• search

ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு - 12 ராசிகளுக்கும் பலன்கள்

Posted By:
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  -ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

  சென்னை: ஹேவிளம்பி வருடத்தில் பன்னிரெண்டு இலக்கினம்/இராசி அன்பர்களுக்கும் நல்லவையே நடக்க இனிய ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

  தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017 அதிகாலை பங்குனி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 04 மணிக்கு மகர இலக்னம் துலா இராசி விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறது.

  மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  ஹேவிளம்பி வருடத்தின் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

  ராகு-கேது:

  இந்த ஆண்டு திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 18 - 08 - 2017 அதிகாலை ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 34 மணி அளவில் இராகு சிம்ம இராசியில் இருந்து கடகம் ராசிக்கும், கேது கும்ப இராசியில் இருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

  குரு பெயர்ச்சி:

  இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12 - 09 - 2017 ஆவணி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை சுமார் 06 - 50 மணி அளவில் குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

  சனி:

  சனிபகவான் 21 - 06 - 2017 அன்று தனுசு இராசியில் இருந்து வக்கிரம் ஆகி விருச்சிக இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். பின்னர் 26 - 10 - 2017 அன்று நேர்கதியில் மீண்டும் தனுசு ராசிக்கு, சனி பெயர்ச்சி ஆகிறார்.

  மேஷம்

  மேஷம்

  (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்-பரணி-1, 2, 3, 4 பாதங்கள்-கார்த்திகை-1,2,3,4பாதங்கள்)

  தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன் - தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து
  அரசாங்கத்தின் பட்டம் கௌரவம் பெறுவீர்கள்.

  செவ்வாய் - ஆனி மாதத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும். உடன்பிறப்புக்குஇடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதியசொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில்புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும்.

  புதன் - பலவகையிலும் தனவரவுகள் அதிகரிக்கும்.மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும்,செலவும் அதிகரிக்கும். மக்கள்மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும்.

  சுக்கிரன் - தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரசாதனங்கள்அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள்போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும்அமையும். நெருங்கிய உறவினர் வகையில் சுப காரியங்கள் நடக்கும்.

  குரு - ஆவணி 27 இல் 7 ஆம் இடத்திற்கு மாறும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதியதொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசுவேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக்கிரையம் செய்யலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.

  சனி - ஹேவிளம்பி வருடத்தில் தங்கள் இராசிக்கு சனி பகவான் நன்மை அளிக்கவில்லை என்றாலும், பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும்.

  ராகு:ஆண்டின் முற்பகுதியில் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும் பிற்பகுதியில் சொந்த வீடு கட்டி குடிபோவீர்கள்.

  கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும்.

  கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட தீமைகள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  ( கார்த்திகை -2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)

  களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும்.நினைத்த காரியங்கள் நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திரபாக்கியம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். நோயற்ற வாழ்வு மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும்.புதிய உயர்ரக வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல்பிரபலங்களின் ஆதரவு கிட்டும். பொது ஜன சேவைகளால் மதிப்பு மரியாதைகூடும். புகழும் ஓங்கும்.

  செவ்வாய் ; அரசுத்துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் பயிர், மனை,பால் மாடுகள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் பெருகும். நவீன வீட்டுஉபயோக சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதாவது ஒரு வகையில் ஆண்டு முழுவதும் பணம் வந்து கொண்டே இருக்கும். நவநாகரிக ஆடை அணிகலன்கள் சேரும்.

  புதன்: தனதான்ய விருத்தியும், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் அதிகம்முன்னேற்றம் ஏற்படும். நிம்மதியும் சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி அடைவீர்கள்.பயணங்களால் இலாபம் ஏற்படும். வங்கி, கணக்கு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.

  சுக்கிரன்: மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆண்டு முழுவதும் பொன்பொருள்சேரும். ஆடை, அலங்காரப் பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். கோவில்களில் ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு இறையருளால் வசதிவாய்ப்புக்கள் பெருகும்.

  குரு - ஆவணி 27 க்கு முன் புத்திர பாவத்திலும், பின்னர் ருண பாவத்திலும் சஞ்சரிக்கும் குரு, முற்பகுதி வரையிலான காலத்தில் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழவைப்பார். செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். பிற்பகுதியில் ஆரோக்கியக் குறைவைத் தந்தாலும் அதற்குப் பிறகு தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களைத் தரலாம். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும்.

  சனி: அஷ்டமச்சனி காலத்தில் அந்தஸ்து, பதவி, கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரைவணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும்.
  திருநள்ளாறு சென்றுவரவும் தீமைகள் குறையும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் புது வீடு கட்டி குடி போவீர்கள் பிற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும்.
  கேது: ஆண்டு முழுவதும் தொழில் முன்னேற்றம் லாபம் அதிகரிக்கும்.

  மிதுனம்

  மிதுனம்

  (மிருகசிரீடம்-3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3பாதங்கள்)
  கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.
  சூரியன்: தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம். அரசுத் துறையால் இலாபம்அல்லது அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். மாதத்தில்பணம் காசு சேரும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவார்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம்ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

  செவ்வாய்: சுப பலன்களைஎதிர்பார்க்கலாம். சகோதரரால் நன்மைகள் ஏற்படும். எதையும் செய்துமுடிக்கும் துணிச்சல் உண்டாகும். சிலருக்கு வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்னவிஷயங்களுக்காக அதிகக் கோபம் கொண்டால் டென்ஷனால் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

  புதன்: சுபபலன்களைத் தருகிறார். பலவகையான யோகங்கள் ஏற்பட்டு ஜாதகர் அரசனுக்கு நிகராக வாழ்வார். சேவை செய்ய பணியாட்கள்,பணிப்பெண்கள் அமைவர். சந்ததி விருத்தி ஏற்படும். பூமி, மனை, வீடுகள் ஆகியவற்றால் இலாபம் ஏற்படும். பங்குச் சந்தையில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம். அரசு வேலை கிடைக்கலாம்.

  சுக்கிரன்: சுப பலன்களைக் கொடுக்க வல்லவர் சுக்கிரன். ஆரம்பத்தில் உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். முகத்தில் அறிவுச் சுடரொளி வீசும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். நல்ல குழந்தை பிறக்கும்.மனைவிக்கு வயதானாலும் எழில் நிறைந்தவராக இருப்பார். நல்ல குரு அமைவார். அவரால் வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் பெருகும்.

  குரு: ஆவணி 27 இல் துலாத்துக்கு மாறும் தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் புத்திர பாவமேறி, வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். வாக்கு வன்மைஅதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும்ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

  சனி: இந்த வருடம் கண்டச் சனியாகி குறிக் கோளற்ற பயணங்களைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு வாசம் ஏற்படும். ஆடியில் ருண பாவம் அமர்ந்துசுப பலனைத் தருகிறார். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாகநடக்கும். பதவி உயர்வு, வேலையற்றவர்களுக்கு வேலை கிடைத்தல், சுவை மிக்க இராஜ உணவு கிடைத்தல். என இராஜபோக வாழ்க்கை அமையும். இதுநாள் வரை இருந்து வந்த இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருக்கும் பிற்பகுதியில் பண வரவுஃப் அதிகரிக்கும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும் பிற்பகுதியில் போக்குவரத்தில் கவனம் தேவை.

  கடகம்

  கடகம்

  (புனர்பூசம்-4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

  தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.
  சூரியன்: விருப்பமானவர்களுடன் உறவு ஏற்படும். தமக்குப் பிடித்தமான இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி, அரசுத்துறையில் இலாபம் ஏற்படும். மிக்க சுகம் உண்டாகும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள்ஏற்படும். பிறர் மேல் இரக்கம் கொள்வார். சுபகாரியங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும்.

  செவ்வாய்: சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.சிலருக்கு சில மாதங்களில் உறவினர் பகையும், வீட்டில் குழப்பமும்உண்டாகலாம். புதிய ஆடை சேர்க்கை, தானியவிருத்தி, பின்னர் வரும்காலத்தில் கீழான மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். உடலில் ஒளியும்,அழகும், பொலிவும் கூடும். சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்.மனைவி மூலம் பூர்ண
  சுகம் கிடைக்கும்.

  புதன்: பொதுவாக சுப பலனைத் தருவார். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும. வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். சிலர்பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள்ஏற்படலாம்.

  சுக்கிரன்: வருடத்தின் துவக்கத்தில் சுக்கிரனின் அசுப பலன்களை உணர்வீர்கள். வயிற்று உபாதைகள் ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பின்னர், எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வநிலையும் அடைவர். பின் வரும் மாதங்களில் மனைவியிடம் அன்புஉடையவராக இருப்பர். மந்திரி போன்ற உயர்
  பதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.

  குரு: ஆவணி 27 ஆம் தேதியன்ற சுக பாவமான துலாத்திற்கு மாறும்குரு மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரச்செய்வார். புதிய வீடு, வாகனம் வந்து சேர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சிஉண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்.அரசு மூலம்வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர்பதவிகளை அடைவர்.

  சனி - ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறும் சனியால், எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆடி முதல் கார்த்திகை மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் உங்களுக்கு இராஜயோகம்தான், இம் மாதங்களில் மட்டும் முன்னோர் சொத்துக்களில் இருந்து வந்தபிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலமாக சுமுகமாக முடியும். அரசு அதிகாரிகள்தாங்கமுடியாத கெடுபிடிகள்செய்வர். சனி பகவானின் சன்னதிக்குச் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடுதலும், ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும்
  நலம்பயக்கும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் பண வரவு அதிகமாக இருக்கும் பிற்பகுதில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்
  கேது: ஆண்டின் முற்பகுதியில் பலவிதமான அவமானங்களை தருவார் பிற்பகுதியில் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும்.

  சிம்மம்

  சிம்மம்

  ( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

  தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: முதலில் மனைவியுடன் ஏற்படும் பிணக்குகளினால் தற்காலிகப் பிரிவு ஏற்படலாம்.பின்னர் இருவரும் ஒன்று கூடி மகிழ்வீர்கள். உதவி கேட்டுப் போகும் போது யார் உண்மையான நண்பர்கள் என்பது தெரியவரும். வியாபாரத் தொடர்பான, நெடுந் தூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். புதிய விரிவாக்கத்திட்டங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தரும சிந்தனையால்,கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வீர்கள்.

  செவ்வாய்: பொதுவாக சுப பலனைத் தருவார் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், தங்கள் திறமைக்கு ஏற்பகிடைக்கும். புதிய வியாபார நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதிகஇலாபங்காண முற்படுவீர்கள். வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். பின்வரும் காலத்தில் கடன்களும், நீங்கும். பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் பலமுன்னேற்றங்கள் ஏற்படும்.

  புதன்: அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்துப் பரிசாகப் புதிய உயர்பதவிகள் கிடைக்கும். உங்களால் உதவி அடைந்தவர்கள் சமயம் பார்த்துஉங்களுக்கே குழிபறிப்பர். பகைவர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் நல்ல தனவரவு உண்டாகும். புகழ் மரியாதைகள் கூடும்.வாகனாதிகள் வந்து சேரும்.

  சுக்கிரன் - குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் புத்தி கூர்மையினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அதிக மதிப்பெண் பெறுவார்கள். நவீன பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். வீரம், பிரதாபம் மற்றும் பூர்ண சயன சுகம் ஏற்படும், பின்னர்மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சியைத் தரும். சொற்பொழிவுத் திறன்கூடும். அதனாலும் பணவரவு கூடும். தனக்கென அழகிய தனி வீடு கட்டுவீர்கள்.

  குரு: ஆவணி 27 க்கு முன்புவரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்குவார். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஒன்று பத்தாகி ஆதாயம் தரும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். பின்னர் தைரிய பாவத்துக்கு வரும் குரு தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தான தர்மமென கைப் பணம் கரையும்.

  சனி: புத்திர பாவத்தில் அமர்ந்து நற்பலனைத் தருவார் மனைவி மக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முனைவருக்கு இது ஏற்றமான முன்னேற்றமான காலம் என்று சொல்லலாம் ஆடி முதல் கார்த்திகை வரை சுற்றியுள்ள சுற்றமும், நட்பும் பகை பாராட்டலாம். மானம்,மரியாதை மற்றும் கௌரவம் அனைத்தும் பறிபோகும். பின்னர் ஆண்டு முடிவுவரைசனி தரும் சிரமங்கள் குறைய விநாயகரையும், ஆஞ்சநேயரையும்மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் குறைவு உண்டாகும் பிற்பகுதியில் செலவினங்கள் அதிகரிக்கும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும்.

  கன்னி

  கன்னி

  ( உத்திரம் - 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை - 1,2பாதங்கள்)

  புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள்
  தரும் பலன்களைப்பார்ப்போம்.

  சூரியன்: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனித்திறமையால் வாழ்வில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். எவருமே இதுவரைசெய்யாத சாதனைகளைப் புரிவீர்கள். உயர் பதவிகள் கிடைத்துஅந்தஸ்து, மரியாதையும் கூடும். உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும். புத்திரபாக்கியம் ஏற்படும். உங்களுக்கு இதுவரை வராது இருந்த நிலுவைகள், கடன்கள்,விரைவில், சுலபமாக வசூலாகும்.

  செவ்வாய் - தொழில்களில் நல்ல வருமானம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். சிலருக்குக் கண்நோய் ஏற்படலாம். விவாகம் நடக்கும். சந்ததி விருத்தியாகும். ஆண்டின் இறுதியில் பற்றாக்குறைகள்அதிகமாகும். ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். காரியங்களில் தடை, தாமதங்கள்ஏற்படலாம்.

  புதன் - எதிரிகளை எளிதில் வென்று ஏற்றம் பெறுவீர்கள். வீடு, நிலம்போன்ற அசையாச் சொத்துக்களை எவ்விதத் தடைகளும் இன்றி வாங்குவீர்கள். ஆழம் தெரியாமல் காலைவிடாது, எதையும் ஆராய்ந்துமுடிவெடுப்பது நல்லது. புண்ணியத்தல யாத்திரைகளும், வெளிநாட்டுப்பயணங்களும் ஆதாயம் தரும். தவிர்க்க முடியாத சுப, அசுப விரயங்கள்ஏற்படும். வருடக் கடைசியில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

  சுக்கிரன் - திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வீடு புதிய சொத்துக்கள் வாங்குவர். நல்ல உறவுகள், உதவும் நண்பர்கள்அமைவர். வார்த்தை தவறாது, கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவர். கல்வியும்புகழும் ஓங்கும். சிலருக்கு இசையால் சம்பாத்தியம் பெருகும். கார் போன்ற உயர்ரக வாகனங்கள் வாங்குவர். ஐம்புலனுக்குரிய அனைத்து இன்பங்களும்கிடைக்கும்.

  குரு - துலா இராசிக்கு குரு ஆவணி 27 இல் மாறுகிறார். ஆனிமாதம் வரைசுமாரான பலன்களைத் தருகிறார். அதற்குப் பிறகு தன பாவத்தில் அமர்வதால் அக் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாக்கு வன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். அந்தஸ்து, கௌரவமும் கூடும்.

  சனி - இனி இன்னல்கள் மறைந்து இன்பம் பொங்கப்போகும் காலம். இனி எல்லாமே வெற்றிதான். அஷ்டலக்ஷ்மி கடாக்ஷமும், இராஜயோகமும் ஏற்படும். குழந்தைகள் மூலமாகப் பல நன்மைகள் ஏற்படும். வரவுக்கும், வரம்புக்கும் உட்பட்டு செலவுகள் அமையும். திருமணம், புத்திரப் பேறு ஆகியவை நல்லபடி நடக்கும். உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். கொடூரமான வெய்யிலில்இருந்து குளிர் நிலவுக்கு வந்த்துபோல் ஓர் உணர்வு ஏற்படும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியில் பலருடன் பிரச்சினைகளை கொடுப்பார் பிற்பகுதியில் பூர்வீக வீடு கிடைக்கும்.

  துலாம்

  துலாம்

  (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி - 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3பாதங்கள்)

  அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல்வெற்றி கிட்டும். தங்கள் கல்வித் தகுதி, திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷம், செல்வம் ஆகியவை ஏற்படுகின்றன. புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை
  மற்றும் முன்னேற்றங்கள் உண்டாகும். வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். மனஅமைதி, இலாபம் மற்றும்உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.

  செவ்வாய் - புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள். தங்கள் பணியிடங்களில், தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவது, விபத்தைத் தடுக்க உதவும். மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன் அளிக்கும். வழக்குகளில் வெற்றியும், உயர்அதிகாரிகளின் ஆதரவும்
  இருக்கும். அதன் பிறகு பூமி லாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

  புதன் - வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். வாக்கால் வருமானம் பெருகும். கணவன் மனைவிக்குள்
  கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அலைச்சல் தரும் பயணங்களும், மரியாதையையும், புகழையும் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நம்பிக்கையான நட்புறவு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும்.உறவுகளுடன் நல்லுறவில் முன்னேற்றம் ஏற்படும்.

  சுக்கிரன் - வீட்டில் பெண்கள் மகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும், நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும். தொழிலில் வெற்றி, பண ஆதாயம், முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டு,மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .

  குரு - வருடத் துவக்கத்தில் விரய பாவத்திலும், பின்னர் ஜன்மத்திலும் சஞ்சரிக்கிறார். அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். ஆவணி 27 க்குப் பிறகு இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும், மகிழ்ச்சியும் குறையும். பிறர் வழங்கும்மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவேஇருக்கும்.

  சனி - தைரிய பாவத்தில் சஞ்சரிக்கும் சனி, இதுநாள்வரை தனபாவத்தில் இருந்து தந்த துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நற்பலன்களைத் தருவார். சீரான உடல் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையில் படிப்படியானமுன்னேற்றங்களையும், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறார். செய்தொழில், வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமானசூழலை உருவாக்கும்.

  ராகு: ஆண்டு முழுவதும் தொழிலும் தொழில் லாபமும் சிறப்பாக இருக்கும்.
  கேது: ஆண்டு முழுவதும் கல்வியில் மேன்மை நிலையைத் தருவார்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  ( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

  தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: எதிரிகளை வென்று, வெற்றி மேல்வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மலையென அந்தஸ்து உயரும். இரக்க குணம் அதிகரித்து தானதர்மம் செய்வீர்கள்.

  செவ்வாய்: கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு,மரியாதைகள் கூடும். கூடுதலான தன வருமானத்தால் பணப்புழக்கம் சிறப்பாகஇருக்கும். திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமானதருணங்களாக அமையும். சிறு விபத்துக்கள்,காயங்கள் ஏற்படலாம். கோபத்தால் காரியங்கள்கெடலாம்.
  எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.

  புதன்: புதிய தொழில், வணிக முயற்சிகள் வெற்றி பெற புத்துணர்வோடுசெயல்படுவது நல்லது. சிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும், அரசுஉத்தியோகமும் கிடைக்கலாம். எழுத்துத் தொழில் ஏற்றம் தரும். பல பரிசுகளும்,கௌரவமும் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். சாதுர்யமும்,
  சாமர்த்தியமும் பெருகும். பங்கு மார்க்கெட் வகையில்அதிக லாபம் அடைவீர்கள்.

  சுக்கிரன்: குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும். மகிழ்ச்சிகரமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். கடின உழைப்பால்,விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும். பின்னர் வரும்காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும். சிலருக்குக் கடன்கள், அதிகமாகும். பெண்களால் நஷ்டம் ஏற்படும். சொத்துக்கள் சேரும். விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.

  குரு: தற்போது இலாப பாவத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி 27 க்குப்பிறகு விரய பாவத்தில் இடம் பெறுகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஆகியவை ஏற்படும். முற்பகுதியில் இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாகக் கிடைக்கும். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.

  சனி - தன பாவத்தில் அமர்ந்து குடும்பத்தில் மனக்கவலைகளை அளித்து வந்த சனி தன் 3, 7, 10 ஆகிய இடங்களின் மீதான பார்வையால்முயற்சிகளை வெற்றி பெற செய்வார். பதறிய காரியம் சிதறும் ஆதலால்,நிதானமாகப் பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும்.புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும்.சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி,கருப்பு வஸ்திரம் சாத்தி, மனதார வேண்டி வணங்க, கதிரவனைக் கண்டபனிபோல் கஷ்டங்களும் மறையும்.

  ராகு : ஆண்டின் முற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும், பிற்பகுதியில் பிதுர் ராஜ்ஜித சொத்துக்கள் கிடைக்கும்.
  கேது : ஆண்டின் முற்பகுதியில் வீடு மனை, நிலம் வாங்குவீர்கள், பிற்பகுதியில் அலைச்சல் அலைச்சல் அதிகரிக்கும்.

  தனுசு

  தனுசு

  ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் -1,2பாதங்கள்)

  தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும். அரசின்உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின்அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில்முதலீடு செய்யலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரரால்நன்மை உண்டு.

  செவ்வாய்: சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப்பெருகும். தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும். எடுத்து வைக்கும்ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும்காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் கிடைக்கும். பெண்களுக்குஅடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம்ஏற்படலாம். பொருளாதார நிலை உயரும். புகழும் ஓங்கும்.

  புதன்: நிம்மதியும் சுகமும் ஏற்படும். புத்திதெளிவுற்று, அறிவுத் திறன்கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும். ஓருஅரசனைப் போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகம் இருப்பர். அடுத்து வரும்மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.பேச்சாளர்களுக்கு வாக்கு வன்மையால் வருமானமும், புகழும் உயரும். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

  சுக்கிரன்: குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். பதியஆடைகள், பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். சொற்பொழிவுத்திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும். மனைவிவயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள். பின்வரும் காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவிதேடிவரும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.

  குரு - தனுசுக்கு அதிபதியான தேவகுரு, ஆவணி 27 இல் கர்மஸ்தானம் விட்டு, இலாப ஸ்தானத்தில் அமர்ந்து கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவியும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்லமுன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம்கிட்டும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும்.

  சனி - ஜன்மச் சனியின் நுழைவு வாயிலாக அமையும் இராசியில்அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும், வெகு தூரப்பயணங்களையும்ஏற்படுத்துகிறார். வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமைஎன அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும். காளஹஸ்தி சென்றுசனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும். காசியாத்திரைசெல்லலாம்.

  ராகு: ஆண்டின் தொடக்கத்தில் பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும் ஆண்டின் பிற்பகுதியில் பலவித கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியில் இட மாற்றம் உண்டாகும் பிற்பகுதியில் பண வருமானம் அதிகரிக்கும்.

  மகரம்

  மகரம்

  ( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2பாதங்கள் )

  கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.

  சூரியன்: நல்ஆரோக்கியம், சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும். மேற்கொள்ளும் புதியதொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும். அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

  செவ்வாய்: வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும். அரசுப்பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும்.பூமிலாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுகசாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர் உணர்ச்சி மிகுதல், பெண்களால்தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.

  புதன்: வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப்பொருளாதார நிலை சீராக இருக்கும். மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம்,உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள். சிலருக்குஅவப்பெயர் உண்டாகலாம். பின் வரும் காலத்தில் கௌரவம் ஓங்கும். அழகியமனைவி அமைவாள். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

  சுக்கிரன்: வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும்,மரியாதையும் கூடி ஏழைப் பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள். செல்வம்கொழிக்கும், தானியவகைகள் குவியும். அரசு ஆதரவு கிடைக்கும். அரசாங்கவிருதுகள் கிடைக்கும். பின்னர் வரும் காலத்தில் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க நேரும். வேண்டாத அலைச்சல்கள் ஏற்படும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும். உயர்ந்தவாழ்க்கைத் தரம் அமையும்.

  குரு : ஆவணி 27 க்கு பத்தில் அமரும் குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும்திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும்பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்.வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.

  சனி: விரயத்தில் அமரும் சனியால் பயன்ற்ற அலைச்சல். வெகுதூரப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சனியின் பார்வை 2, 6, 9 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குறைபாடுகள், வேண்டாத வெறுப்புகள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் வரும் காலம் ஆகும். இனி கலகலப்புக்குக்குறைவிருக்காது. சாமர்த்தியமும், சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால்வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு உள்ளம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திதமிருந்து பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும் பிற்பகுதியில் வியாபார நிலை சிறப்படையும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியின் செல்வ நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  கும்பம்

  கும்பம்

  (அவிட்டம் 2,3 பாதங்கள் சஹயம்1,2,3,4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)

  ஆயுள்காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

  சூரியன்: காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால், அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்.வங்கிக் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். படிப்பில் அதிகஅக்கறை தேவை. வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது.தொழில் விருத்தி உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.

  செவ்வாய் : வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால்பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வசதிகள் அனைத்தும்நிரம்பிய அழகிய வீடு அமையும். பின்னர் வரும் காலத்தில் எல்லாக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகள்அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டு, ஆனந்தம் பொங்கும்.

  புதன்: மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் மெத்தனமாக இராமல்,கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம். குடும்பத்தில் சுபகாரியநிகழ்வுகளுக்கான நல்ல தருணங்கள் அமையும். கலைஞர்களின் கௌரவமும்,புகழும் கூடும். உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால் இடைஞ்சல்கள் ஏற்படும். பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள்வாக்குவன்மையால் வருமானம் பெருகும். அரசியல் வெற்றிகளால் ஏற்படும்மகிழ்ச்சி நிரந்தரமாய்
  இருக்காது. புத்தி கூர்மை, பலம் மற்றும் திறமைஆகியவை அதிகரிக்கும்.

  சுக்கிரன்: கடினமான காரியங்கள் என நினைத்த காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப் பெறுவீர்கள். சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள் மூலமாகக் கிடைத்தபணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மிடுக்காக நல்ல உடைகள்அணிந்து அனைவரையும் கவர்வீர்கள். உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும்வெற்றி ஆகியவை ஏற்படும்.

  குரு : ஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும்சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். ஏமாற்றங்கள்,மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயானஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத
  நிகழ்வுகளாகும்.

  சனி - இலாப பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன்பார்வைகளை 1, 5, 10 ஆம் இடங்களின் மீது வீசுகிறார். இதன் காரணமாகசெல்வ நிலை சிக்கலின்றி சீராக உயரும். தொழிலில் புதிய விரிவாக்கத்திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும். புனித யாத்திரையாகத் திருநள்ளாறுசென்று சனிபகவானை சேவித்து வந்தால், பகலவனைக் கண்ட பனி போல்பறந்து துன்பங்கள் மறைந்துவிடும்.

  ராகு: ஆண்டின் ஆரம்பத்தில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் உடல் உழைப்பு அதிகமாகும்.
  கேது: ஆண்டின் ஆரம்பத்தில் மனதில் தெளிவு சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் உண்டாகும்.

  மீனம்

  மீனம்

  ( பூரட்டாதி - 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4பாதங்கள்)

  தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.

  சூரியன்: உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும். அரசு மூலமாக சிறந்த சேவைக்காகசிறப்பான கௌரவங்கள் வந்து சேரும். நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றி மேல் வெற்றிகள் குவியும், எடுக்கும் காரியங்கள் அனைத்தும்சிறப்பாகவே முடியும். புதிய பதவி, கௌரவம் மற்றும்அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைத் தருவார்.

  செவ்வாய்: புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால், எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து, சுவைதரும் காலம் கண்ணுக்குத்தெரியும். சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்.
  பொருளாதாரஉயர்வு ஏற்படும். பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். எல்லாத்துறைகளிலும் இலாபம் ஏற்படும். பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும்.தகராறுகள், வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.

  புதன்: நீண்ட தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். புத்தாடை, புதுஆபரணங்கள் சேர்க்கை, ஏற்படும். நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அழகிய மக்கட்பேறு உருவாகும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம்செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும்பெருகும். சிலருக்குப் தகாத ஆசைகளும், கெட்ட சவகாசங்களும் ஏற்படும்.எனவே, எச்சரிக்கை தேவை.

  சுக்கிரன்: புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும்.பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டு, அவர்களால்உங்களுக்குப் பெருமை சேரும். தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள்ஏற்படும். உங்கள் கடமை தவறாத உணர்வால், உயர் அதிகாரிகளின்நன்மதிப்பைப் பெறுவீர்கள். சுப காரியச் செலவுகள் கூடும். வீட்டில் மகிழ்ச்சியும்கூடும். அதன் பின்னர் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும்.புண்ணிய யாத்திரைகள் மன அமைதி தரும். புதிய இடமாற்றங்கள்பயனுள்ளதாக இருக்கும்.

  குரு: ஆவணி 27 ஆம் நாள் குரு 8 ஆம் பாவத்திற்கு இடம்பெயர்கிறார். அதுவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்லவளர்ச்சி ஏற்படும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சிநிலைத்திருக்கும். அதன் பிறகு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள்கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

  சனி: கர்ம பாவத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வுஉண்டு. திருநள்ளாறு திருத்தலம் சென்றுமந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும். சிலர் பொது வாழ்வில் பிரபலமாகி, முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். மிகுந்தசெல்வங்கள் சேரும்.

  ராகு: ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும்.
  கேது: ஆண்டின் முற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும் பிற்பகுதியில் தொழில் லாபம் அதிகரிக்கும்.

  English summary
  Hevilambi Varuda palangal Star on 14th April 2017 to 13th April 2018 - mesham to meenam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more