For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே! கணீர் முழக்கத்துடன் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்- முழு உரை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மிக நீண்ட உரையாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்பாக தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என கணீர் முழக்கத்துடன் தமது உரையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Chief Minister MK Stalin raises Tamilnadu Vaazhaga Slogan in Assembly

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:

கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க!
களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க!
உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க!
உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே!

என்று தாய்த் தமிழ்நாட்டை வாழ்த்தி, பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன். தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறைமேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன். சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி! இருபது மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை. இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது.

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் 'திராவிட மாடல்' கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. செயல்பட்டு வருகிறது என்பதை விட - திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி! அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி. அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப் பயணமாக - ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். கடந்த 9 ஆம் தேதியன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இந்த மாமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்கவுரையை ஆற்றினார்கள். தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்கள். அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

பேரவைத் தலைவர் அவர்களே,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?
முயர்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ?
உயிருக்கு நிகர் இந்த நாடு அல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ?

என்ற திராவிட இயக்கக் கவிஞர் முத்துக்கூத்தன் அவர்களின் கவிதையை நாம் என்றும் நினைவில் கொண்டு, பெருமித நடைபோடுவோம். தமிழ்காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை மெய்ப்பித்துக் காட்டும் நாளாக, அன்றைய தினம் அமைந்திருந்ததே தவிர வேறல்ல. பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் இம்மாமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அரசின் சார்பிலான நன்றியை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக அவர்கள் பாராட்டி வருகிறார்கள். 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார். அதேபோலத்தான் நாங்கள் வேகமாகவும் - அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம். 'நான்' என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல; அமைச்சரவையை மட்டுமல்ல; நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட எனது பயணங்கள் குறித்து பின்னோக்கிப் பார்க்கும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். ஓராண்டு என்பது 365 நாட்களாக இருந்தாலும் - ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அளவுக்கு நான் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அதிலே 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கொரோனா தாக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. கால் வலி மற்றும் முதுகு வலி காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகள் அதிகம் ஆகியிருக்கும்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள் - இல்லை இல்லை நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் நான் ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. தலைவர் கலைஞர் எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அவரிடம் கற்ற பாடங்கள் என்னை இப்படி உழைக்கத் தூண்டுகிறது. என்னுடைய அறையில் 'டேஷ் போர்டு' வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருப்பதை அறிவதன் மூலமாக அரசாங்கத்தை முடுக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன். இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. பொறுப்பு கூடக்கூட ஓய்வு என்பது குறைந்துவிடும். 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை' என்றார் புரட்சியாளர் மாவோ. அப்படித்தான் பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருக்கிறது. 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன், விழாக்களில் கலந்து கொண்டேன் என்றால் அதன் மூலமாக பயனடைந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள். அதாவது ஒரு கோடிப் பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள். மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத் திட்ட விழாக்கள் நடந்துள்ளன. முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430; இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஆகும். இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428; இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஆகும். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பிலும் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக அரசு எந்தளவுக்கு வேகத்துடன் செயல்படுகிறது என்பதை அறியலாம். ஏதோ முதலமைச்சர் செயல்படுகிறார்; அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்; தலைமைச் செயலகம் செயல்படுகிறது என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. பத்து ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். தேய்ந்து கிடந்த தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.

இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு அறிவிப்புகளைச் செய்துள்ளது. அதாவது, ஆளுநர் உரை அறிவிப்புகள் - 75; என்னால் சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 67; மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள் - 88; மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு அறிவிப்புகள் - 5; செய்தி வெளியீடு அறிவிப்புகள் - 154; நிதிநிலைஅறிக்கை - 254; வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 237; மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2424; இதர அறிவிப்புகள் - 42 என இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை / அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 852 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2,040 பணிகள் நடைபெற்று வருகின்றன. 422 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துருக்கள் ஒன்றிய அரசினுடைய பரிசீலனையில் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டில் எப்படி வளர்ச்சி அடைந் என்றால், சொன்னதைச் செய்தோம் அதனால் வளர்ந்துள்ளோம். அதுதான் உண்மை. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் மிக விளக்கமாகச் சொல்லி இருக்கிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களினுடைய வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாடு அரசு அல்ல; ஒன்றிய அரசு தான் இதனைச் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்றால் அது சாதாரணமானது அல்ல. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் தத்துவத்தினுடைய ஊட்டமும், வளமும், வளர்ச்சித் திறனும்! நமது நோக்கம் ஒன்று தான், மக்கள் மனங்களின் மகிழ்ச்சி. இது ஒன்று தான் திராவிட மாடல் ஆட்சியின் முதலும் முடிவுமான ஒற்றை இலக்கு.

காலைச் சிற்றுண்டி சாப்ப்பிடும் குழந்தைகள் முகத்தில் கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகத்தில் - நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனையாகும். கடந்த பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 இலட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 இலட்சத்து 50 ஆயிரம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல; படிக்கவராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம். சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண், 'முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள். 'உங்களுடைய புகார் என்னம்மா?' என்று கேட்டதும், 'புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை, சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்' என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார். அவர் சொல்கிறார் - ''நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதுனால சிஎம்க்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு!

இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டின் காரணமாகத்தான், வாழ்த்துக்களின் காரணமாகத்தான் பெருமை அடைந்து இன்றைக்கு நாங்கள் ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம். 'சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்' - இது தலைவர் கலைஞரின் முழக்கம்! அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம்; ஏன்? சொல்லாமலும் செய்வோம் - என்பதுதான் எனது முழக்கம். மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி; விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்; சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி; 234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்; இல்லம் தேடிக் கல்வி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; புதுமைப் பெண்; இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48; தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்; சமத்துவபுரங்கள் புனரமைப்பு; உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல்; அரசு முன் மாதிரிப்பள்ளிகள்; பத்திரிக்கையாளர் நலவாரியம்; எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்; இலக்கிய மாமணி விருது; கலைஞர் எழுதுகோல் விருது; பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்; பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்; முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு; பெரியார் - சமூகநீதி நாள் உறுதிமொழி; அம்பேத்கர் - சமத்துவநாள் உறுதிமொழி; வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்; அன்னைத் தமிழில் அர்ச்சனை; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்; மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள்; கோவில் நிலங்கள் மீட்பு; 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்; புதிய ஐடிஐ நிறுவனங்கள்; காவல் ஆணையம்; கல்லூரிக் கனவு; வேலைவாய்ப்பு முகாம்கள்; தமிழ்ப் பரப்புரைக் கழகம்; தமிழ்நாடு பசுமை இயக்கம்; சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள்; பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் சிற்பி திட்டம்; போதைப் பொருள் ஒழிப்பு; ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம்; நீட் தேர்வு விலக்குச் சட்டம்; ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்; வழக்கறிஞர் சேமநல நிதி 10 லட்சமாக உயர்வு; நீதிமன்றங்கள் அமைக்க நிலம் ஒதுக்கீடு என்று ஏராளமான திட்டங்களை, சட்டங்களை கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஒரு சில திட்டங்களைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். மொத்த திட்டங்களையும் சொல்வதாக இருந்தால் இன்று முழுவதும் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய திட்டங்களின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் உயர்ந்திருப்பதை கண்ணுக்கு முன்னால் காண முடிகிறது.

கடந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவினுடைய சிறந்த முதலமைச்சர் என்று எனக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஓராண்டு முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்னதாக அதே 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற தகுதியைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு பல்வேறு பிரிவுகளில் முன்னேறி சாதனை பெற்றிருக்கிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிகிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 20 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்காd வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 13 ஆயிரத்து 726 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது. 15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க இங்கே வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர்களை - நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.
அண்மையில் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்டிருக்கக்கூடிய தரவரிசைப்பட்டியலிலும் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக "லீடர்" என்கிற அங்கீகாரத்தினை பெற்றுள்ளது தமிழ்நாடு. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான துணிகர முதலீடுகளை திரட்டுவதில் தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் முகமாகவும் முகவரியாகவும் இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு உரை:

English summary
Tamilnadu Chief Minister MK Stalin has raised Tamilnadu Vaazhaga Slogan in the state Assembly today. Here is the CM MK Stalin's full speech in the Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X