ஓணம்: ஓங்கி உலகளந்த பெருமாள்.... தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்
தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் " தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்" என்ற விடுகதை பற்றியும் ஓணம் பண்டிகைக்கும் இந்த விடுகதைக்கும் உள்ள தொடர்பை பற்றியும் அறிந்து கொள்வோம்.
ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது கேரளா என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
கேரள மக்கள் இன்றளவும் மதித்து போற்றும் அளவுக்கு உன்னத அரசனாக இருந்தவன், அந்த தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி.

மகாபலி சக்கரவர்த்தி
தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் தெருக்கள்தோறும் மக்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

திரியை தூண்டிய எலிக்கு சிவனின் ஆசி
சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. மறு ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.

திருவோணத்தின் சிறப்பு
இருபத்தேழு நட்சத்திரங்களில் செல்வத்தை குறிக்கும் "திரு" எனும் அடைமொழியை கொண்ட நக்ஷத்திரங்கள் சிவனுக்குறிய திருவாதிரையும் பெருமாள் எனும் விஷ்ணுவிற்குறிய திருவோணமும் ஆகும். கற்பனை கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்; சீரிய வழியில் பொருள் தேடுபவர்; நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி; செல்வந்தர் என்று கூறுகிறது.

காசு சம்பாதிப்பதில் குறி
திருவோண நட்சத்திரம் கால புருஷனின் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாம் வீடு மற்றும் கர்ம காரகன் சனியின் வீட்டில் அமைந்திருக்கிறது. எனவே திருவோணத்தில் பிறந்தவர்கள் "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே" என்ற பாடலுக்கு ஏற்ப காசு சம்பாதிப்பதையே குறியாக கொண்டிருப்பார்கள்.

திருவோணத்தில் பிறந்தவர்கள்
புகழ்பெற்ற ஜோதிட நூலான நட்சத்திர சிந்தாமணி திருவோணத்தை மிகவும் சிறப்பாக கூறுகிறது. வடமொழியில் சிரவணம் என்ற சொல்லுக்கு செவியால் கேட்கும் திறன் என்று பொருள். எனவே திருவோணத்தில் பிறந்தவர்கள் நன்கு கற்று புகழோடு திகழ்வார்கள். மிகவும் அழகானவர்கள். எதிர்பாலினத்தை எளிதில் கவர்ந்து விடுவார்கள். தன் அழகால் அனைவரையும் கவர்ந்திடுவார்கள். எளிதில் உணர்ச்சிவச படக்கூடியவர்கள் என கூறுகிறது.

தைரியசாலிகள்
ஜாதக அலங்காரத்தில் திருவோண நட்சத்திரம் பற்றி கூறும்போது திருவோணத்தில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர், ஆனால், தன்னை அண்டியவர்களுக்கு வாரி வழங்குபவர் என்று கூறுகிறது. யவன ஜாதகம், இவர்களை பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதன்; தைரியசாலி; தனவந்தன்; ஆயகலை அறுபத்து நான்கையும் கற்றவர் என்று கூறுகிறது. பிருகத் ஜாதகம், இவர்கள், நற்குணமுள்ள மனைவி உடையவர்; செல்வந்தன்; கீர்த்தி உடையவர் என்று கூறுகிறது. சரி இனி நாம் தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் என்ற விடுகதை எப்படி வந்தது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

தட்டானுக்கு சட்டை
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். தட்டான் என்பவர் இங்கே மகாபலிச் சக்கரவர்த்தி. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள். தட்டான் என்றால் கமண்டலம் என்றும் சொல்வார்கள்.

யாகம் செய்த மகாபலி சக்கரவர்த்தி
மகாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்து அதன் முடிவில் தானம் கொடுக்க முடிவு செய்தார். இதை அறிந்த தேவர்கள் வெலவெலத்து போனார்கள். மகாபலியின் புகழ் அதிகரித்து விடுமே, மூவுலகையும் ஆட்சி செய்யும் அதிகாரம் வந்து விடுமே என்று அஞ்சினர் தேவர்கள் பகவான் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

குட்டைப்பையன்
மகாவிஷ்ணுவும் வாமன ரூபத்தில் அவதாரம் எடுத்தார். குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. 3 அடி உயரமே கொண்ட வாமனர் ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலமுமாக மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தும் இடத்திற்குச் சென்றார். வேள்வி தொடங்கி, தான தருமங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் அங்கு தாமதமாக வந்து சேர்ந்தார் வாமனர்.

மூன்றடி மண் கேட்ட வாமனன்
வாமனரைப் பார்த்ததும் வேள்வியில் இருந்து எழுந்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, 'அந்தணரே! தான தருமங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வந்துள்ளீர்களே!' என்று கேட்டான். அதற்கு வாமனர், 'நான் வர சற்று தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை. என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண் கொடுத்தால் போதும்' என்றார். அவரது வேண்டுதலை தட்டமுடியாமல் தானம் கொடுக்க ஒப்புக்கொண்டான் மகாபலி.

திருமாலின் அவதாரம்
வந்திருப்பது மகாவிஷ்ணு என்று அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு தெரிந்து விடுகிறது. உடனே மகாபலியை எச்சரிக்கிறார் சுக்கிராச்சாரியார். 'மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

தாரை வார்த்துக்கொடுத்த மகாபலி
'குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!' என்று மகிழ்ச்சியடைந்தார் மகாபலி, அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான். மகாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொண்டார் சுக்கிராச்சாரியார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து கமண்டலத்தில் அடைபட்டிருந்த பகுதியை குத்தி விடுகிறார். இதில்தான் சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி போய்விடுகிறது.

உலகளந்த பெருமாள்
மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தார். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்கரவர்த்தி.

பாதாள லோகத்தில் மகாபலி
உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர் மகாபலியிடம், 'சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது' என்று கேட்டார். 'இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்' என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார். மகாபலியின் பெருமையை உலகறியச் செய்தார். அப்புறம் என்ன பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார். அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மகாபலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள். இது தான் "தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்..." என்ற விடுகதைக்கான விளக்கம்.












Click it and Unblock the Notifications