For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ண ஜெயந்தி 2022: வீடு தோறும் ஜென்மாஷ்டமி கொண்டாட காரணம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் 9வது அவதாரம் கிருஷ்ணா அவதாரம். மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார் பகவான் கிருஷ்ணன். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இந்த ஆண்டு ஆவணி 03 ஆம் தேதி ஆகஸ்ட் 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நம் வீட்டிலும் கிருஷ்ணரின் பாதங்கள் பட வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகின்றோம்.

கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்து சுவாரஸ்யமான சம்பவம். கம்சன் என்ற அரக்கன் மதுராவை ஆண்டு வந்தான். கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது. தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு வந்திருந்தான். கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு! என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன். உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன். 8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீர் விட்டாள். பெருமழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

ஆவணி மாதம் அஷ்டமி திதி

ஆவணி மாதம் அஷ்டமி திதி

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் அவதரித்தார் பகவான் கண்ணன். அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்று பயந்தனர். அப்போது குழந்தை, பேசத் தொடங்கியது. 'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று உத்தரவிட்டார் மகாவிஷ்ணு.

கோகுலத்தில் கண்ணன்

கோகுலத்தில் கண்ணன்

கோகுலத்தில் வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். சில காலங்கள் அன்னை யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்' என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார். வசுதேவர் தன் கால்களை அசைத்தவுடன் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. காவலர்கள் மயக்கமடைந்தனர்.

தேவகியின் மைந்தன்

தேவகியின் மைந்தன்

கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்தார். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். வெள்ளம் கரைபுரண்டு ஓடிய யமுனை ஆறு இரண்டாக பிரிந்து வழிவிட நாகம் குடை பிடிக்க மழையில் நனையாமல் சென்றார் கண்ணன். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார். காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான்.

கம்சனின் கோபம்

கம்சனின் கோபம்

ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான். ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. விஷ்ணு பகவானின் உதவியாளரான யோகமாயாவாக உருமாறியது அந்த குழந்தை. கம்சனை பார்த்து "ஏ முட்டாளே! என்னை கொல்வதால் உனக்கு என்ன கிடைக்கும்? உன் எதிரி ஏற்கனவே பிறந்து விட்டான் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறான் காலம் வரும்போது உன்னைக் கொல்வான் என யோகமாயா கூறவே கம்சன் கோபமடைந்தான்.

அரக்கனை அழித்த குட்டிக்கண்ணன்

அரக்கனை அழித்த குட்டிக்கண்ணன்

தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக புட்டனா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். தேவகி கிருஷ்ணரை பெற்றெடுத்த அதே நாளில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் அவன் கொல்ல சொன்னான். அதனால் அழகிய பெண்ணாக வேடமணிந்த அந்த அரக்கன் தன் மார்பகங்களில் விஷத்தை தடவிக் கொண்டான். அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட பறந்து வந்து நோட்டமிட்டான். நந்த கோபரின் வீட்டிற்கு வந்த அந்த அரக்கன், தன் குழந்தையை தன்னிடம் காட்டுமாறு யசோதையிடம் கேட்டான். குழந்தை கிருஷ்ணரை தன் மடியில் போட்ட புட்டனா தன் மார்பக காம்புகளை குழந்தையின் வாயில் திணித்தான். கண்களை மூடிக்கொண்ட கிருஷ்ணர், விஷத்தை உறிஞ்சாமல், அவனின் மூச்சு காற்றை உறிஞ்சி, அவனை கொன்றார்.

காலால் உதைத்து கொன்ற கண்ணன்

காலால் உதைத்து கொன்ற கண்ணன்

புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன்,ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். ஒரு வண்டி போல் வேடமிட்ட அந்த அசுரன் கோகுலத்தை அடைந்தான். கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த போது அந்த நிகழ்வை கொண்டாட நந்தகோபரும் யசோதாவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மாடுகளை மேய்க்கும் அனைத்து பெண்களும் அவள் வீட்டு முன்பு கூடி, பண்டிகை பாடல்களை பாடினார்கள். கிருஷ்ணாவின் நீண்ட ஆயுளுக்கு பல புனித சடங்குகளையும் செய்தனர். மர வண்டியின் அடியில் படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி கவனிக்க மறந்தாள் யசோதா. ஷகாட்சுரா அரசன் குட்டி கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான். பசியெடுத்த கிருஷ்ணர் அழத் தொடங்கினார். இதனை கண்டு கொள்ளாமல் யசோதா இருந்ததால், கிருஷ்ணர் அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது. குழந்தை கிருஷ்ணர் அழுது கொண்டிருந்தார். குழந்தையை உடனடியாக தூக்கிய யசோதா கட்டிபிடித்து, பாலூட்ட தொடங்கினார்.

கண்ணனின் லீலைகள்

கண்ணனின் லீலைகள்

பிருந்தாவனத்தில் கண்ணன் பிருந்தாவனத்தில் குழந்தை கண்ணன் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்து கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள். நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.

கம்சனை வதம் செய்த கண்ணன்

கம்சனை வதம் செய்த கண்ணன்

குழந்தையாக இருந்த போதே தன்னை அழிக்க வந்த அரக்கர்களை கொன்ற கண்ணன் பல லீலைகளையும் செய்து குறும்பு கண்ணனாக வலம் வந்தார். மதுராவிற்கு வந்து தனது தாய் மாமன் கம்சனையும் வதம் செய்து கொன்றார். கண்ணனின் பிறப்பு அசுர வதத்திற்காக மட்டும் நிகழ்ந்ததல்ல. போர்க்களத்தில் பகவத் கீதையை போதித்து மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார் பகவான் கிருஷ்ணன். நம் வீட்டிலும் கிருஷ்ணரின் பாதங்கள் பட வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகின்றோம்.

English summary
Sri Krishna Jayanthi When is Janmashtami in India Srikrishna incarnated on Teipirai Ashtami in Avani matham. This year Krishna Jayanti is celebrated on Avani 03rd August 19,2022.In Tamil Nadu, the festival is known as Sri Krishna Jayanthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X