Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம் சேர்த்தி சேவை : கதவடைத்த தாயார்... சமாதானப்படுத்திய நம்பெருமாள் - தரிசித்த தம்பதியர்

திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை பங்குனி உத்திர நாளன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கணவன் மனைவிக்கு இடையை சின்னச் சின்ன ஊடல்கள் இருக்க வேண்டும் அந்த ஊடல்தான் தாம்பத்ய வாழ்க்கையின் சுவையை அதிகரிக்கும். மனிதர்களாக பிறந்தவர்கள்தான் ஊடல் கொள்ள வேண்டும் என்று இல்லை. தெய்வீக தம்பதியர் இடையே கூட ஊடல் ஏற்பட்டு அந்த ஊடலை தணிக்க நடக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய அம்சமான சேர்த்தி சேவையை பார்த்தாலே சண்டை போடும் தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மகாவிஷ்ணுவின் 108 வைணவ தலங்களில் முதன்மையான தலமாக வைணவர்களால் போற்றி வணங்கப்படும் தலம் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயமாகும். இங்கு வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், பங்குனி பிரம்மோற்சவமும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, நம்பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

நம்பெருமாளும் கமலவல்லி நாச்சியாரும்

நம்பெருமாளும் கமலவல்லி நாச்சியாரும்

ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு சென்றார் நம்பெருமாள். புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி அளித்த அவர், தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொண்டார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஊடல் கொண்ட தாயார்

ஊடல் கொண்ட தாயார்

கமலவல்லி நாச்சியாரை பார்க்கப் போனதால் நம்பெருமாள் மீது ஊடல் கொள்கிறார் ஸ்ரீரங்கநாயகி. தன்னை பார்க்க ஆசையோடு வந்த நம்பெருமாளை பார்க்காமல் கதவை படாரென்று சாத்தி கோபத்தை காட்டுகிறார். ஆதி பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான பங்குனி உத்திரநாளன்று இந்த ஊடலும் சேர்த்தி சேவையும் நடைபெற்றது.

பங்குனி உத்திர சேர்த்தி சேவை

பங்குனி உத்திர சேர்த்தி சேவை

சேர்த்தி சேவையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். தொடர்ந்து 12 மணிக்கு முன்மண்டபம் வந்த சுவாமி, 12.30 மணி முதல் 1.15 வரை முதல் ஏகாந்தம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு 2 மணிக்கு நம்பெருமாள் பங்குனி உத்திர மண்டபம் வந்தடைந்தார்.

ஊடல் முடிந்தது

ஊடல் முடிந்தது

மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரங்கநாச்சியார் 2.15 மணிக்கு சேர்த்தி மண்டபம் வந்தடைந்தார். ஒருவழியாக ஊடல் முடிந்து திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதித்தனர். முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட நம்பெருமாளுக்கே இவ்வளவு அவஸ்தைகள் என்றால் மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலும் இரண்டாவது திருமணம் செய்பவர்கள் அடையும் துன்பம் எத்தனை என்பதையே இந்த சேர்த்தி சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

ஆண்டுக்கு ஒரே முறை தான் நம்பெருமாள்- தாயார் ஒரு சேர காட்சியளிப்பாளர்கள் என்பதால், இதனை தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இதனால் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான தம்பதியினர் தரிசனம் செய்தனர்.

ஜாதகத்தில் இருதார யோகம்

ஜாதகத்தில் இருதார யோகம்

தெய்வங்கள் இருதாரங்களை மணந்ததை புராண கதைகளில் படித்திருக்கிறோம். பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம். இதே போல மனிதர்கள் பலருக்கும் இருதார யோகம் அமைகிறது.

இரண்டு தாரம் யாருக்கு வரும்

இரண்டு தாரம் யாருக்கு வரும்

ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு இருதார அமைப்பு உண்டா என்பதை அறிந்து கொள்ளலாம். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் அவனுக்கு இருதார யோகம் கொடுக்கும். களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திலும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும் இரண்டு கிரகங்கள் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும். ஜாதகத்தில் இருதார தோஷம் பெற்றிருப்பவர்கள் இந்த சேர்த்தி சேவையில் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிதனம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

சேர்த்தி சேவை தரிசனம்

சேர்த்தி சேவை தரிசனம்

களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் சண்டை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சேர்த்தி சேவையை தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+