For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: வங்கதேசதீவிரவாத அமைப்பு காரணம்?!

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

பழைய ஹைதராபாத் பகுதியில் புகழ் பெற்ற சார்மினார் அருகே 400 ஆண்டு பழமை வாய்ந்த மெக்கா மசூதி உள்ளது. மன்னர் ஒளரங்கசீப் கட்டிய மசூதி இது. வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கானோர் இங்கு கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில் அங்கு பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதையடுத்து அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

வெடிகுண்டுச் சம்பவத்தால் தொழுகைக்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்து கலவரத்தில் குதித்தனர். பாதுகாப்பையும், கண்காணிப்பையும் சரியாக மேற்கொள்ளாத போலீஸார் மீது அவர்களது ஆத்திரம் திரும்பியது. போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதையடுத்து போலீஸார் கலவரத்தை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு நடந்த மெக்கா மசூதியைப் பூட்டி சீல் வைத்த போலீஸார் அங்கு வேறு குண்டுகள் இருக்கிறதா என தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது வெடிக்காத நிலையில் இருந்த இரண்டு குண்டுகள் சிக்கின. அவற்றை கண்டுபிடித்த போலீஸார் உடனடியாக அவற்றை செயலிழக்கச் செய்தனர். அவை வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்.

செல்போன் வடிவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் அவை. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இவற்றை வெடிக்கச் செய்யலாம். இந்த குண்டுக்கள் ஆர்.டி.எக்ஸ், டிஎன்டி ஆகிய வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த செல்போன் குண்டின் எண்ணை டயல் செய்தால் போதும் அது வெடித்து விடும். நேற்றைய சம்பவத்தில் ஒரு செல்போன் குண்டுதான் வெடித்துள்ளது. மற்ற இரண்டும் வெடிக்கவில்லை. இதனால் பெருமளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேர் ஹைதரபாத் நகருக்குள் ஆறு மாதங்களுக்கு முன்பே ஊடுறுவி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் ஊடுறுவலை முன்பே கண்டுபிடித்து விட்ட உளவுப் படையினர் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் திணறி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த ஆறு பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்திராதவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களில் ஒருவர் செல்போன் குண்டைத் தயாரித்து இன்னொருவரிடம் கொடுத்துள்ளார். அவர் அதை 3வது நபரிடம் கொடுத்து பதுங்கியுள்ளார்.

4வது நபர் செல்போன் குண்டுகளை மெக்கா மசூதியில் வைத்துள்ளார். 5 மற்றும் 6வது நபர்கள் அதை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்துள்ளனர்.

கடந்த 1992ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஷெளகத் ஓஸ்மான் என்கிற ஷேக் பாரி என்பவர் உள்ளார். அல் கொய்தாவுடனும் இந்த அமைப்புக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

ஷாகித் பிலால் என்கிற தீவிரவாதியின் உதவியுடன் வங்கதேச தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பை நடத்தியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஷாககீத் பிலால், ஹைதராபாத்தைச் சேந்தவன்.

ஜெய்ஷ் இ முகம்மது, வங்கதேச தீவிரவாத அமைப்பு மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவன் ஷாகீத். குண்டு வெடிப்புக்கு முன்னர் ஹைதராபாத்தில்தான் ஷாகித் பதுங்கியிருந்துள்ளான். அப்போது அவனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து ஏராளமான செல்போன் அழைப்புகள் வந்துள்ளன.

குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு ஷாகித் தலைமறைவாகி விட்டான். அவனைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டிருந்தான் ஷாகீத். ஆனால் போலீஸார் அதை முறியடித்து விட்டனர்.

பின்னர் மனித வெடிகுண்டு மூலம் ஆந்திர மாநில அதிரடிப்படை அலுவலகத்தில் ஷாகீத் தாக்குதல் நடத்தினான். இந்த நிலையில்தான் வங்கதேச அமைப்புடன் இணைந்து ஷாகீத் ஹைரதாபாத்தில் பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தான்.

அந்த சதியை போலீஸார் முறியடிப்பதற்குள் மசூதியில் குண்டுவெடிப்பு நடந்து விட்டது.

நேற்றைய குண்டுவெடிப்பில் மொத்தம் 400 கிராம் ஆர்.டி.எக்ஸ் மற்றும் டிஎன்டி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நோக்கியா செல்போனை வெடிகுண்டாக மாற்றியுள்ளனர்.

ஹைதராபாத்தில் சிவராஜ் பாட்டீல்

இதற்கிடையே, சம்பவம் நடந்த மசூதியை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் காயமடைந்து உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் முதல்வர் ராஜசேகர் ரெட்டியும் உடன் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X