For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயவர்த்தனே, முரளீதரன் அபாரம்:இறுதிப் போட்டியில் இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

கிங்ஸ்டன்:கேப்டன் ஜெயவர்த்தனேவின் அபார சதம் (115), சுழற்பந்து சூறாவளி முத்தையா முரளீதரனின் அபாரப் பந்து வீச்சால் (4-31) நியூசிலாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறியது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கையும், நியூசிலாந்தும் மோதின.

Upul Taranga with Mahela Jayawar

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இரு நாட்டு ரசிகர்களும் பெரும் திரளாக மைதானத்தில் கூடியிருந்தனர். இந்திய ரசிகர்களும் கணிசமாக கூடி இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Mahela Jayawar

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே முதலில் பேட்டிங்கைத் தொடங்கினார். உபுல் தரங்காவும், ஜெயசூர்யாவும் பேட்டிங்கைத் தொடங்கினர். தரங்கா அடித்து ஆட ஆரம்பித்தார். ஜெயசூர்யா நிதான ஆட்டத்தைக் காட்டினார்.

ஆட்டம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஜெயசூர்யா பிராங்க்ளின் பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி நெருக்கடிக்கு ஆளானது.

தரங்காவும், விக்கெட் கீப்பர் குமார சங்கக்காராவும் சேர்ந்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். தரங்கா தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். சங்கக்காரா 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Muttiah Muralitharan.jpg

இதையடுத்து ரன் சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட தரங்கா, ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விதத்தில் ரன் குவிக்க ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி வந்த தரங்கா 74 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் ஜெயவர்த்தனே நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்த ஜெயவர்த்தனே பிறகு அதிரடிக்கு மாறினார். பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் குறி வைக்காமல் 1 ரன், 2 ரன், 3 ரன் என உதிரிகளாக சேர்த்து ரன் ரேட்டை எகிற வைத்தனர் இலங்கை வீரர்கள்.

சிறப்பாக ஆடி வந்த ஜெயவர்த்தனே கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 115 ரன்களைக் குவித்து அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். இது ஜெயவர்த்தனேவுக்கு 9வது சதமாகும். இறுதியில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 289 ரன்களைக் குவித்தது இலங்கை.

290 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து பேட் செய்ய வந்தது. ஆனால் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்ப விக்கெட்டுக்கள் மடமடவென்று சரிந்தன

பீட்டல் புல்டனைத் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடத் தவறியதால் நியூசிலாந்து நிலை தடுமாறிப் போனது. ஜெயவர்த்தனேவைப் போல அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லத் தவறி விட்டார் நியூசிலாந்து கேப்டன் பிளமிங்.

லசித் மலிங்காவும், சமிந்தா வாஸும், நியூசிலாந்தின் டாப் ஆர்டர் வீரர்களை தகர்த்து எறிந்தனர். பிளமிங் விக்கெட்டை மலிங்கா பறித்தார். பிறகு வாஸ், ராஸ் டெய்லர் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேன் புல்டன் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தப் போராடினர். இருவரும் இணைந்து 73 ரன்களை சேர்த்தனர்.

ஸ்டைரிஸ் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக ஆடினார். சிறப்பாக ஆடி வந்த அவர் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

முரளீதரன் பந்து வீச வந்த பின்னர் நியூசிலாந்தின் நிலை நாறிப் போனது. வந்த வேகத்தில் ஜேக்கப் ஓரம், பிரண்டன் மெக்கல்லம், டேணியல் வெட்டோரி ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் முரளி. இதனால் நியூசிலாந்தின் நிலை மோசமானது.

முதலில் வேகப் பந்து வீச்சிலும், பின்னர் முரளீதரனின் சுழற் பந்து வீச்சிலும் சுருண்டு போன நியூசிலாந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், 41.4 ஓவர்களில் 208 ரன்களை மட்டுமே எடுத்து இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

பொறுப்பாக ஆடி, அபார சதம் அடித்து, அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரை இறுதி வரை வந்து பரிதாபமாக தோற்பது நியூசிலாந்துக்கு புதிதல்ல. இதுவரை (நேற்றைய போட்டியையும் சேர்த்து) மொத்தம் ஐந்து முறை அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து ஐந்து முறையும் அது பரிதாபமாகத் தோல்வியுற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 2 வது முறையாக இறுதிப் போட்டிக்கு உறுதியுடன் முன்னேறியுள்ளது இலங்கை. கடந்த 1996ம் ஆண்டு லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்துத் துவைத்து இலங்கை கோப்பையை வென்றது. அதன் பின்னர் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் இலங்கையின் கோப்பைக் கனவு பிரகாசமாகியுள்ளது.

இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதை இலங்கை முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X