சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - ஆடிச்சுற்று சுற்றுவதற்கு தடை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்: சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. கோவிலுக்குள் பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதியுலா நடைபெறும்.

நாளை காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அம்மன் சிவிகையில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது.
தினமும் காலையும், இரவும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழா சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா நாட்களில் தினமும் இரவில் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகபடியில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆடித்தபசு விழாவில் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மண்டகபடிதாரர்கள் பூஜை பொருட்களை வழங்கினாலும், கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆடித்தபசு விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆடித்தபசு விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் 50 பேரை கோவிலுக்குள் அனுமதிப்பது. அதற்கான அடையாள அட்டைகளை கோவில் நிர்வாகம் மூலம் வழங்குவது. விழாவின் சிகர நாளில் ஆடித்தபசு காட்சிக்கு ஏற்பாடு செய்யும் மண்டகபடிதாரர்களான இரு சமுதாயத்திலும் தலா 50 பேரை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். தவக்காலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் சுற்றி வருவது வழக்கம். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு ஆடிச்சுற்று சுற்றிவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications