• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சனி பெயர்ச்சி 2017-20: 12 ராசிகாரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News
  சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை?- வீடியோ

  சென்னை: சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் குருஜி ராஜீவ் சிவம் கணித்துள்ளார்.

  சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

  சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள், எந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

  மேஷம் அதிர்ஷ்டம்

  மேஷம் அதிர்ஷ்டம்

  மேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.

  அஷ்டம சனி முடிவதால் இதுவரை இருந்து வந்த தொழில் தடைகள் விலகும். பணப்பிரச்சினைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீரும். மருத்துவ செலவினங்கள் குறையும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீரடையும். புதிய முயற்சிகள் முதலீடுகள் ஜாதகத்தில் தசாபுத்தி ஒத்து வந்தால் இனி செய்யலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும்,பெண்களால் லாபம்,மகிழ்ச்சி உண்டாகும்.

  ரிஷபம் உஷார்

  ரிஷபம் உஷார்


  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. பண விரயம்,கடன்,கெட்ட செலவு அதிகம் தருவது அஷ்டம சனி.

  ரிஷபம் ராசியினருக்கு சனி யோகாதிபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை. ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம்,நெருங்கிய உறவுகளை இழத்தல்,உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை,பொருள் காணாமல் போதல்,தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும். வருமானம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும். புதிய முதலீடு செய்தால் திரும்பி வருதல் கடினம். கவனமாக முதலீடு செய்தல் நல்லது.

  அஷ்டம சனி நல்லது செய்யாதா..? இல்லைங்களே.சனி என்பது இருள் கிரகம்.குரு போல ஒளி கிரகம் அல்ல.சனி வறுமையை தருபவர்.மனதை குழப்பி தெளிவான முடிவெடுக்க முடியாமல் செய்து ,உணர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வைப்பவர்.

  சனி என்பது தொழில் கிரகம். அவர் நம் ராசிக்கு மறைகிறார். உழைப்புக்கு காரகம். உடல் ஆரோக்கியம் குறையும். உடல் பலம்,மன பலம் குறையும். தந்தைக்கு 12ல் மறைகிறார் தந்தைக்கு ஆயுள் பாவம் கெடுகிறது.பரிகாரம்

  சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க. நவகிரகங்களை வழிபடுங்க. காக்கைக்கு சாதம் வைங்க.உஷாரா இருங்க..ராசிக்கு குரு பலம் இருக்கு. அதனால் இப்போது பாதகம் இல்லை. ஆகஸ்ட் மாதம் குரு ராசிக்கு ஆறில் ருணம்,ரோகம் என மாறுவார். அப்போதுதான் அதிக சிரமம் தரும்.

  மிதுனம் - கண்டக சனி

  மிதுனம் - கண்டக சனி

  மிதுனம் ராசியினருக்கு 7ல் சனி வருகிறார். இது நல்லதுதான். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். தொழில் வளம் அடையும்.பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வியாபாரத்தில் புதிய யுத்துடம் இரு மடங்கு லாபம் காண்பீர்கள். பதவி உயர்வு கிடக்கும். 7ல் சனி என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானத்துக்கு சனி வருவது. எனவே குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும். எட்டுக்கு 12ல் சனி மறைவதால் சிறுநீரகம்,கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார். சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்வர்.

  கடகம் - பொன்னான காலம்

  கடகம் - பொன்னான காலம்

  கடக ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். எதிரி ஒழிந்தான். கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது. அடிச்சது லக் என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும் .பெண்களால் யோகம் வரும். பணம் எவ்வளவு வந்தாலும் தானம்,தர்மம் செய்து விடும் பொன்னான மனம் கொண்டவரே, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். சனி நல்லது செய்வார். புதிய முயற்சிகள்,முதலீடுகள் துணிந்து செய்யலாம். எதிரிகளை வெல்லலாம்.வெற்றிகள் குவியும்.திசாபுத்தி நன்றாக இருந்தால் இது அப்படியே நடக்கும்.

  சிம்மம் - புண்ணியசனி

  சிம்மம் - புண்ணியசனி

  சிம்மம் ராசியினருக்கு புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள். இனி அலைச்சல் இருக்காது.மருத்துவ செலவுகள் இருக்காது.பணவிரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும். ஐந்தாமிட சனி அத்தை,மாமன் வர்க்க பகை உண்டாக்கும். குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். அவர்களால் விரய செலவும் காணப்படும். சிலர் மனைவி,குழந்தைகளை பிரிந்து தொழிலுக்காக வெளியூர் ,வெளிநாடு செல்ல நேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாத்தா வகையில் பகை,குலதெய்வ கோயில் பங்காளி வகையில் பகை,பூர்வீக சொத்து சார்ந்த சங்கடம்,தடங்கல்,சிக்கல் உண்டாகும்.

  கன்னி ராசி - அர்த்தாஷ்டம சனி

  கன்னி ராசி - அர்த்தாஷ்டம சனி

  கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது.

  நாலில் சனி நாய்படாத பாடு என சொல்வார்கள். அலைச்சலைதான் அப்படி சொல்லி இருக்கிறார்கள்.

  நார்கால் பிராணிகளிடம் கவனம் தேவை. வாகனத்தில் கவனம் தேவை. வாகனத்தால் செலவு உண்டு. தாய்க்கு பாதிப்பை தரும் சொத்து சம்பந்தமான தடங்கல்கள்,பிரச்சினைகள் தரும். உடலை கவனித்துக்கொள்ளுங்கள். மருத்துவ செலவு ஒன்று காத்திருக்கிறது. இடம் மாறுதல்,ஊர்மாறுதல்,வீடு மாறுதல்,கம்பெனி மாறுதல் உண்டாகும். தாய் வழியில் பகை உண்டாக்கும். வெளிநாடு சிலர் செல்வர். சிலர் வேறு நாடு,வேறு மாநிலம் மாறுதல் செய்வர்.பரிகாரம்

  உடல் ஊனமுற்றோர்க்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உணவு,செருப்பு,ஊன்றுகோல் வாங்கி கொடுங்கள்.

  துலாம் ராசி - ஏழரை முடிவு

  துலாம் ராசி - ஏழரை முடிவு

  துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முழுவதும் முடிகிறது. இனி மகிழ்ச்சிதானே..ஏழு வருசமா பட்ட பாடுக்கு சனி பதில் சொல்ல மாட்டார். அவர் கடமை முடிந்து கிளம்பிவிட்டார். பெற்ற அனுபவங்கள்,பாடங்கள் உங்கள் வாழ்வை இனி நீங்கள்தான் இனிமையாக்கிக்கொள்ள வேண்டும்.
  வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக அணுகுவதுதான் உங்கள் பாணி. இனி கொண்டாட்டம் அதிகரிக்கும்படி நல்ல செய்திகள் தேடி வரும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தன லாபம் அதிகரிக்கும். கடவுளையே நம்பி இருப்பது உங்க பாணி அல்ல. சிறிது உழைப்பு அதிக லாபம் கொண்டவர். இனி தொழில் படிப்படியாக முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் ,முதலீடுகள் செய்யலாம். ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்றவாறு முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்,புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு சீரமைப்பீர்கள்.

  விருச்சிகம் - காலில் பிரச்சினை

  விருச்சிகம் - காலில் பிரச்சினை

  விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.பாத சனி தொடங்குகிறது.
  பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும்.பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

  சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்கதான் அதிகம் வெளிப்படுத்துவீங்க. முகத்தை சோர்வாக வைத்திருப்பது,அதிக கவலை,முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.

  பரிகாரம்

  மந்திரங்கள் படிங்க, போதும். தூரமா இருக்குற கோயிலுக்கெல்லாம் கஷ்டப்பட்டு போய் வழிபட்டாதான் பிரச்சினை தீரும் என கிளம்பி போய் காலை உடைத்துக்கொண்டவர்கள்தான் அதிகம். ஏற்கனவே ஏகப்பட்ட வழிபாடுகளை செய்துட்டுதான் இருக்கீங்க. அப்படியே மனுசாளையும் கொஞ்சம் வழிபடுங்க எந்த பிரச்சினையும் வராது.

  தனுசு - ஜென்ம சனி

  தனுசு - ஜென்ம சனி

  ராசியினருக்கு ஜென்ம சனி வருகிறது..சந்திரனும் சனியும் இங்கு ஒன்று சேர்கிறது.மனதில் இருள் புகுந்தால் என்னாகும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும்.குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு. சனியும் சந்திரனும் சேரும் போது சந்திரன் உடல் காரகன் என்பதால் இனி உடலும் ஒத்துழைக்காது.சோம்பல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் கெடும்.எனவே கவனமாக செயல்படுங்கள். இது பொதுவாக சொன்னதுதான்.பயப்பட வேண்டாம்.எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். நான்காம் அதிபதி சுபர் இருந்து,கெடாமல் இருந்தால் பெரிதாக பாதிக்காது.

  உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம்.

  நெருப்பால் கண்டம் இருக்கு. அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை.குடும்பத்தில் விண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசியபின் செயல்படுத்துங்கள்.

  மகரம் - விரயசனி

  மகரம் - விரயசனி

  மகரம் ராசியினருக்கு விரய சனி எனும் ஏழரை சனி ஆரம்பிக்கிறது.ராசிக்கு 12ல் சனி வருவது தொழில் முடக்கம்,நஷ்டத்தை தரும் என முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. அலுவலகத்திலும்,வீட்டிலும் செல்வாக்கு குறைகிறது. தவறுகள் அதிகமாகின்றன. சிலர் தூரமான ஊர்களுக்கு தொழிலுக்காக செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

  கும்பம் - லாபசனி

  கும்பம் - லாபசனி

  கும்பம் ராசியினருக்கு லாப சனி ஆரம்பிக்கிறது...தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம். அண்ணனுக்கு,பாட்டிக்கு பாதிப்பு. வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.

  மீனம் - கர்ம சனி

  மீனம் - கர்ம சனி

  மீனம் ராசியினருக்கு கர்ம சனி ஆரம்பிக்கிறது. பத்தில் சனி தொழிலில் இடைஞ்சல்.உறவினர்களுக்கு கர்மகாரியம். பங்காளி வகையில் இழப்பு. தொழிலில் லாபம்.வருமான உயர்வு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் போராடினாலும் லாபம் உண்டாகும். இருதய கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வீர்கள். தந்தையால் விரயம். சமூகத்தில் அந்தஸ்து ,புகழ் உண்டாகும். கடுமையான உழைப்பு உண்டாகும்.

  சனி சாந்தி யாகம்

  சனி சாந்தி யாகம்

  இந்த சனி பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பலன்களை அளிக்கிறார். பல இடங்களில் சனி சாந்தி யாகங்கள், தோஷ நிவர்த்தி யாகங்கள் நடைபெற்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி விருச்சிகம்,தனுசு, மகரம் ராசிக்காரர்கள் யாகங்களில் பங்கேற்று தோஷ நிவர்த்தி பெற்றனர். சனி தோஷ நிவர்த்தி சனி சாந்தி யாகம் செய்ய சனி பகவானுக்கு விசேஷமான சனிக்கிழமை பரிபூரண பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பெயர்ச்சியை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று சனிக்கிழமை அன்று வேலூர் மாவட்டம் ஆற்காடு அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் சனி தோஷ நிவர்த்தி சனி சாந்தி யாகம் நடைபெற்றது. ஜோதிடர் குருஜி ஸ்ரீ ராஜிவ் சிவம் நடத்திய இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தோஷ நிவர்த்தி யாகத்திற்கு தேவையான பொருட்களை அளித்து தரிசனம் செய்தனர்.

  English summary
  Sanee (Saturn), the Lord that brings us all good things transits from viruchaga Rasi (Scorpio) to Dhanushu Rasi (Sagittarius) on Tuesday 19th December, 2017 at 2.43 PM and is going to remain there for the next two and half years. This shift is going to bring in mixed fortunes.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X