4,500 கன அடி நீர் போதாது: தமிழகம்
டெல்லி:
தமிழகத்தில் கருகிக் கொண்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற 4,500 கன அடி நீர் போதாது என தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் மிகத்தாமதமாக உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
காவிரி ஆணையக் கூட்டம் நடக்கும் வரை (10ம் தேதி வரை) தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 4,500 கன அடிநீரை விட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் ஜெயலலிதாவிடம் கருத்து கேட்டபோது அவர்கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் திறந்துவிட உத்தரவிட்டுள்ள 4,500 கன அடி நீரைக் கொண்டு கருகிக் கொண்டிருக்கும் சம்பாபயிர்களைக் காப்பாற்ற முடியாது. மேலும், இந்தத் தீர்ப்பும் மிகத் தாமதமாக வந்துள்ளது.
இதனால் தமிழக விவசாயிகளுக்கோ, சம்பா பயிர்களுக்கோ எந்தவிதமான பலனும் ஏற்படப் போவதில்லை.எங்களுக்கு வேறு வழியே இல்லை. பெரும் இழப்பை சந்தித்துவிட்டு நிறறகிறோம் என்றார் ஜெயலலிதா.
தமிழகம் மொத்தம் 10 டி.எம்.சி. நீர் கோருகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 10ம் தேதி வரைகர்நாடகம் தினமும் 4,500 கன அடி நீர் கொடுத்தாலும் 0.4 டி.எம்.சி தான் கிடைக்கும்.
தீர்ப்பை மதிப்போம்- கிருஷ்ணா:
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்கப் போவதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகூறியுள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடக அரசு நிச்சயம் கட்டுப்பட்டுநடந்து கொள்ளும் என்றார்.


