
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தம்..புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்றைய தினம் பல டன் மலர்களால் பிரம்மாண்ட புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருப்பதி சீனிவாச பெருமாள் கல்யாணம் உற்சவம் பாருங்க..கெட்டி மேளம் கொட்டும்..டிக்கெட் புக் பண்ணுங்க

கார்த்திகை பிரம்மோற்சவம்
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19ஆம் தேதி அங்குரார்பணமும், 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார்.

கஜ வாகனம்
கஜவாகனம்,கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, குதிரை வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்தார். ஏழாம் திருநாளன்று ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடைபெற்றது.விழாவின் எட்டாம் திருநாளான நேற்று பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

பஞ்சமி தீர்த்தம்
பிரம்மோற்சவ நிறைவு நாளான்று பஞ்சமி தீர்த்த குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.
பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தை சிரமமின்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.அதில் பக்தர்கள் ஓய்வெடுத்ததுப் போக மீதி உள்ள பக்தர்களுக்கு திருச்சானூர் அய்யப்பன் கோவில், ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, புடி ரோடு ஆகிய இடங்களிலும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தேநீர், காபி ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜெர்மன் ஷெட்டுகளில் இருந்து பக்தர்கள் புஷ்கரணிக்குச் செல்ல சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று புனித நீராட வசதியாக உள்ளே செல்லும் வழி, நீராடி விட்டு புஷ்கரணியில் இருந்து வெளியே போகும் வழி அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 500 போலீசாரும், இதுதவிர திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவஸ்தான ஊழியர்களுடன் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அம்மனுக்கு அலங்காரம்
அதைத்தொடர்ந்து தாயாருக்கு ஏழுமலையான் வழங்கிய சீர்வரிசை பொருட்கள், பட்டு வஸ்திரம் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. வாகன மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வாருக்கு குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள், திராட்சை, மயிலிறகு, ரோஜாபூ, துளசி மாலைகள், கிரீடங்கள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

கோவிந்தா முழக்கம்
காலை 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர். இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெற்றது. இன்று மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதனுடன் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.