தோஷம் நீங்கி ஞானம் தரும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் - 30 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளின் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மற்றும் மதுரை ஆதீனகர்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீன பரிபாலனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் அவதரித்தவர். "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் இந்த சீர்காழியில் தான் பாடினார்.
தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை சீர்காழி தலத்திற்குண்டு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பைரவ ஷேத்திரம் சீர்காழி
'காசியில் பாதி காழி' என்பது பழமொழி , காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும். இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரி கோலத்திலும், அதற்குமேலுள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவபெருமான் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.

சிவனின் சிறப்புகள்
உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர்
சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.

தோடுடைய செவியன் சிவன்
குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். அதைக் கேட்ட தந்தை பிரமித்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

மகாலட்சுமி அருள்
பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வழக்கு பிரச்சினை நீங்கும்
மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ்ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

கைலாய காட்சி தலம்
பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.
அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி சந்நிதியாகவுள்ள இந்த ஆலயம் பைரவ க்ஷேத்திரமாகும். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை.

தருமபுர ஆதீனம் அடிக்கல்
சமயக் குரவர்களால் தேவாரம் பாடப் பெற்ற இந்த ஆலயத்தில் 1991ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளன. இதனை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இன்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தின ஈசானிய மூலையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.

மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்தர்
விழாவில் மதுரை ஆதீனம் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருப்பனந்தாள் காறுபாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4 கால பூஜை
இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . தோணிமலை என்று அழைக்கின்றனர்.

திருமுலைப்பால் உற்சவம்
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான். இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications