For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயிற்சியாளர் வேலை எளிதல்ல: ராபின் சிங்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின் சிங், இந்தப் பணி எளிதானதல்ல என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிதாக இரண்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பந்து வீச்சுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேச பிரசாத்தும், பீல்டிங்குக்கு ராபின் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் இந்திய அணியின் முக்கியப் பங்காளிகளாக ஒரு கட்டத்தில விளங்கியவர்கள். அதிலும், ராபின் சிங் நீண்ட காலம் இந்தியத் தேர்வுக் குழுக்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டவர்.

பின்னர் அசாருதீன் காலத்தில்தான் ராபின் சிங்குக்கு விடிவு காலம் பிறந்தது. மிகச் சிறந்த ஆல் ரவுண்டரான ராபின், அதிரடியாக பேட் செய்யக் கூடியவர். குறிப்பாக கடைசி பத்து ஓவர்களில் இவரைக் களம் இறக்கினால் ரன்களை வாரிக் குவித்து விடுவார்.

பந்து வீச்சு, பேட்டிங் தவிர, பீல்டிங்கிலும் மிகச் சிறந்து விளங்கியவர் ராபின். அவரைத் தாண்டி ஒரு பந்தும் போக முடியாது என்று கூறும் அளவுக்கு அற்புதமான பீல்டர். அதேபோல ரன்களை எடுப்பதிலும் மின்னல் வேகத்தில் ஓடக் கூடியவர்.

இந்திய அணிக்காக ஆடிய குறுகிய காலத்தில் ஒருமுறை கூட காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிய நிலை ராபினுக்கு ஏற்பட்டதில்லை. இதிலிருந்தே தனது உடலையும், ஆட்டத்தையும் எந்த அளவுக்கு ராபின் மதித்தார், ஃபிட் ஆக இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பீல்டிங் பயிற்சியாளர் பதவி குறித்து ராபின் சிங் கூறுகையில்,

இது எளிதான பணி அல்ல. சவாலான ஒரு வேலை. இப்போதைக்கு எந்தக் கருத்தையும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். முதலில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பீல்டிங் என்பது ஒரு அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. அதற்கு அதிக கவனம் கொடுக்க வேண்டியது அவசியம்.

நமது வீர்ரகளிடம் உள்ள குறைபாடுகளை முதலில் புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவுள்ளேன் என்றார் ராபின்.

மேற்கு இந்தியத் தீவுகளில் பிறந்தவரான ராபின் சிங் அந்த அணிக்கு எதிராக 1989ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார்.

இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இதற்கு முன்பு இருந்தார் ராபின் சிங். அப்போது அவரால் கண்டெடுக்கப்பட்டவர்கள்தான் திணேஷ் கார்த்திக் மற்றும் ராபின் உத்தப்பா. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை சிறப்பாக கொண்டு செல்லக் கூடிய தகுதி படைத்தவர்கள் என்று கிரேக் சேப்பலும் பலமுறை கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

ராபின் சிங் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 1999ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆடியுள்ளார். 136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2336 ரன்கள் எடுத்துள்ள ராபின், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 33 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

2001ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி விசாகப்பட்டனத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிதான் ராபின் சிங்கின் கடைசிப் போட்டி.

ரஞ்சிக் கோப்பை போட்டியில் மிகச் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் ராபின். 137 போட்டிகளில் விளையாடி 6997 ரன்களை எடுத்துள்ளார். 22 செஞ்சுரிகள், 33 அரை சதங்களை எடுத்துள்ளார். 109 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

தற்போது ராபின் சிங் சென்னை, எம்.ஏ.சி. ஸ்பின் பவுண்டேஷனின் இயக்குநராக உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X