வெளிநாட்டில் வாழ்பவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் தர்பணம் மற்றும் திவசங்கள் செய்யலாமா?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை:  தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும்  புண்ணியகாலம் கடந்த புதன் கிழமை ஆவணி 21 (06/09/2017) முதல் தொடங்கி நடைபெறுகிறது.

இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை,  வேதாரண்யம், திருச்சி அம்மா மண்டபம், தில தர்ப்பணபுரி

ஆகிய இடங்களில் தர்ப்பணம் மற்றும் ஸிரார்தங்கள் செய்வது சிறப்பு.

பாரத தேசம் வேத பூமி,

நமது தேசம் வேத பூமி. நான்கு வேதங்கள், யாகங்கள்,என பல்வேறு புனித வேத சடங்குகள் நடைபெற்ற  பூமி. நடக்கின்ற பூமி,ஞான பூமி, கர்ம பூமி ,  வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல புன்ய ஆத்மாக்கள் உருவான பூமி  நமது பாரதம் எனப்படும் பரதக்கண்டம்

"பாரத வர்ஷே; பரதகண்டே" என எந்த காரியத்தை ஆரம்பிக்கும் போதும் சொல்கின்ற வேத சங்கல்பத்தில் வருகின்ற இந்த வரிகள் மூலம் வேதம்  போற்றும் பூமி நம் பாரதம் என்பது தெள்ளத்  தெளிவாகிறது.

நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பித்ருக்களுக்கு எப்படி காரியங்கள் அங்கேயே செய்வது என்று அடிக்கடி கேட்கிறார்கள்.

India is Auspicious And Holy Place Where Shraadh Rites Can Be Performed

மஹா பெரியவா அவர்களுக்காகவே சில அறிவுரை வழங்கி இருக்கிறார்.

பணக்காரர் ஒருவர் காஞ்சி பெரியவர் எனப்படும் பெரியவாவிடம் காஞ்சிபுரத்தில் மடத்தில் இப்படி ஒரு சந்தேகம் கேட்டபோது அருகில் இருந்தவர்களுக்கும் அந்த அறிவுரை பாக்கியமாக கிடைத்தது.

வெகுநேரம் வரிசையில் காத்திருந்த அமெரிக்க பணக்கார பிராமணர் குடும்பம் மெதுவாக பெரியவா முன் நகர்ந்து வந்து பேசும் தெய்வத்தின் எதிரே தரையில் அமர்ந்தார்கள். ஒரு கயிரைக் கட்டி இதற்குமேல் அருகே வரக்கூடாது என்று மட சிப்பந்திகள் எல்லை அமைத்திருந்தார்கள். தெய்வத்தின் பார்வை அவர்கள் மேல் விழ அந்த தனவந்தர் பேசினார். அவர் மட்டுமே பேசினார்:

''மகா பெரியவா, இருபத்தைந்து வருஷமா வெளிநாட்டிலே இருக்கேன். இது என் மனைவி, இவர்கள் என் பிள்ளை, பெண்கள். வெளியூர்லே இருக்கேன் என்று பேரே ஒழிய பிராமண சம்பிரதாயத்தை விடலை. ரெண்டு வேளை சந்தி பண்றேன். தோப்பனார், தாயார் ஸ்ராத்த கர்மாவை விடறதில்லை. எல்லா ஸாமக்ரியைகளும் இங்கேருந்து வரவழைச்சுடறேன். பணத்தை லக்ஷியம் பண்ணலை. அப்பா அம்மாவுக்கு எந்த குறையும் இருக்க கூடாதே . இதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு நான் இந்த உடம்போட இருக்க அவா தான் காரணம். அவா மேலே லோகத்தில் நன்னா இருக்க என்னவேணா செலவு பண்ண காத்திண்டிருக்கேன். கடமைப்பட்டிருக்கேன். ரெண்டாவது என் பிள்ளைகள் என்னைப் பார்த்து அவாளும் எனக்கப்புறமும் இதெல்லாம் பால்லோ பண்ணனும். பித்ருக்களை விட பெரிய தெய்வம் யாராவது இருக்காளா? சொல்லுங்கோ பெரியவா?

நான் எதுக்கு சொல்றேன் இதை என்று கேட்டா என்னைப் பார்த்து மத்தவாளும் இதே மாதிரி பண்ணனும்னு தான். பெரியவா நீங்க சொல்லுங்கோ நான் செய்யறது சரி தானே.'' என்று நிறைய பேசினார் அவர்.

இப்படி அவர் பேசினது அங்கிருந்த மற்ற பெரியவா பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படியா ஒருத்தன் தன்னைப் பத்தி அதுவும் பெரியவா எதிர்க்க தம்பட்டம் அடிச்சுப்பான். ஐயோ பெரியவா என்ன நினைப்பாளோ? பேசாம தரையைப் பார்த்துண்டு இருக்காளே!

பெரியவா தலையை நிமிர்த்தி அந்த ப்ராமணரைப் பார்த்தார். சில கேள்விகளை கேட்டார்.

'' நீ சொன்னாயே, இங்கிருந்து ஸ்ராத்த சாமான் எல்லாம் உன் அமெரிக்காவுக்கு வரவழைக்க என்ன செலவாகிறது?'

ரொம்ப பெருமிதமாக மற்றவர்கள் காதில் விழும்படியாக உரக்க அந்த மனிதர் எவ்வளவு டாலர்கள், அது எவ்வளவு இந்திய ரூபாய்களுக்கு சமானம் என்று சொன்னார்.

'' ஓ, அவ்வளவு ஆறதா? அது சரி, வைதிக பிராமணாவுக்கு எல்லாம் என்ன ஆகும்?

''அது ஒண்ணும் பெரிசு இல்லை பெரியவா. என்கிட்டே நல்ல பெரிய டேப் ரிகார்டர் இருக்கு. இங்கேயே எங்க குடும்ப வாத்யார் வச்சுண்டு அந்த மந்திரமெல்லாம் பூரா அதிலே பிடிச்சுண்டு போயிடறேன். அதை வச்சுண்டு நான் ஸ்ராத்த கார்யம் எல்லாம் பண்ணிடறேன் அங்கே. மனசிருந்தா மார்க்கம் உண்டு என்பார்கள் இல்லையா. பெரியவா''

'' அடடா, நீ சொல்றப்பலே இப்படி ஒரு மார்க்கம் இருக்கோ? என்கிறார் பெரியவா.

'' சயன்ஸ் விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு பெரியவா''

''ஓஹோ. அப்படின்னா ஸ்ராத்தம் இப்படி கூட விஞ்ஞானத்தை வச்சுண்டு பண்ணமுடியுமோ?''

'' சரியா சொன்னேள் பெரியவா''

''ஒருத்தருக்கு ஒருதடவை இங்கேயிருந்து அங்கே பிளேனிலே போக வர என்ன ஆறது?

அந்த பிராமணருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எத்தனை விமானம் மாறி ஏறி இறங்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன சார்ஜ் என்று விலாவரியாக சொன்னார்.

''ஆஹா. இவ்வளவு ஆறதா?

''நான் பணத்தை லக்ஷியம் பண்றதில்லே பெரியவா. முதல் கிளாஸ்லே, பிசினஸ் கிளாஸ்லே தான் போவேன். இந்த சாதாரண க்ளாஸ் ஜனங்களோட சேர வேண்டாம் பாருங்கோ. அவா சகவாசம், . அவர்களோட தொந்தரவு இருக்காது. நமக்கு வசதி இருக்கும்போது மட்ட ரகமானவர்களோடு எதுக்கு சரி சமானமாக பழகணும். இல்லையா பெரியவா?""

'' ஓஹோ அப்படியா. வருஷா வருஷம் வருவியா, எப்பல்லாம் வருவே?

“ அது தான் கஷ்டம். சொல்லவே முடியாது பெரியவா. உத்யோகவேலையா வருவேன். சொந்த விஷயமா வருவேன். எப்ப வருவேன் போவேன் என்று சொல்ல முடியாது பெரியவா. உத்யோக ஜோலியா வந்தா தனியா வருவேன். சொந்த காசிலே வரும்போது கிருஸ்துமஸ் லீவ்லெ வருவோம். நவராத்திரிக்கு குடும்பத்தோடு எப்போதும் வருவேன். அதுக்கும் ரெண்டு காரணம் பெரியவா.

முதல்லே, ''அவள் அகிலாண்ட கோடி நாயகி. லோக மாதா. அவ இல்லைன்னா இந்த உலகத்திலே நாமெல்லாம் ஏது? உலகமே ஏது ? அப்படித்தானே பெரியவா?

ரெண்டாவது இந்த விழாக்கள், அதுக்கு அர்த்தம், பண்ணவேண்டிய அவசியம், எப்படி பண்றது என்றெல்லாம் பார்க்க குழந்தைகளோட வருவோம். அப்போது தானே அடுத்த தலைமுறை இதெல்லாம் செய்யவேண்டும் என்று ஆசைப்படும். செய்யவும் கற்றுக் கொள்ளும். நல்லபடியா தலை எடுக்கவேண்டாமா? பணமா முக்கியம் லைஃலே. இல்லையா பெரியவா?'''

பெரியவா பதிலளித்தார்:

''வாஸ்த்வம். நீ அப்படின்னா நிறைய அங்கே சம்பாதிக்கிறே. உன் குழந்தைகளை நன்னா வளக்கணும். பித்ருக்களை திருப்தி படுத்தணும்,னு நிறைய செலவு பண்றே, உனக்கு அடிக்கடி உத்யோக பூர்வமா இங்கே வரமுடியறது, அதை தவிர செலவு பண்ணிண்டு நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீ சொல்றதை பார்த்தா நீ எல்லோரோடும் பழகமாட்டே. உன் லெவல்லே இருக்கறவாளோடு மட்டும் பழகுவே. உனக்கு கீழ் ரேங்க் லே இருக்கற வாளோடு பார்க்கவோ, பழகவோ, பேசவோ மாட்டே. இல்லையா'' என்கிறார் பெரியவா.

அந்த முட்டாள் மனிதருக்கு புரியவில்லையே தவிர, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெரியவா எங்கே போகிறார்கள் என்று உணர்ந்து ஆர்வமாக கேட்டார்கள்.

India is Auspicious And Holy Place Where Shraadh Rites Can Be Performed

''பணம் இருக்கிறதால, இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போறே. அங்கிருந்து நினைச்சபோது வர்றே. யார் உனக்கு இப்படியெல்லாம் பித்ரு காரியம் அங்கே பண்ணலாம்னு சொல்லிக் கொடுத்தது? உன் கிட்டே பிண்டம் பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமிலே வந்து வாங்கிக்குவா என்று யார் சொன்னது? எனக்கு தெரிஞ்சு அவா அம்மாவாசை, மாச தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம் ஸ்ராத்த திதி இதுலே இந்த பாரத புண்ய பூமிலே, பரத கண்டத்தில் மட்டும் தான் வந்து வாங்கிக்கணும்னு கேள்விப்பட்டிருக்கேன். பாவம், நீ கவலைப்பட்ட, அக்கறையா இருக்கிற பித்ருக்கள் எல்லாம் வருஷா வருஷம் அந்தந்த திதிலே ஆர்வத்தோடு, ஆசையோடு, பசியா வந்து உன்கிட்டே பிண்டம் வாங்கிண்டு உன்னை ஆசீர்வாதம் பண்ண வந்தும் அது கிடைக்காம பாவம் வெறும் வயித்தோடு திரும்பி உன்னை சபிச்சுட்டு போயிண்டுருக்கா. இங்கேருந்து கடல் கடந்து பிராமணா வரமாட்டா. போகக்கூடாது என்கிறது சாஸ்திரம். பித்ருக்களுக்கு மேலான தெய்வங்கள் கிடையாதுன்னு சொல்றே. ஆனா அவா சாபத்தை நிறைய இருபத்தஞ்சு வருஷமாக வாங்கி நிறைய மூட்டை கட்டிக்கிறே .

நீ சொல்றாப்பல நவராத்ரிக்கு மட்டும் விடாம இங்கே வந்து பெரிய தெய்வமான அம்பாளை வழிபட றே . ஆனா பித்ரு கார்யம் பண்ண அந்தந்த திதிலே இங்கே வந்து பண்ண மனசில்லே . உண்மையாக நீ சொல்றமாதிரி உன் தோப்பனார் தாயார் மேலே பக்தி இருந்தா இருபத்தஞ்சு வருஷமா அவர்களை பட்டினி போட்டதுக்கு பரிகாரமா உன் குடும்ப வாத்தியார்கள் கிட்டே கலந்து பேசி பித்ரு கர்மாக்களை இங்கேயே உனக்கும் அவர்களுக்கும் சௌகர்யமா ஒரு இடத்திலே பண்ணிடு. அப்பதான் உன் பித்ருக்கள்

உண்மையாகவே திருப்தி அடைவா. ஆசிர்வதிப்பா. புரியறதா?''

அந்த மனிதர் ஆடிப்போய் விட்டார். கண்களில் நீர் தாரை தாரையாக வெள்ளமாக ஓட பெரியவா எதிரே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார்.

''மஹா பெரியவா, என் தெய்வமே, ஸாக்ஷாத் பரமேஸ்வரா, என் கண்ணைத் திறந்துட்டேள். முட்டாள் நான் தப்புப் பண்ணிட்டேன். இப்பவே போறேன். இத்தனை வருஷமா பண்ணின அபச்சாரத்துக்கு பரிகாரம் தேடி உடனே ஸ்ராத்தாதிகள் பண்றேன். எங்க எல்லாரையும் மன்னிச்சு பெரியவா பெரிய மனசு பண்ணி பிரசாதம் தரணும்னு வேண்டிக்கிறேன். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.

பெரியவா தட்டுலே கல்கண்டு, பழம், வில்வம், விபூதி குங்கும பிரசாதம் கொடுத்தா. அந்த அம்மாளுக்கு ஒரு ரவிக்கை துண்டு. கொடுத்துட்டு '' எல்லோரும் மடத்துலே ஆகாரம் பண்ணிட்டு அம்பாளையும் தர்சனம் பண்ணிட்டு போங்கோ . ச்ராத்தம், பரிகாரம் எல்லாம் பண்ணிட்டு ஊருக்கு போறதுக்கு முன்னாலே வந்துட்டு போ. க்ஷேமமா இருப்பேள் ''

தெய்வம் கை உயர்த்தி எல்லோரையும் ஆசீர்வாதம் பண்ணியது.

முன்னோர்களின் ஆசி:

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

India is Auspicious And Holy Place Where Shraadh Rites Can Be Performed

கயா ஸ்ரார்தம்:

ஸ்ரார்த்த பூமிம் கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் ஜனார்தனம் வஸ்வதீம்ஸ்ச பித்ரூன் த்யாத்வா தத: ஸ்ராத்தம் ப்ரவர்தயே

பித்ருகர்மாக்கள் கயாவில் செய்யப்பட்டால் கிடைக்கும் புண்ணியம் அளவில்லாதது எனப் புராணங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தாலேயே த்ருப்தியடைந்து, பிறவித் தளையிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.

கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ப்பட்டாலும், அதன் நிறைவில், 'கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்' என்று பிரார்த்தித்து, அக்ஷய வடம் இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது.

வசு ருத்ர ஆதித்யர்கள்:

பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்  வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

India is Auspicious And Holy Place Where Shraadh Rites Can Be Performed

பித்ரு வழிபாடு:

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

பித்ரு தோஷம்:

இந்தப் புனிதமான தர்ப்பணங்களை  செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, வருமை, கடன், வேலையில்லா நிலை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

1. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

2.  பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

India is Auspicious And Holy Place Where Shraadh Rites Can Be Performed

4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பந்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்:

1.  ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும்.  பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். 

திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள்.

காசியை காட்டிலும்  வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

3. திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி:

திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.

இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

4. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பனம், ஸ்ரார்தம் செய்து

"தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:"

எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India is home to rich culture, awe-inspiring traditions and myriad other norms and customs. It undoubtedly, is the heart of all significant rites and rituals which hold special meaning in the lives of people. Pitru Paksha is the holy observance when the holy rite of sharadh is performed by millions of people every year. It is the propitious period of offering prayers to ancestors, and souls of deceased family members and relatives for their ultimate peace and freedom from the material world.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற