For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில்பெண் சிசு கொலை கொடூரம்!!

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை.

பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் காலமாக உசிலம்பட்டியில் அரங்கேறி வந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசுத் தரப்பிலும், தொண்டு நிறுவனங்கள் தரப்பிலும் பல நடவடிக்கைகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. அதன் பின்னர் சிசுக் கொலை சற்றே அடங்கியது. ஆனால் உசிலம்பட்டியைத் தவிர தர்மபுரி, சேலம் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலும் இந்தக் கொடூரம் நடப்பது தெரிய வந்தது.

கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின்போது பெண் சிசுக்களை காக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் பல பெண்கள் அரசுத் தொட்டிலில் விடப்பட்டன

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் இல்லாமல் இருந்து வந்த பெண் சிசுக் கொலை மீண்டும் தற்போது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பேரணாம்பட்டு என்ற ஊரில் ஒரு பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வதும் பெண்ணாக பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்த 2வது நாள் இறந்து விட்டதாம்.

சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து பெற்றோரிடம் கேட்டபோது, ஏதோ தீய சக்தி வந்து குழந்தையை கொன்றுவிட்டது என்றார்களாம். அவர்கள் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அப்படித்தான் சொல்கிறது.

இதன் பின்னணியில் பெரிய அக்கிரமமே ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஈரத் துணியில் சிசு சுருட்டல்:

இந்த கிராமங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டார்களாம். பிறந்து ஒன்றிரண்டு நாட்களே ஆன குழந்தைகளை ஈரத்துணியில் சுருட்டி வைத்து விடுவார்களாம். இந்த கொடூரத்தால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பச்சிளம் சிசு பரிதாபமாக இறந்து போய் விடும்.

அதன்பின்பு அந்த குழந்தைகளை வீட்டின் பின்புறமோ அல்லது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்தோ புதைத்து விடுவார்களாம்.

தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில்தான் தற்போது பெண் சிசுக் கொலை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2001முதல் 2006 வரை இந்த மாவட்டத்தில் 1612 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.

இதைத் தடுக்க சமூகநல அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம். ஆனால் இதுவரை அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிராம மக்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X