For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி : பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா - அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Vaikunda Ekadasi 2021: Ten Day Festival at Srirangam Namperumal Dharisanam

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலகப் புகழ்பெற்ற விழாவாகும்.

சிறப்பு வாய்ந்த இவ்விழா பகல்பத்து, ராப்பத்து , இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

Vaikunda Ekadasi 2021: Ten Day Festival at Srirangam Namperumal Dharisanam

ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்வியபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்விய தேசங்களில் இருந்து தெய்வ பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்வியபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்கமாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்திரி மண்டபத்தில் இரவு
7மணிக்கு நடைபெற்றது. இதில் அரையர்கள், பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று காலை பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Vaikunda Ekadasi 2021: Ten Day Festival at Srirangam Namperumal Dharisanam

பிற்பகல் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடி வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

இதே போல் நாள் தோறும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல் பத்து திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் டிசம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் ராப்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேதி திருக்கைத்தல சேவை 20ஆம் தேதியும், 21ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 23ஆம் தேதி தீர்த்தவாரி, 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமுறை ஆகியவை நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கோவில் முழுவதும் கண்களை மயக்கும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

English summary
Thirumozhi thirunal srirangam, the first day of the Pagal pathu festival, has begun ahead of the Vaikunda Ekadasi festival at the Srirangam Ranganathar Temple. Namperumal left the headquarters at 7.30 am and awoke at 8.15 am at Arjuna Mandapam to bless.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X