For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 6... "வளையல்"!

Google Oneindia Tamil News

- விஜயா கிப்ட்சன்

"நமக்கென்னமோ ஒரு சிலரை காரணமே இல்லாமல் புடிச்சுத்தான் போகுது...அவர்கள் என்ன செய்தாலும்-- எப்படி இருந்தாலும்! ..."

இந்த ராஜிக்கா இருக்காங்களே அவ்ளோ பொறுப்பு ...அப்புறம் பொம்பள புள்ளன்னா பொறுப்பா தான நடந்துக்கணும்! ..

அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருச்சு , டாக்டர் வீட்டுக்கு நடந்தே வந்துருவாங்க . சத்திரம் பக்கம் தான் வீடுன்னாலும் ஹைகிரவுண்டு வரைக்கும் நடக்கணுமே ! எப்புடியும் போனோன்ன பால சுடவச்சு காபியோ டீயோ போடணும் ...

ஹரிணிக்கு ஹார்லிக்ஸ்ன்னா.. விகாஸுக்கு காம்ப்பிளான் .. அதுனால வீட்லேந்து வரும் போதே பசும்பால் வாங்கிட்டு வந்துருவாங்க ...

Sillunnu Oru Anubavam Transgenders written by Vijaya Giftson

காபி கடைய முடிச்ச உடனேயே அடுத்த பர்னர்ல பிரேக் பாஸ்ட் செய்யணும்!..

மருத்துவர்கள் இருவரும் ஆஸ்பத்திரி போன உடனே ராஜிக்கா உழவர் சந்தைக்கு போய் அன்னைக்கு தேவையான காய் கறிகளை வாங்கிட்டு வந்துருவாங்க. "அதென்ன தினமும் இது ஒரு பைய தூக்கிக்கிட்டு ஒன்னு ரெண்டு காய் கறியா வாங்க வருது??! .. கேட்டா டாக்டர் வூட்டுல வேல பாக்கேன் வேற சொல்லுது ! எனக்கென்னமோ சரியாப் படல ..இது தேங்கா ... கடை கிழவியின் டயலாக் ..

அதையெல்லாம் காதுல வாங்கியும் வாங்காமலும் ராஜிக்கா "அரைகிலோ காரட் போடுங்க , ஒரு கிலோ உருளைக்கிழங்கு போடுங்க ன்னு ஒரு வார்த்தை கூட பேசாம சட சடன்னு ரெண்டு கூடைய எடுத்து அதுல தேவையானதை தூக்கி போட்டுட்டு சட்டுன்னு பணத்த குடுத்துட்டு கிளம்பீருவாங்க!

அது வரைக்கும் விகாஸ் வீட்டை பூட்டிட்டு நல்ல புள்ளையா தங்கச்சியையும் பாத்துக்குவான் ..

ஹரிணியோ குட்டிப் பிள்ளை ...அவளைக் குளிப்பாட்டி , சாப்பாடு வேற ஊட்டி விடணும். "அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே , மாமன் அடிச்சானோ மல்லிகப்பூ செண்டாலேனு பாட்டு பாடி வேற தூங்க வைக்கணும்....ஹரிணி தன் அம்மாவிடம் தூங்கியதைக் காட்டிலும் ராஜிக்காவின் மடியில் தூங்கிய பொழுதுகள் தான் அதிகம் !

ஹரிணியோ "ராஜிம்மா" என்று வாய்நிறைய கூப்பிடுவாள் ..அப்டி கூப்பிடும் போதெல்லாம் தனக்கு வாரிசு என்று ஒன்று இருந்தால் எப்படி வாரி அணைத்துக் கொஞ்சுவாளோ அப்டி உச்சி முகர்ந்து கொஞ்சி கொள்வாள் ராஜிக்கா !

"ராஜிம்மா எனக்கு டோசை மேனாம்" னு ஒரு வார்த்தை ஹரிணி சொல்லிட்டா போதும்--

"உனக்கு என்னடா வேணும் தங்கம் --அம்மா குட்டிக் குழி தட்டுல பேபி இட்லி ஊத்தித் தரட்டுமா ? இல்ல உனக்கு புடிச்ச ஷேப்ஸ்ல கோதுமை மாவு பிசஞ்சு குட்டி குட்டி பூரி போட்டு தரட்டுமா?"

"ம்ம் குட்டி பூரி ஓகே " என்பாள் ஹரிணி ..

"ஏன் ராஜிம்மா இன்னிக்கு ப்ளூ கலர் ல சேலை கட்டிருக்கீங்க ? அன்னிக்கு பிங்க் கலர்ல பூப்போட்ட சேலை ரொம்ப சூப்பரா இருந்துச்சு "

"அப்படியா கண்ணு , அது தொவச்சு போட்டேனா மழைனால இன்னும் காயல ..காஞ்சோன்ன உடுத்தீட்டு வரேன் ..."

"ம்ம்.. நானும் பிங்க் கவுன் போட்டுக்கறேன் .சரியா?!

நம்ம மேட்சிங் மேட்சிங் கா போட்டுக்கலாம்! ...

சரிடா கண்ணு ..

"ஆமா மிஸ் ஹோம் ஒர்க் குடுத்தாங்கள்ள முடிச்சிட்டியா?"

"டேய் அண்ணா நீ முடிச்சியா டா ?.."

"அண்ணனை அப்டிலாம் மரியாதையில்லாமல் கூப்பிடக்கூடாது" என்று செல்லமாக கண்டிப்பாள் ராஜிம்மா ..."

விகாசுக்கு முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் பிறகு ராஜிம்மாவிடம் சாப்பாடோ , பண்டமோ ,தண்ணியோ , எதுவானாலும் கேட்கப் பழகி கொண்டான் ..பிறகு அம்மா சாயங்காலம் வரும் வரைக்கும் சமாளிக்கணுமே !

ஹரிணிக்கு சாப்பாடு ஊட்டி விடணும்னா ஒன்னு ரைம்ஸ் போட்டு விடணும் , இல்ல ..பால்கனியில் உள்ள மூங்கில் ஊஞ்சலில் இருந்து கொண்டே அவள் ஆடி ஆடி.. ஆ.... வாங்குனாதான் உண்டு ..

"ராஜிம்மா அந்த கார் பாத்தியா , எவ்ளோவ் பெருஸ்ஸா இருக்குல்ல ..
அடு ரொம்ம்ம்ப பீடா போகுமாம் ..அண்ணன் சொன்னான் ..."

"அண்ட கார்ல ஒரு நாள் உன்னைய கூப்ட்டு போறேன் ..நாம பாட்டி வீட்டுக்குச் சென்னைக்குப் போலாம் என்ன? ..."

"என்னைய கூப்ப்ட்டு போவியா ?"

"ம்ம்ம்ம் ..கண்டிப்பா ..."

"அங்கலாம் நா எப்படி வர்றது ? "

ஏன் என்கூட வந்துரு ...வந்தா என்ன ?

"அதுக்கி..ல்..ல ..சரி நீ சாப்பிடு " ன்னு சமாளிச்சுருவா..

"உனக்கு அண்ணா இருக்கானா ராஜிம்மா? . அவன் படிக்கிறானா வேலை பாக்குறானா?" நா தான் மூத்த பிள்ளை ..ஒரு தங்கச்சி ,ஒரு தம்பி இருக்காங்க எனக்கு "

"உங்க அம்மா அப்பா எங்க ? ன்னு பெரிய மனுசி கணக்கா கேக்குறா ஹரிணி ..ராஜிக்காவிற்கு தொண்டை அடைத்து விட்டது ..குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்களே! ..அது இது தானா? அவளிடத்தில் எதைச் சொல்லி புரிய வைப்பது ? ..பதில் வரவில்லை அவளுக்கு ..

"சரி வா ராஜிம்மா ..நம்ம பார்பி பொம்மை வச்சு விளையாடலாம் ..."

"நீ கொஞ்ச நேரம் மிஸ் குடுத்த ஹோம் ஒர்க் எழுதுவியாம் .. நா போயி பாப்பாக்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் பண்ணிட்டு உங்கூட விளையாட வருவேனாம் ..ஓகே ..."

ஆமாமா, மத்யானத்துக்கு லஞ்ச் வேணும்ல ...ராஜிம்மா நம்ம இந்த சாட்டர்டே லீவுல டவுணுக்கு போவோமா ?
எதுக்கு டா ?

கோயில் பக்கத்துல நிறைய கடை இருக்கும் ..நம்ம டாய்ஸ் வாங்கலாம் ..டிரைவர் அங்கிள் கிட்ட சொன்னா கூப்ட்டு போவாரு ..

சரி அப்பா வரட்டும் , கேட்டுட்டு போவோம்!

சொன்ன மாதிரியே சனிக்கிழமை வந்தது ...ஹரிணி தன் அம்மா , அப்பா, அண்ணனுடன் டவுணுக்குப் போய் வந்தாள் .. கோயில் வாசல் கடைகளில் பொம்மை போட்ட கர்சீப் , காத்தாடி, குட்டி குட்டி கிச்சன் செட் , அனிமல்ஸ் பொம்மை , சார்ட் பேப்பர் , க்ரேயான்ஸ் , கலரிங் புக் , நெய்ல் பாலிஷ் , கலர் பெயிண்ட் , அப்றம் மறக்காமல் ராஜிம்மாவிற்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றும் வாங்கி வந்தாள் ..

மறுநாள் காலை , ராஜிக்கா வேலைக்கு வந்ததும் -- பாத்தா ஹரிணி குட்டி பயங்கரமா தூங்குது ..ஆமா ஞாயித்துக்கிழமை தானே! ..புள்ளைங்க தூங்கட்டும்னு அடுப்படி வேலைக்கு போய்ட்டாங்க ராஜிக்கா! ..காபி போட்டுக்கொண்டு இருக்கையில் அவள் சேலையை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்தது ...திரும்பிப் பாத்தா ஹரிணி ..

என்னடா கண்ணு சீக்ரம் முழிச்சுட்டே ?

இல்ல ராஜிம்மா டூக்கம் போச்சு ..

இன்னிக்கு லீவு தான ..கூட கொஞ்ச நேரம் தூங்குனா என்ன ?

இல்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன் !

"கண்ண மூடிக்கோ ...கை...ய நீட்டு! "

சரி ...இப்ப கண்ணத் தொற ன்னு சொல்லிக்கிட்டே ஒரு பேப்பர் ல பொட்டலம் மாதிரி கட்டுனத ராஜிக்காவின் கைகளில் வைத்திருக்கிறாள் ஹரிணி ..

ராஜிக்காவிற்கு ஒன்றும் பிடிபடவில்லை ..

அந்த பேப்பரை திறந்துப் பார்த்தால் கலர் கலராக வளையல்கள்! அது வெறும் சாதாரண ரப்பர் வளையல்கள் தான் என்றாலும் அந்த நொடிப்பொழுதில் --அது தனக்கான பெரும் அங்கீகாரமாய் தான் தெரிந்தது "ராஜி" என்கிற "ராஜேந்திரனுக்கு!" ...

(மறுபடியும் எல்லாரும் முதல் வரியை திரும்பப் படிச்சிட்டு வாங்க!)

திருநங்கைகள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் சில இடங்களில் அக்காவாகவும், அம்மாவாகவும் இன்றளவும் மதிக்கப்பட்டு உழைத்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ..இன்னும் அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் விருப்பமும் கூட ... கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு அவர்களைப் பார்க்கவில்லை ..ஒரு வேளை சிறுவர் பூங்காக்கள் திறக்கப்படுமாயின் ஹரிணியையும் ராஜிக்காவையும் பார்க்க வாய்ப்பிருக்கின்றது !

#அன்பு சூழ் உலகு
#வாழ்தல் இனிது

-விஜயா கிப்ட்சன்

( [email protected] )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about the Transgenders written by Writer Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X