• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

By Staff
|

கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சாதியினர் தாங்களாகவோ அல்லது பிற சாதியினரைக் கொண்டோ தம் சாதி வரலாற்றை உரைநடையிலோ,செய்யுள் வடிவிலோ எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு சாதியினரின் தோற்றம், இடப்பெயர்ச்சி குறித்தும் பழமரபுக் கதைகள் பலவும்வழக்கிலுள்ளன. இவை தவிர இலக்கிய நூல்கள் சிலவற்றிலும் சில சாதியினர் குறித்த குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. ஒருசாதியினரின் இனவரலாறு எழுத இவையே முக்கிய ஆதாரங்களாக அமைகின்றன. இவை தவிர வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாகக்கருதப்படும் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலை ஆவணங்கள், பயணக் குறிப்புகள், கடிதங்கள் ஆகியனவும் ஓரளவுக்குஇம்முயற்சியில் துணைபுரியும் தன்மையனவாகும். ஆளுவோராலும் அவர்களைச் சார்ந்து நிற்கும் ஆதிக்கச் சாதியினராலும்கல்வெட்டுக்களும் செப்புப்பட்டயங்களும் உருவாக்கப்பட்டதால் தலித்துக்களை குறித்த விரிவான செய்திகள் இவற்றில் இடம்பெறவில்லை. ஆயினும் விதிவிலக்காக சில கல்வெட்டுக்களிலும் செப்புப்பட்டயங்களிலும் ஆங்காங்கே தலித்துகள்குறிப்பிடப்பட்டுள்ளனர். இவற்றை ஒருசேர தொகுத்து அதனடிப்படையில் கல்வெட்டுக்களும், பட்டயங்களும் சித்தரிக்கும் தலித்வாழ்வியலை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்.

Inscriptsதலித் சாதிகள்

எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில்தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற மூன்று சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் இம்மூன்று சாதியினர், முறையே பள்ளர், பறையர், சக்கிலியர் என்றபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தலித்துகளின் குடியிருப்பு

தலித்துக்களின் குடியிருப்பு சேரி என்று இன்று அழைக்கப்படுகிறது. அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. தூய்மையற்ற இடமே சேரி என்ற கருத்தாக்கம்மக்களிடம் இடம் பெற்றுள்ளதன் அடிப்படையில், சேரி வாழ்க்கை, சேரி மக்கள், சேரிப்பேச்சு என்ற சொற்களை இழிவான பொருளில்பயன்படுத்துகின்றனர். ஆனால் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)

மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)

என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும்அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச்சான்றுகளால் தெரியவருகின்றது.

தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள்அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது.

தொழில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)

குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.

உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.

அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)

சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக்குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்குமூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும்கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆகநூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்குஉணர்த்துகிறது.

1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும்சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.

2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.

3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)

பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)

பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)

பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

Inscriptsகல்வியறிவு

இம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும்கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் இவ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக்கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன்பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).

ஆவணங்கள் சிலவற்றுள் தலித்துகள் கையெழுத்திட்டுள்ளதை, கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. உமையாள்வான் என்ற பெண் 13ம்நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவம் கிராமத்தின் திருவிற்கோலமுடைய நாயனார் கோவிலுக்கு சக்தி விளக்குஎரிப்பதற்கு கொடை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட மூவரில் முதலாமவர் வைத்தான் பள்ளன் என்றும், கல்வெட்டின் இறுதியில்இவை பள்ளன் எழுத்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)

மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.

வரி

சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

பொருளாதார நிலை

நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.

தஞ்சை பெருவுடையார் கோவிலில் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் நீண்ட கல்வெட்டொன்று உள்ளது.இவ்வாறு தானம் வழங்கியவர்களுள் ஓலோக மாறாயன், பள்ளன், கூத்தன், பள்ளன் கிழான், முகத்தி எழுவன் என்ற பள்ளர்களும்அடக்கம்.(தெ.இ.க.II பகுதி 4:95 வரி 75,76).

கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.

விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும்அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)

எதிர்க்குரல்

தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)

திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. "செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).

உட்பூசல்கள்

ஒடுக்கப்பட்ட பிரிவின்கீழ் வரும் பல்வேறு சாதியினருக்கிடையே நிகழும் மோதல்கள் அவர்களின் போராட்டத்தை திசை திருப்புகின்றன.அத்துடன் ஒடுக்குவோரின் ஆதிக்கம் தொடர மறைமுகமாகத் துணைபுரிகின்றன. தலித்துகளிக்கிடையிலான உட்பூசல்கள் குறித்தும் சிலசெய்திகள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.

திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றுவீரசின்னு நாயக்கர் என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும்கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்புவழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).

மேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம்வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (IPS 976).

திருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு "திருமலைக் குடும்பர்" என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டுதெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம்வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டில் தேவேந்திரக் குடும்பர் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்றுஇடம்பெற்றுள்ளது.

பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாகஅமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையானநெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு,பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்புஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின்இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல்இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன. (ARE 1926 பக்.119-120).

Inscriptsவீடுகளின் அமைப்பு, ஆடை, செருப்பு அணிதல், விருதுகளைப் பயன்படுத்துதல் ஆகியனவற்றில் சாதிக்கேற்ப வேறுபாடுகளை உருவாக்கிஅதன்வாயிலாக உழைக்கும் மக்களை மன்னர்கள் பிரித்து வைத்துள்ளனர். சாதாரண உரிமைகள் சலுகைகளாக மாற்றப்பட்டன.இச்சலுகைகள் தமக்கு மட்டுமே உரியன என்று ஒரு பிரிவும் தமக்கும் உரியன என்று மற்றொரு பிரிவும் முரண்படும்போது நிலைமைக்கேற்பஆளுவோர் ஆணை பிறப்பித்துள்ளனர். இதன்வாயிலாக தம்மைச் சார்ந்து நின்றே அடித்தள மக்கள் பண்பாட்டு உரிமைகளை அனுபவிக்கமுடியும் என்ற நிலையை உருவாக்கினர். இதனால் தமக்குரிய உரிமைகளை சலுகைகளாகவே அடித்தள மக்கள் கருதும் நிலை உருவாகியது.

இத்தகைய உரிமைகளை தமக்கு மட்டும் உரியது என்று ஒவ்வொரு சாதியையும் கருதும்படி செய்து அவர்களுக்கிடையே மோதல்களைஉருவாக்கி ஆளுவோர் தம் நலனை பாதுகாத்துக் கொண்டுள்ளனர். பண்பாட்டு அடையாளங்கள் குறித்த மேற்கூறிய மோதல்கள்உணர்த்தும் உண்மை இதுவேயாகும்.

உதிரப்பட்டி

போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.

திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் பெருந்தேவப் பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம்வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு:

குலைசேகர தேவ

ர்க்கு யாண்ட34வ

துக் கருங்குளர்த்திக்

கு ஒரு பழி உண்திடான படியாலே

இப்பழிக்கு இவ்வூர்

குடும்பரில் பெரிய

தேவப் பள்ளன் அணை

வெட்டிப் போகையா

லே இவன் மகளுக்கு

ஊரார்களிட்ட உதி

ரப்பட்டி குடுத்தபடி தபான

வ நிலம் அரை மா அணை

நிலம்......

பிற செய்திகள்

முதலி என்ற சொல் சாதியைக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் சாதி தலைவர் அல்லது அதிகாரியைக் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது.பிள்ளை முதலி, நாட்டு முதலி, தனியார் முதலி என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய முதலி பதவி பறையர்களிடமும்வழக்கில் இருந்ததை பறை முதலி என்ற சொல் உணர்த்துகிறது.

உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர்என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)

இதுவரை நாம் பார்த்த கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

1. தலித்துகள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாக ஒரே காலகட்டத்தில் கருதப்படவில்லை. தீண்டாமைக் கொடுமை படிப்படியாகவேஅவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.

2. கல்வியறிவு உள்ளவர்களாகவும் சொத்துரிமை உடையவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர்.

மேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகளை தொகுத்து ஆராய்ந்தால் தலித்துகளின் கடந்த கால வரலாறு குறித்த பல புதியசெய்திகளைக் கண்டறிய முடியும்.

குறிப்பு:

தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு

க.எ.: கல்வெட்டு எண்

IPS: Inscripts of Pudukkottai State

பேரா. ஆ. சிவசுப்ரமணியன் அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட கட்டுரைகளும் நூல்களும்எழுதிவருகிறார். தமிழ்நாடு கலை-இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X