For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதுநகரில் பயங்கரம்: உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து டிவி, பிரிட்ஜுகள் வெடித்தன!

By Staff
Google Oneindia Tamil News


விருதுநகர்:

விருதுநகரில் உயர் அழுத்த மின்சாரம், வீடுகளுக்கான மின் இணைப்பில் பாய்ந்ததால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, ஃபிரிட்ஜுகள் உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. 30க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தபோது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

விருதுநகர், மதுரை சாலையில் தற்போது நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியையொட்டி சாலையோரம் உள்ள உயர் அழுத்த மின் கம்பங்களை தள்ளி வைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இப்படிக் கம்பங்களை தள்ளி வைக்கும்போது, வீடுகளுக்கான மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் தாழ்ந்த நிலைக்கு வந்து விடுகின்றன. அந்த சமயத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் இணைப்புகள், வீடுளுக்கான இணைப்புகளில் உரசாதவாறு கவனத்துடன் பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பு மின்வாரிய ஊழியர்களுக்கு உள்ளது.

தினசரி மாலையில் பணி முடிந்து செல்லும்போது இதுபோல உயர் அழுத்த கம்பி, வீடுகளுக்கான இணைப்பில் உரசிக் கொண்டிருக்கிறதா, இல்லையா என்பதை மின்சார ஊழியர்கள் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பணி முடிந்து சென்ற மின்சார ஊழியர்கள் அதை சரியாக கவனிக்காமல் சென்றுள்ளனர். இதன் காரணமாக, மதுரை சாலையில் உள்ள என்.ஜி.ஓ காலனி கிழக்கு, நேரு தெருவில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் இணைப்பில் உயர் அழுத்த மின்சார வயர் பட்டு அதில் மிக அதிக அழுத்தத்திலான மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் அந்தத் தெருவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அதிக அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து வீடுகளில் இருந்த டிவி, ஃபிரிஜ்ட், டிவி பிளேயர், மின்விசிறி உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருட்களுடன் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின.

அதிர்ஷ்டவசமாக வீடுளில் இருந்தவர்கள், மின்சார சுவிட்ச் உள்ளிட்ட எதையும் தொடாததால் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் நடந்தபோது வீடுளில் 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அத்தனை பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் சென்றது. மின்வாரிய உதவிப் பொறியாளர் உள்ளிட்டோர் வந்தனர். தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த வயரை தூக்கி இழுத்துக் கட்டி விட்டு, யாராவது சிறுவர்கள் மரத்தில் இலை பறிப்பதற்காக இதை இழுத்து விட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கூறி விட்டுச் சென்று விட்டனராம்.

மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளரை அத்தெரு மக்கள் அணுகி புகார் கொடுத்தனர். ஆனால் என்ன புகார் கொடுக்கிறார்கள் என்பதைக் கூட படித்துப் பார்க்காமல் அவர் செயற் பொறியாளருக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குறை தீர்ப்புப் பிரிவிலும் இதுகுறித்துப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களின் பொறுப்பற்ற தனத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இருப்பினும், ஒன்றும் நடக்கவில்லையே என்ற அலட்சிய மனோபாவத்துடன் மின்வாரியம் செயல்படாமல், வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின்சார வயர்களால் மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்ரு அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X