• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீர்கெடும் சட்டம் ஒழுங்கு... ப.சிதம்பரம் களமிறங்க வேண்டிய நேரம் இது!

By A K Khan
Google Oneindia Tamil News
P Chidambaram
-ஏ.கே.கான்

டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

முதலில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து புதன்கிழமை இரவு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது குடல் பகுதிகள் மிகவும் சேதமடைந்துவிட்டதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இதை வைத்து அரசியல் செய்யும் வேலைகளை பல கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. ஆனால், இது அரசியலுக்கான நேரமல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த நாட்டில் பெண்களை எந்த அச்சமும் இல்லாமல் பாலியல் கொடுமை செய்வதும், அது தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகள் எளிதாக தப்பிவிடுவதும் மிகச் சாதாரணாக நடந்து கொண்டுள்ளது.

இதற்கு மிக முக்கியக் காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், காவல்துறையினரின் அலட்சியமும், வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர்கள் காட்டும் மெத்தனமும் தான். பாலியல் பலாத்காரங்கள் காலம் காலமாக நடந்தாலும் டெல்லி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் நாட்டின் இதயத்தை ஒட்டுமொத்தமாக பதம் பார்த்துள்ளது. மக்கள் கலங்கிப் போயுள்ளனர். பலாத்காரத்துக்கு எதிராக சமூகத்தில் கடும் கோபமும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது.

இந்த கொடுமையான சம்பவத்தின் பின்னணியில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த தேசத்தின் கோபத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பாலியல் கொடுமைகளுக்கு மிக அதிகபட்ச தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டியது ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளின் கடமை. ஏதோ மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் தான் கற்பழிப்புகள் நடந்துள்ளது போல பாஜக டிராமா போட்டு இதிலும் அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்வதால் பலனில்லை.

ஆளும் கட்சியை நெருக்கி மிகக் கடுமையான தண்டனையைக் கொண்டு வர வேண்டிய கடமை பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் உண்டு. அதே போல எல்லா பிரச்சனைகளைப் போல இதையும் கிடப்பில் போட்டுவிட்டு, அப்பாடா மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நிம்மதி தேடும் படலதத்தை சோனியா காந்தி உடனடியாக நிறுத்திவிட்டு, தானே முன் வந்து மிகக் கடுமையான சட்டத் திருத்தத்துக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியதும் மிக அவசியம்.

இந்த விஷயத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்களைப் பற்றி யாரும் கவலைப்படவும் கூடாது. உலகிலேயே மிகப் பெரிய மனித உரிமை மீறல் பாலியல் கொடுமை தான். இதனால் இதில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை என்பது மிக மிகப் பொறுத்தமானதே.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, எரிச்சல் தான் மிஞ்சுகிறது. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாவதற்காக அவர் வகித்த நிதித்துறையை கவனிக்க அனுப்பப்பட்டுவிட்டார் ப.சிதம்பரம்.

சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தவரை நாட்டில் பாதுகாப்பு விவகாரங்கள் கொஞ்சம் ஒழுங்காகவே இருந்தன. தீவிரவாதிகள், நக்ஸல்கள், கிரிமினல்களின் செயல்பாடுகளை உளவுத் துறையின் மூலம் சிறப்பாக கண்காணித்து, மாநில அரசுகளை முன் கூட்டியே எச்சரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, சட்டம் ஒழுங்கை சிறப்பாகவே நிலைநாட்டினார்.

மேலும் பாபா ராம்தேவ் அண்ட் கோ டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தபோது அவர் நடத்திய 'மிட்நைட் ஆபரேசனை' யாரும் மறக்க முடியாது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தாலும், சில நேரங்களில் தேச அமைதிக்காக இரும்புக் கரம் கொண்டு செயல்படுவதே ஒரு அரசுக்கு அழகு, அவசியமும் கூட என்பது நிரூபணமானது.

சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளிலும் கற்பழிப்புகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுள்ளன. ஒரே நாளில் 7 கற்பழிப்பு செய்திகளை வெளியிடும் சூழல் கூட ஊடகங்களுக்கு வருகிறது. உங்கள் இணையத்தளத்திலும், பத்திரிக்கையில் மிக அதிகமான கற்பழிப்பு செய்திகளாக வருகிறதே என்று வாசகர்கள் கேள்விகள் கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இத்தனைக்கும் அனைத்து பாலியல் பலாத்காரங்களும் போலீசில் பதிவாவது இல்லை. புகார் சொல்லப் போனால் அதை போலீசார் பதிவு செய்வதும் இல்லை. இதையும் தாண்டி ஏராளமான கற்பழிப்பு செய்திகள் வருகின்றன.

இப்படி, ஒரு அசாதாரணமான நிலைமை உருவாகும்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சுஷில்குமார் ஷிண்டே என்ன செய்திருக்க வேண்டும்?. அனைத்து மாநில காவல்துறையினருடனோடு ஒரு கூட்டம் போட்டிருக்க வேண்டாமா?. பாலியல் கொடுமைகளில் மிகக் கேவலமான நிலையில் உள்ள மாநில அரசுகளை அழைத்து எச்சரித்திருக்க வேண்டாமா?.

டெல்லி சம்பவம் தேசிய அளவில் பரபரப்பானபோது ஷிண்டேவிடம் இருந்து பெரும் அமைதி தான் பதிலாக வந்தது. இவர் பேப்பர் படிப்பாரா, டிவி பார்ப்பாரா என்பதே தெரியவில்லை. அவரது அதிகாரிகளும் கூட நன்றாக தூங்குவார்கள் போலிருக்கிறது.

இந்த நிலையில் தான் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக நீடித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. அதிகாரிகளை கிண்டி எடுப்பதோடு, நாட்டு சமாச்சாரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மிகச் சில அமைச்சர்களில் ஒருவர் சிதம்பரம்.

சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தால் குண்டுவெடிப்பே நடக்காது, கற்பழிப்பே நடக்காது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவர் உடனடியாக ஆக்ஷனின் குதிக்கும் நபர். ஷிண்டே மாதிரி அல்லாமல் நிலைமை கட்டுமீறிப் போகும் முன்பே அதை சமாளிக்க முயல்பவர்.

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பாலியல் விவகாரங்களில் சட்ட விதிகளைக் கடுமையாக்கும் முயற்சிகளை சிதம்பரமே முன் நின்று மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். காரணம், அவர் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக இருக்கப் போகிறார் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது.

நரேந்திர மோடியை எதிர்கொள்ள சிதம்பரத்தை களம் இறக்க சோனியா திட்டமிட்டுள்ளார். இந் நிலையில், தனது துறை சார்ந்த விவகாரம் இல்லாவிட்டாலும் ஷிண்டே மாதிரியான ஆட்கள் செய்ய முடியாததை சிதம்பரம் தானே முன் நின்று செய்ய வேண்டும்.

செய்வீர்களா சிதம்பரம்?

English summary
As a home minister P.Chidambaram reviewed security situation twice a day with officials and ensured there were no big security incidents during his tenure. As the horrific gang-rape triggered angry demonstrations across India against growing sexual crimes against women. It is the duty of the Centre, particularly P.Chidambaram, who is most likely the PM candidate for 2014, to take urgent steps to crack down on crime against women and fast-track the prosecution of the accused
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X