நாகப்பா உடலுக்கு காவல் இருந்த வீரப்பனின் கூட்டாளி கைது
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கொல்லப்பட்ட பின்னர் அவருடைய உடலுக்குக் காவல் இருந்ததாகக்கருதப்படும் வீரப்பனின் கூட்டாளி ஒருவனை கர்நாடக அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா அதன் பின்னர் டிசம்பர் 8ம் தேதி கர்நாடகமாநிலம் செங்கடி வனப் பகுதியில் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார்.
நாகப்பா எப்படிக் கொல்லப்பட்டார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கும் நிலையில் வீரப்பனைத் தேடும் பணியைஅதிரடிப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாகப்பா கடத்தலில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும்இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகப்பா கடத்தலில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலர் கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திற்குத்தப்பிச் சென்றுள்ளதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த கர்நாடகப் போலீசார் அங்குள்ள ஒரு காபி தோட்டத்திற்குச் சென்று விசாரித்தனர்.அப்போது கடந்த 6ம் தேதி வேலை கேட்டு புதிதாக அங்கு ஒருவன் வந்ததாக அங்குள்ளவர்கள்தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மகாதேவ் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைப் பகுதியைச் சேர்ந்தலம்பானி என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவன் இவன்.
மகாதேவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகப்பா இறந்த பின்னர் அவருடைய உடலைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மகாதேவிடம்தான் வீரப்பன்ஒப்படைத்திருந்தான்.
செங்கடி காட்டுப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் நாகப்பாவின் உடலை அவை எடுத்துச்சென்று விடாமல் இருப்பதற்காக மகாதேவ் சுமார் இரண்டு நாட்கள் வரை அதற்குக் காவல் இருந்துள்ளான்.
உடலைப் போலீசார் மீ"ட்டவுடன் அங்கிருந்து அவன் எப்படியோ தப்பி ஓடிவிட்டான். நாகப்பா கடத்தலுக்குஉதவியவர்களைப் போலீசார் வேட்டையாடி வருவதை அறிந்து பயந்துபோன மகாதேவ் அதுபற்றி வீரப்பனிடம்கூறியுள்ளான்.
உடனே வீரப்பன், "நீ உடனே தெற்கு குடகுப் பகுதிக்குப் போய் விடு. அங்கு இப்போது காபி பழம் பறிக்கும் சீசன்.அங்கு யாரிடமாவது வேலையில் சேர்ந்து கொள்" என்று யோசனை கூறியுள்ளான்.
அதன் பிறகே காபி தோட்டத்துக்குத் தன் மனைவியுடன் வந்துள்ளான் மகாதேவ். இந்நிலையில்தான் போலீசார்அவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவன் கைது செய்யப்பட்டது தெரிந்தவுடன் அவனுடைய மனைவிதப்பி ஓடிவிட்டாள்.
நாகப்பா இறந்தது எப்படி என்பது மகாதேவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதையடுத்து அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும் குடகு அருகே உள்ள வனப் பகுதியில் வீரப்பன் ஒளிந்திருக்கலாம் என்றும் அதிரடிப்படை போலீசார்கருதுகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர வேட்டையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து கேரளாபகுதிக்குள் செல்வதும் எளிது என்பதால் அம்மாநிலப் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-->


