முடிவுக்கு வந்தது மழை.. அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

- கன்னிமார் (கன்னியாகுமரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 4,
- விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2,
- தேக்கடி (தேனி), எமரால்டு (நீலகிரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சோலையார் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்)கரூர் பரமத்தியில் 23.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-38* செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே 24-04-2025 மற்றும் 25-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-04-2025 முதல் 30-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 24-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, 24-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
24-04-2025 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (24-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 24-04-2025 முதல் 28-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications