• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் 21: கதவைத் திறந்தேன், புயல் அடித்தது!

By Shankar
|

- ராஜேஷ்குமார்

நான் க்ரைம் நாவல்களை எழுதினாலும் எனக்குள்ளே இருக்கும் ஆன்மிக உணர்வுகளின் சதவீதம் சற்று அதிகம்தான். இது என்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வாரத்தில் ஒவ்வொரு நாளும் கோவையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் முறை வைத்துக் கொண்டு வழிபட்ட நாட்களும் உண்டு. அமாவாசை, பௌர்னமி நாட்களில் இன்னமும் விசேஷமாய் மணிக்கணக்கில் பூஜைகளில் கலந்து கொள்வது உண்டு.

ஒரு கட்டத்தில் எழுத்துப் பணியில் கூடுதல் சுமை காரணமாய் கோயில்களின் எண்ணிக்கையையும் போகும் நாட்களையும் வெகுவாய் குறைத்துக் கொண்டேன். இறைசக்தி என்பது கோயில்களில் மட்டுமில்லை. ஒரு சில நல்ல மனிதர்களின் உள்ளங்களிலும் இருக்கிறது என்கிற உண்மையும் அப்போது பிடிபட்டது.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்த அன்னை போன்ற மகான்களின் பொன்மொழிகளையெல்லாம் படிக்க நேர்ந்த போது அவர்கள் எல்லோரும் ஒரே ஒரு உண்மையா திரும்பத் திரும்ப சொல்லியிருப்பதைக் கண்டுபிடித்தேன்.

Naan Mugam Paartha Kannadigal 22

அதாவது யார் ஒருவர் எவர் மனதையும் புண்படுத்தாமல் தானும் சந்தோஷமாய் இருந்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி அந்த சந்தோஷத்தைைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ இறைவன் அவர்களை நெருங்கி வருவான். இப்படிப்பட்ட நபர்கள் ஒரு காலகட்டத்தில் மக்களால் தெய்வத்தின் அம்சமாகவேப் பார்க்கப்படுவார்கள். அப்படிப்பட்ட நபர்களை மக்கள் மகான் என்ற பெயரில் அழைப்பார்கள். அவர்களின் ஆசிகள் யார்க்குக் கிடைக்கிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்.

மேற்கண்ட கருத்து என் மனதுக்குள் ஆழமாய்ப் பதிந்துவிட்டதின் காரணமாய் நான் ஆன்மிகத்தில் பெயர் பெற்று மக்களின் மத்தியில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த பெரியார்களைப் பார்த்துப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அது எந்த அளவுக்குப் பெரிய தவறு என்பதை காலம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

தூரத்திலிருந்து பார்க்கும்போது குறிஞ்சிப் பூக்களாய்த் தெரிந்த அவர்கள் பக்கத்தில் போன பின்புதான் எனக்கு நெருஞ்சி முட்களாய்க் காட்சியளித்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு காலை பத்து மணியளவில் விலையுயர்ந்த கார் ஒன்று, என் வீட்டு முன்பாய் வந்து நிற்க, காவி அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர் காரினின்றும் இறங்கி உள்ளே வந்தார்.

வெளியே புறப்பட்டுப் போகத் தயாராக இருந்த நான் அவரைப் பார்த்ததும் அப்படியே நின்றேன். அவர் என்னைக் கனிவோடு பார்த்தபடி மெல்லிய குரலில் கேட்டார்.

"எழுத்தாளர் ராஜேஷ்குமார்தானே?"

"ஆமா..."

"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்"

"நீங்க...?"

நான் இப்படிக் கேட்டதும் அன்றைய காலகட்டத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த ஓர் இளவயது சாமியாரின் பெயரைச் சொல்லி, "நான் அவருடைய சீடன். கோவைில் அவருடைய ஆன்மிக அமைப்புக்கு நான்தான் தலைவர்," என்றும் சொன்னார்.

என்னால் வியப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்த பெரிய பெரிய விஐபிக்கள் எல்லாம் அவரைச் சந்தித்து ஆசி பெற காத்திருந்த காலம் அது. ஆனால் அவருடைய சீடர் ஒருவர் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தது எனக்கு அதிர்ச்சி கலந்து மகிழ்ச்சியைக் கொடுப்பதாய் இருந்தது.

வரவேற்று உள்ளே கூட்டிப் போய் இருக்கையைக் காட்டி அவர் உட்கார்ந்ததும் கேட்டேன்.

"என்ன விஷயமாய் வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"

"தாராளமாய்..." என்று சொன்னவர், புன்னகை தவழும் முகத்தோடு சொன்னார்.

"சுவாமிகள் அடுத்த வாரம் கோவை வர்றார். கொடீசியா வளாகத்துல மாபெரும் 'தியான அரங்கம்' ஒண்ணை நடத்தப் போறார். அது சமயம் அவர் கோவையில் இருக்கிற 100 விஐபிக்களை தனித்தனியே சந்தித்து ஆசி வழங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் தேர்வு செய்து கொடுத்த விஐபிக்களில் நீங்களும் ஒருவர்.

நான் சிலிர்த்துப் போனேன்.

"நீங்க சொல்றது நிஜமா?"

அவர் சிரித்தார்.

"இதுல பொய் சொல்ல என்ன இருக்கு...? விஐபி யார்னு பணத்தை வெச்சு சுவாமிகள் முடிவு பண்ணுவது கிடையாது. ஒரு துறையில் யார்க்கு பேரும் புகழும் இருக்கோ அவங்களைத்தான் செலக்ட் பண்ணுவார். நீங்க எழுதின கதைகளைக் கூட சுவாமிகள் படிச்சிருக்கார். அதனால்தான் உங்களைப் பார்த்துப் பேசணும்னு சொன்னார். இந்தாங்க விஐபி பாஸ். வர்ற ஞாயிற்றுக் கிழமை காலை பதினோறு மணிக்கு 'தியான அரங்கம்' ஆரம்பம். அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க சுவாமிகளைப் பார்த்துடணும். அதாவது காலை 10 மணிக்கெல்லாம் நீங்க கொடீசியா வளாகத்துல இருக்கணும்."

"இருப்பேன்... இப்படியொரு வாய்ப்பு கிடைக்க எனக்குக் கொடுத்து வெச்சிருக்கணுமே...!"

சுவாமிகளின் சீடர் மேலும் ஒரு மணி நேரம் என் வீட்டில் அமர்ந்து சுவாமிகளின் அருமை பெருமைகளையெல்லாம் நெஞ்சுருக பேசிவிட்டுப் போனார்.

**********

அடுத்த வார ஞாயிற்றுக் கிழமை.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் குளித்து ரெடியாகி என் வீட்டிலிருந்து 20 கிமீ தள்ளியிருக்கும் கொடீசியா வளாகத்துக்குக் காரில் புறப்பட்டேன். காரை நான்தான் ஓட்டினேன்.

நான் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் எனக்கு போன். சுவாமிகளின் சீடர்தான் பேசினார்.

"என்ன சுவாமிகளைப் பார்க்க ரெடியாகிட்டீங்களா?"

"புறப்பட்டாச்சு...! பத்து மணிக்கெல்லாம் அங்கே இருப்பேன்!"

"ரொம்ப நல்லது.... வாங்க. உங்களுக்காக நான் அரங்க வாசலிலேயே வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்."

கோவையில் அந்தக் காலை நேரத்திலேயே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததால் காரை மெதுவாய்த்தான் ஓட்ட முடிந்து. பீளமேடு எல்லையைத் தொடும்போது சரியாய் பத்து மணி.

அதற்குள் இரண்டு தடவை போன் வந்துவிட்டது.

"என்னாச்சு... ஏன் லேட்டு?"

"இங்கே ஹெவி ட்ராஃபிக்.. பத்து நிமிஷத்துல வந்துடுவேன்...!"

"காரை நிறுத்திட்டு லெஃப்ட் சைடில் இருக்கிற வராந்தா பக்கம் வாங்க... நான் அங்கே இருப்பேன்!"

நான் கொடீசியா வளாகம் போய்ச் சேர்ந்தபோது சரியாய் பத்தேகால் மணி.

மைதானம் போன்ற அவ்வளவு பெரிய கார் பார்க்கிங்கில் நூற்றுக்கணக்கான கார்கள் தெரிய, இன்னொரு பக்கத்தில் ஆயிரக்கணக்கான டூ வீலர்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பார்வைக்கு சிக்கியது. விஐபி பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நான் இடதுபக்கம் தெரிந்த வராந்தாவுக்குப் போனேன்.

சுவாமிகளின் சீடர் பதட்டத்தோடு காணப்பட்டார்.

"சீக்கிரம் வாங்கோ.. சுவாமிகள் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கார்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

'சுவாமிகள் எனக்காக காத்துக்கிட்டிருக்காரா?'

சீடரோடு நடந்தேன். ஜன்னல் வழியே அரங்கம் தெரிய மக்கள் நிரம்பி வழிந்தார்கள். முன் வரிசையில் கோவையின் பிரபல தொழில் அதிபர்கள், புகழ் பெற்ற டாக்டர்கள், சமூக சேவை செய்து பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற ஆண் பெண் பிரபலங்கள் என்று என் பார்வைக்குத் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தார்கள்.

இவ்வளவு பேர்க்கும் கிடைக்காத ஒரு பேறு எனக்குக் கிடைக்கப் போவதை நினைத்து பெருமிதப்பட்டுக் கொண்டே அந்த சீடரோடு நடந்தேன்.

வழியில் யாருமில்லை.

முதல் மாடி ஏறினோம். ஏறும்போதே பூக்களின் வாசனை கூடவே சாம்பிராணி மணத்தது. வராந்தாவில் முதல் அறை. கதவுக்கு முன்பாய் நின்றிருந்த இரண்டு சீடர்கள் வழிவிட்டு நிற்க உள்ளே போனோம்.

அறை பிரகாசமான மின் விளக்குகளின் காரணமாய் அதிக வெளிச்சத்தோடு தெரிந்தது. அறையின் நடுவே உயர்த்திப் போடப்பட்ட மேடையில் நடுநாயகமாய் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார் சுவாமிகள்.

முப்பது வயதைத் தாண்டாத உடம்பு. பிடரி வழிய வழிய அடர்த்தியான தலைமுடி. வசீகர சிரிப்போடு கூடிய முகம்.

"வாங்க.. ராஜேஷ்குமார்...!" மேடையினின்றும் இறங்கி வந்த சுவாமிகளை நான் வணங்கி நின்றேன். அவர் என்னைத் தழுவிக் கொண்டு "ஆனந்தமாய் இருங்கள்!" என்று வாழ்த்தினார். ருத்ராட்ச மாலையொன்றை என் கழுத்தில் அணிவித்து, தான் எழுதிய நூல்களை எனக்குப் பரிசாய்க் கொடுத்தார். பிறகு தனக்குப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, நிறைய நாள் பழகிய ஒரு நபர் போல பேச ஆரம்பித்தார்.

"ஆயிரத்துக்கும் மேல நாவல்கள் எழுதியிருப்பதாய் கேள்விப்பட்டேன். ஒரு டிவி பேட்டியிலயும் கூட சொல்லியிருக்கீங்க. இது எப்படிச் சாத்தியம்?"

"கடவுளின் கருணைதான் காரணம்!", என்றேன்.

"உங்க நாவல்களை எல்லோரும் விரும்பிப் படிக்கக் காரணம் உங்க எழுத்து நடைதான். நான் சில நாவல்களைப் படிச்சுப் பார்த்ததில அந்த உண்மை எனக்குப் பிடிபட்டது!"

"உங்க பாராட்டுக்கு நன்றி!"

"நன்றி மட்டும் போதாது. நான் உங்ககிட்டேயிருந்து ஒரு உதவியை எதிர்ப்பார்க்கிறேன். செய்வீங்களா?"

"என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்...!"

"உங்களால கண்டிப்பா முடியும். நான் இப்போ ரெண்டு புக் இங்கிலீஷ்ல எழுதியிருக்கேன். நீங்க அதை தமிழ்ப்படுத்தி உங்க எழுத்து நடையில எழுதித் தர முடியுமா?"

"மன்னிக்கணும் எனக்கு அதுக்கு நேரம் இல்லை. பத்திரிகைகளுக்கு எழுதவே நேரம் சரியாய் இருக்கு. அதுவுமில்லாம உங்களுடையது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். எனக்கு அது சரியாய் வருமான்னு தெரியலை?"

"கண்டிப்பாய் சரியாய் வரும்... அடுத்த வாரம் என்னோட சிஷ்யர் ஒருவர் நான் எழுதின புத்தகங்களோடு உங்களை வந்து சந்திப்பார். நீங்க எந்த மறுப்பும் சொல்லாம இதை ஒரு இறைபணியாய் நினைச்சி செஞ்சுத் தரணும்..."

என்னால் மறுத்துப் பேச இயலவில்லை. தலையை ஆட்டிவிட்டு அவர் கொடுத்த ஆப்பிளோடு அறையினின்றும் வெளிப்பட்டேன்.

************

அடுத்த வாரம் அந்த சீடர்க்காக நான் வீட்டில் காத்துக் கொண்டிருந்தேன்.

அவர் வரவில்லை.

அவர் வராதது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

அந்தக் கேள்விக்கான பதில் அன்று மாலை நான் சன் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்தது!

- தொடரும்...

English summary
21st episode of Writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X