Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரஸ்வதி அன்னையின் அருளையும் பேச்சுத்திறமையும் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி அன்னைதான். மூலம் நட்சத்திரத்தில் பிறந்த சரஸ்வதி தேவியை எப்படி வணங்கினால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி. கல்விக்கு அதிபதி. வெண் பட்டுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். சரஸ்வதி அன்னை பிறந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை. கலைகளின் தலைவியான சரஸ்வதிக்கே அந்த பிரம்மா சாபம் கொடுத்த புராண கதை பற்றியும் சரஸ்வதி தேவியை எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.

சரஸ்வதிக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டை சாபத்திலும் கோபத்திலும் முடிந்தது. சத்யலோகத்தில் சரஸ்வதி சொன்னதைக் கேட்டு பிரம்மா மறுக்க சரஸ்வதி கோபப்பட்டு பேச பெரிய சண்டையில் முடிந்தது. அந்த கோபத்தில் சரஸ்வதிக்கு சாபம் கொடுத்தார் பிரம்மா.

Saraswati Pooja Avatharam : Asvini to Revathi Which star worship Goddess Saraswati

கணவன் மனைவிக்கு இடையே கருத்தொற்றுமை இருக்க வேண்டும். இல்லையேல், விட்டுக் கொடுத்து செல்லும் தன்மையாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிய வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதையே இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

புராண கதை

சத்தியலோகத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரஸ்வதி, சுவாமி! ஒருவர் பேசும் வார்த்தைதான் அவரின் பண்பைக் காட்டுவதில் முதன்மையாக இருக்கிறது. அவரது உயர்வுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது என்றார். அதைக் கேட்ட பிரம்மா, இல்லை தேவி.. ஒருவரின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு, அவரது உண்மையான பண்பைக் கண்டறிய முடியாது. தற்போது எவரிடமும் உண்மையான பேச்சு இல்லை. தவறான எண்ணங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவர்களைப் போல் வேடமிட்டுப் பேசுபவர்களே அதிகம். எனவே பேச்சுக்கு எந்த மதிப்புமில்லை' என்றார்.

பிரம்மாவின் கூற்று சரஸ்வதிக்கு கோபத்தை உண்டாக்கியது. 'நீங்கள் வேண்டுமென்றே நான் சொன்னதை மறுத்துப் பேசுகிறீர்கள். உங்கள் பேச்சில் உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றார்.

'சரஸ்வதி! ஒருவருடைய பேச்சை விட அவரின் நடை, உடை, நடத்தை போன்றவைகளே, அவருடைய பண்புகளைக் காட்டும் கண்ணாடியாக இருக்கின்றன. ஆனால், பேச்சு அப்படியில்லை. சில வேளையில், நாம் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகள் கூட பிறருக்குத் தவறாகத் தோன்றும். நாம் நல்லவராக இருந்தாலும், நம்முடைய பேச்சு அவர்களிடம் நம்மைத் தீயவர்களாக்கி விடும்' என்றார் பிரம்மா. இதைக்கேட்டு மேலும் கோபமடைந்த சரஸ்வதி, 'பேச்சுத் திறனுக்கும், அனைத்துக் கலைத்திறன்களுக்கும் கடவுளான என்னைக் கோபப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்' என்றார்.

பிரம்மாவும் விடுவதாக இல்லை. 'பேசும் பேச்சில் விளையாட்டாய்ச் சொல்லும் வார்த்தைகள் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதேபோல, கனிவான வார்த்தைகள் கல் மனம் கொண்டவரையும் கரைத்து அன்புடையவர்களாக்கி விடுகின்றன. பேச்சினால், இன்ப, துன்பங்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன. அதன் மூலம் பண்புகள் எதுவும் தெரிவதில்லை. பொதுவாக, உன்னைப் போன்ற பெண்களுக்கு இது போன்ற எந்த உண்மையும் புரிவதில்லை' என்றார்.

ஒட்டுமொத்தமாக பெண்களைப் பற்றி பிரம்மா கூறியதும் சரஸ்வதிக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. 'பெண்களைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள். ஆனால் அவர்கள் பேசினால் 'வாயாடி' என்கிறீர்கள். ஆண்கள் மட்டும் எதையும் பேசலாம், எதையும் செய்யலாம். பெண்கள் செய்யக்கூடாது. அனைத்து ஆண்களுக்கும் தான் சொல்வதே சரி, தான் செய்வதே சரி என்ற எண்ணம்தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் சொல்வதற்கெல்லாம் பெண்கள் 'ஆமாம்' போட வேண்டும். இல்லையென்றால் அவர் சரியில்லாதவளாகி விடுவாள். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கே அந்த எண்ணமிருக்கும் போது, அவர் படைத்த ஆண்களுக்கும் அந்த எண்ணம் இல்லாமலா இருக்கும்?' என்றார்.

தன்னைப் பற்றிச் சொன்னது மட்டுமில்லாமல், தன்னுடைய படைப்பையும் சேர்த்துக் குறை சொல்லிய சரஸ்வதியின் மேல் பிரம்மாவுக்கு கோபம் வந்தது. 'சரஸ்வதி! நீ எந்தப் பேச்சை மேலானது என்று நினைத்து, என்னைக் குறைவாகப் பேசினாயோ, அந்தப் பேச்சு இல்லாதவளாகப் பூலோகத்தில் பிறந்து துன்பப்படுவாய்' என்று சாபமிட்டார்.

இப்போதும் சரஸ்வதியின் கோபம் குறையவில்லை. 'ஆண்கள் சொல்வதை பெண்கள் அப்படியே கேட்க வேண்டும். இல்லையேல், அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க வேண்டும் என்பதில் படைப்புக் கடவுளான பிரம்மாவும் விதிவிலக்கில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் எனக்குக் கொடுத்த சாபத்தால் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, நான் உங்களிடம் சாப விமோசனம் கேட்கப் போவதில்லை. இனி நீங்களும் நான் இல்லாமல், எனக்குக் கொடுத்த சாபத்தை நினைத்துத் துன்பமடைவீர்கள்' என்று சொல்லி விட்டுப் பூலோகத்தை நோக்கிச் சென்றார்.

சரஸ்வதி தன் தவறுக்காக வருந்தாமல் நடந்து கொண்டது, பிரம்மாவுக்கு கோபத்தை அதிகரித்தது. அதனால் அவர் மன அமைதிக்காக தியானத்தில் அமர்ந்தார். பிரம்மாவின் சாபப்படி சரஸ்வதி, ஒரு ஏழைக் குடும்பத்தில் வாய் பேச முடியாதவளாக பிறந்து, வாணி என்ற பெயரில் வளர்ந்தாள். வாய் பேச முடியாவிட்டாலும், வாணி யாழ் இசைப்பதில் சிறந்தவளாக இருந்தாள். தினமும் அவள் அருகிலுள்ள சிவபெருமான் கோவில்களுக்குச் சென்று யாழை மீட்டி, தனக்கு பேச்சுத் திறன் தரும்படி இறைவனை வேண்டி வந்தாள்.

ஒருமுறை வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு சென்ற வாணி, அங்கிருந்த சிவபெருமானை யாழை மீட்டி வழிபட்டாள். அப்போது, 'வாணியே, உனக்குப் பேச்சுத் திறன் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். கூடிய விரைவில் உனக்குப் பேச்சுத்திறன் கிடைக்கும்' என்று அம்பாளின் அசரீரி ஒலித்தது.

தன் காதுகளுக்குக் கேட்ட அன்னையின் குரல், தான் மீட்டிய யாழில் இருந்து வந்த இசையைக் காட்டிலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று நினைத்த வாணி, தான் மீட்டிய யாழை மூடி வைத்தார். பின்னர் இறைவனையும், அம்பாளையும் வணங்கி விட்டு, அடுத்த சிவன் கோவிலுக்குச் சென்றார்.

அப்போது பிரம்மா உலக நலன்களுக்கான வேள்வி ஒன்றை நடத்த விரும்பினார். வேள்வியில் தனது மனைவியும் உடனிருக்க விரும்பினார். ஆனால் அவரை சாபமிட்டு பிரிந்ததை எண்ணி வருந்தினார். பின்னர் கயிலாயம் சென்று சிவபெருமானிடம், தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டினார். சிவபெருமான் 'விரைவில் சரஸ்வதி உங்களுடன் சேர்வாள். வேள்விக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்' என்று கூறி பிரம்மாவை அனுப்பிவைத்தார். பின்னர் சிவன், பார்வதியுடன் மாறுவேடத்தில் வாணி இருக்கும் இடம் நோக்கிச் சென்றார். இறைவனும், இறைவியும் அடியவர்களைப் போல் வேடம் தரித்திருந்தனர்.

பின்னர் வாணியிடம் சென்று, தங்களுக்கு யாழ் மீட்டிக் காட்டும்படி கேட்டனர். வாணியும் ஈசனின் அடியவர்களுக்காக யாழ் மீட்டினார். இசையை கேட்டு மகிழ்ந்த இறைவனும், இறைவியும், 'வாணி! உன் யாழ் இசையோடு உன் பாடலையும் கேட்க விரும்புகிறோம். வாய் திறந்து பாடு' என்றனர்.

அதைக் கேட்ட வாணி, தனக்குப் பேச்சு வராது என்று செய்கையால் அவர்களுக்கு உணர்த்தினாள். ஆனால் அடியவர் வேடத்தில் இருந்த ஈசனும், அம்பாளும், 'உன்னால் அருமையாகப் பாட முடியும்' என்று சொல்லி அவரைப் பாடச் சொல்லி வற்புறுத்தினர். இதையடுத்து வாணி பாடுவதற்காக முயற்சித்தாள். இறைவன் அருளால் அவளுக்குக் குரல் வந்தது. இறைவனை வாழ்த்தி அருமையாகப் பாடி முடித்தாள். குரல் வந்ததும் தான், தான் சரஸ்வதி என்பதும், தன் கணவர் பிரம்மாவால் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது. மேலும் தன் முன்பு இருப்பது சிவபெருமானும், பார்வதியும் என்பதையும் அறிந்து அவர்களை சரஸ்வதி தேவி வணங்கினார்.

அவரை வாழ்த்தி ஈசன், 'கலைவாணியே! நீ என்னை வாழ்த்திப் பாடிய இந்த இடம் உனது பெயருடன் சேர்த்து அழைக்கப்படும். (முதலில் 'வாணியம்மைபாடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது வாணியம்பாடி என்று அழைக்கப்படுகிறது) இந்தத் தலத்தில் உனக்கும் தனியாக ஒரு சன்னிதி அமையும்' என்று அருளினார்.

சாப விமோசனம் பெற்ற பிறகும் பிரம்மாவின் மீதான கோபம் சரஸ்வதிக்கு குறையவில்லை. கோபம் குறையாமல் எப்படி அவர் நடத்தும் வேள்வியில் கலந்து கொள்வார். அதனால் விஷ்ணுவை அழைத்து சரஸ்வதியை சமாதானப்படுத்தும்படி சிவபெருமான் வேண்டிகோள் விடுத்தார். அவரும் சரஸ்வதியிடம் பேசி அவரின் கோபத்தைக் குறைத்தார். இதையடுத்து பிரம்மாவுடன் உலக நன்மைக்காக வேள்வி செய்ய புறப்பட்டார் சரஸ்வதி.

சரஸ்வதி தேவியை எந்த நட்சத்திரக்காரர்கள் எப்படி வணங்கலாம்

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவியின் கையில் அங்குசம் வைத்திருக்கிறார். இது மூல நட்சத்திர வடிவமாகும். மேலும் யானையின் துதிக்கை வடிவான வீணை அவரது கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீணையை தலைகீழாக செங்குத்தாக பிடித்தால் அது யானையின் தும்பிக்கை போல காட்சி தரும்.

சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிக்கு உரிய பாடல்கள் பாடியும் வணங்கலாம்.

மூல நட்சத்திர வடிவத்தை சரஸ்வதி தேவியின் கையில் கொடுத்துள்ளனர். மேலும் தாமரை எனும் வடிவம் இவர் நீரில் நிலைகளில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. ஆதாவது நமது பேச்சுக்கு காரணம் நாவில் இருக்கும் ஈர தன்மையே ஆகும். அந்த ஈர தன்மை குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் நமக்கு பேச்சு வராது.

நீர் நிலையில் இருக்கும் கடவுள்களுக்கு தாமரை வடிவம் கொடுப்பது முன்னோர்கள் மரபு. உதாரணமாக லஷ்மி தேவி நீரில் உறைபவர் என்பதால் அவருக்கு தாமரை இருப்பிடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவருக்கு திறமை வடிவ இருப்பிடம் கொடுத்ததற்கு இதுவே காரணம்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி தமது ஜென்ம நட்சத்திரமாக கொண்ட நபர்கள் சரஸ்வதி தேவியை வழிபட கல்வி நிலையில் மேன்மை பெறலாம். விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசத்திற்கு சேமம் எனும் நலம் அளிப்பவர் சரஸ்வதி தேவி ஆவார். சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு தோஷம் போக்கும் தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார்.

குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் தமது தந்தை இழந்து இருந்த காலத்தில், தனது அண்ணனிடம் கற்ற வீணை கலை இவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி பெரிதும் உதவியது. ஒரு காலத்தில் வீணை இசை கலைஞர் என்ற பெயரே அடையாளமாக இருந்தது. வீணை இவரது சாதக நட்சத்திரமான மூலத்தின் வடிவாகும்.

ராகவேந்திர ஸ்வாமிகள் வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவர். இவரது வறுமை காலத்தில் வீணை இசை சொல்லிக்கொடுத்தே இவரது ஜீவனம் நகர்ந்தது. மேலும் மனவிரக்தி அடைந்து குளத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இவரது சாதக நட்சத்திர தெய்வம் சரஸ்வதி தேவி குளத்தில் வீணையுடன் தோன்றி இவரது முற்பிறவி ரகசியத்தை கூறி ஞானம் கொடுத்தார். அதன் பிறகே வேங்கடநாதன் எனும் நாமம் மாறி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் என்ற நாமம் நிலைபெற்றது

புதன் கிழமை காலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி தேவியின் 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம்,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும். மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம். சகல நலங்கள் பெற இந்த சரஸ்வதி பூஜை நாளில் அன்னை சரஸ்வதியின் புகழ் பாடி போற்றுவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+