சித்திரையில் பிறந்தவர்களின் சிறப்பு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: சித்திரை மாதம் குழந்தை பெற்றால் சீரழியும் என்று ஆடி மாதத்திலேயே தம்பதிகளை பிரித்து வைப்பார்கள். ஆனால் சித்திரை மாதம் பிறந்த மக்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்துள்ளதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

தெய்வீக அவதாரங்கள் பல சித்திரை மாதத்திலேயே நிகழ்ந்துள்ளன. ஆனால்'சித்திரை அப்பன் தெருவிலே' எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது.

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அவதிப்படும் என்றும், குழந்தைகளைக் காப்பாற்ற தந்தைமார்கள் தெருத் தெருவாக அலைய வேண்டிருக்கும் என்பதையும் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், அப்பன் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்பான் என்று மாற்றி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை அவதிப்படும் என்ற காரணத்துக்காகவே, ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைக்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Child is born in the month of Chittirai

சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறப்பு:

சித்திரை நட்சத்திரத்தை நட்சத்திர சிந்தாமணி ஒற்றை நட்சத்திரம் என குறிப்பிடுகிறது. ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், 'சௌம்ய தாரா' என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும், 'சித்திரை அப்பன் தெருவிலே' எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது.

சித்திரை மாதத்தில் பல கோயில்களிலும் சித்திரை திருவிழா நடக்கும். அதனை முன்னிட்டு சித்திரை ஒன்றாம் தேதி அனேக சிவாலயங்களில் ரதோர்சவம் நடப்பதுண்டு. இன்று அவினாசி, திருமருகல், காஞ்சி குமரக்கோட்டம், திருச்சி வெக்காளியம்மன் மற்றும் திருப்பைஞ்சிலி, திருவாரூர் வீரராகவர் கோயில் ஆகிய திருத்தலங்களில் ரதோர்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலங்களில் வயதானவர்கள், உடம்பு சரியில்லாதவர்கள் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆகியவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இறையருள் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சித்திரையில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. அப்போது அம்மையப்பனான சிவ பெருமான் வீதிகளில் காட்சியளித்துக்கொண்டு வீதியுலா வருவார். அதுவே நாளைடைவில் சில விஷமிகளால் " சித்திரை அப்பன் தெருவிலே" என தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது என்பது வருத்தத்தையளிக்கும் விஷயமாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்:

அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை, பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில் ஆர்வம், பொருள்களில் பற்று ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான இயல்புகள்.

முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன். சிறந்த கல்வியறிவு, திறமை, கடமையுணர்வு, கடும் உழைப்பு இவர்களது இயல்புகள். துணிச்சல் குறைவானவர்கள், முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவர்கள். மற்றவர்கள் வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் ஜெயிப்பார்கள்.

2-ம் பாதம்: இதன் அதிபதி புதன். தெய்வபக்தி, நல்லொழுக்கம், நீதி-நேர்மை உள்ளவர்கள். தன்னம்பிக்கை குறைவு. குழப்பமான சிந்தனையால், இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.

3-ம் பாதம்: இதன் ஆட்சி கிரகம் சுக்கிரன். ஆசாபாசம் மிக்கவர்கள். பிறருக்கு உதவும் சுபாவம் மிகுதியாகக் காணப்படும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய விரும்புபவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள்.

4-ம் பாதம்: இது செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் தைரியசாலிகளாகவும், நல்ல பேச்சாளர்களாகவும் திகழ்வர். வெற்றி அடையும் வெறியும் உண்டு. தலைமை தாங்கும் இயல்புகள் உண்டு. நன்மை தரும் செயல்கள் அல்லது தீமை பயக்கும் செயல்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்ட காரியத்தைப் பிடிவாதமாக நடத்தி முடிப்பவர்கள். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நிற்பார். அதனால் அந்த ஜாதகர் பேரும் புகழுடன் மிகவும் கௌரவமாக வாழ்க்கை நடத்துவார்.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் அது ஜாதகரின் தந்தையின் சிறப்பையே குறிப்பிடுகிறது. ஜாதகரினதந்தை அரசாங்க பதவியிலோ அல்லது ராஜரீக (அரசியல்)காரியங்களிலோ புகழ் பெற்று நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் சூரியன் ஒருவர் ஜாதகத்தில் எந்தபாவத்தின் அதிபதி என்பதை பொருத்து மேற்கண்ட பலன்களோடு சில சுப/அசுப பலன்கள் நடைபெறும் என்பதை அறியவேண்டும்.

இன்று பிறந்தநாள் காணும் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் தீண்டாமையை எதிர்த்து போராடி பல சட்டங்கள் இயற்ற காரணமாக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

Child is born in the month of Chittirai

அம்பேத்கர் ஜாதகம்

திரு அம்பேத்கர் அவர்கள் ஜாதகத்தில் மீன லக்னமும் வாக்கு ஸ்தான்தில் ஆறாமதிபதியான சூரியன் உச்சமடைந்து நிற்பதாலும் லக்னாதிபதி குரு சனி வீடாகிய கும்பராசி மற்றும் 12ல் சுக்கிரனோடு சேர்ந்து நின்றதாலும் சட்ட வல்லுனரானஅம்பேத்கர் தனது வாக்கு வன்மையால் பலருக்கும் சட்ட சேவைகள் புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தந்தை ராணுவ அதிகாரி என்பதும் (சூரியன் செவ்வாயின் வீட்டில் உச்சம்) அவருக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 14வது குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருட பிறப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் "சித்திரை அப்பன் தெருவிலே" என்பது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மூட்டை கட்டுவோம் என கூறி அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A proverb which states that if a child is born in the month of Chittirai, then it is indeed not a good addition to the family. Similarly, there are few proverbs like these that make its rounds in the world of Tamil astrology.
Please Wait while comments are loading...