம்பை-21-4-2000.

23. தகவலாளி மா.மாரியப்பன்.50(வண்ணார்) பீ.பீ.குளம், மதுரை.9 - 6-2001.

24. தகவலாளி சண்முகம் 48 (வண்ணார்) குருக்கள்பட்டி

25. தகவலாளி முருகேசன் 45 (வண்ணார்) பெருமாள்புரம், திருநெல்வேலி

26. தகவலாளி முனைவர் வே.கட்டளைகைலாசம் 45 ம.தி.தா.இந்துக்கல்லூரி நெல்லை.

27.Edger thurston, " vannan" Caste and tribes of south india Vol- VII page 315-321

28. தகவலாளி பேரா.தொ.பரமசிவன் 52, திருநெல்வேலி. 1-5-2000

29. தகவலாளி பிச்சை 75,( வண்ணார்) , லெட்சுமி 70(வண்ணார்), சுரண்டை 2-9-2000.

30. தகவலாளி பூசாரி என்ற கண்ணப்பத்தேவர் 75, ஊர்க்காடு, 21-4-2000.

31.தகவலாளி சுப்பையா 65(வண்ணார்) வண்ணாரமாடன் கோவில் பூசாரி வேட்ரம்பட்டி 2-4-2000.

32. .சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, AES, சென்னை.1988.

33. முனைவர் த. கருப்பையா, தென்தமிழகத்தில் மதுரைவீரன் வழிபாடும், கதைப்பாடலும், முனைவர் பட்ட ஆய்வேடு, 1997--98,காந்திகிராம பல்கலைக்கழகம், காந்திகிராமம். பக்-182.

34.வீ.மீ. ஞானப்பிரகாசம் - க.ப. அறவாணன்(பதி), 1974, நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள். பக்-41.

35. தே. லூர்து 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், தொகுதி 1, பக் 222. பாரிவேள் பதிப்பகம், நெல்லை.

36. த.ந.ஜெயச்சந்திரன், மேய்ப்பனும், மேய்ச்சல் நிலமும் , குமுதம் 29-6-2000

37. தகவலாளி செ. முத்துக்கனி, 25, வரலாற்று ஆய்வாளர், பாளையங்கோட்டை.

38. தகவலாளி மா.பரதன்,42(பள்ளர்) சேதுராயன்புதூர், திருநெல்வேலி

39. தே.லூர்து,1981 பக்220-221

40. ஏ.ஜார்ஜ், மீனவர் தொழில் சடங்கு முறைகள்,பாரதி விழா சிறப்பு மலர்,1988, கலை இலக்கிய பெருமன்றம், குமரி மாவட்டம்

41. தி.நா.சுப்பிரமணியன்,1944, பக்289

42. தே.லூர்து,1981 பக்229

43. வீர.அசோகன், வழக்காற்றில் மழை, ஆய்வுக்கோவை,தொகுதி 3, 1981, பக்510

44. N.Subramanian(Ed) Jyeshtha Devi - An astronamical clue to a fallen deity, Tamil studies, International institute ofTamil Historical Studies, Madurai, Vol II, July1982,P.22

45. தகவலாளி- பேரா.தொ.பரமசிவன், திருநெல்வேலி4.3.2003

46. தகவலாளி- எம்.தமிழ்மாறன், இளங்கலை இரண்டாமாண்டு மாணவர், உடற்கல்வியியல்துறை,ம.தி.தா.இந்துக்கல்லூரி,திருநெல்வேலி,05.03.2003

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X