For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ வீட்டு ஊடுருவல்-சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல்-கூண்டோடு வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சட்டசபையில் இன்று அதிமுகவினர் பெரும் கூச்சலில் இறங்கினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.

ADMK MLAsதமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. திருக்குறளை வாசித்து அதன் விளக்கத்தைச் சொன்ன பிறகு கூட்டத்தைத் தொடங்கினார் சபாநாயகர் ஆவுடையப்பன்.

அப்போது எழுந்த அதிமுக கொறடா செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுவது அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வரின் வீட்டுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 முறை ஊடுருவல்கள் நடந்துவிட்டன. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு தரப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டிருந்தது.

புலிகளை இந்தியாவில் தடை செய்ததில் முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. மேலும் நக்ஸல்கள், புலி ஆதரவு அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. இதனால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு அவசியம்.

ஆனால், நேற்று மீண்டும் ஒரு நபர் போயஸ் தோட்ட இல்லத்தில் புகுந்துவிட்டார். முதல் மாடியில் உள்ள நூலகம் வரை வந்துவிட்ட அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து இப்போதே விவாதிக்க வேண்டும் என்றார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஆவுடையப்பன், இது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கொடுத்துள்ள நோட்டீஸ் என் பரிசீலனையில் உள்ளது. இதனால் இப்போது இது குறித்து விவாதிக்க முடியாது என்றார்.

ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை எழுப்பியபடியே இருக்கவே, இடைமறித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் அந்த ஊடுருவல் நபரே அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது என்றார்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஜெயக்குமார், பாலாஜி, சேகர்பாபு ஆகியோர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடி வந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை இருக்கைகளுக்குத் திரும்புமாறு சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டு செவி சாய்க்கவில்லை.

தொடர்ந்து கத்தி கூச்சலிட்டனர். அவர்களுடன் பிற அதிமுகவினரும் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டதால் அவையில் குழப்பமே மிஞ்சியது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து உள்ள நுழைந்த அவைக் காவலர்கள் அதிமுகவினரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றனர். சிலரை தூக்கிச் சென்றனர். அப்போதும் கூட முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியபடியே அதிமுகவினர் வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக எம்எல்ஏக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன், போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் என்றார்.

ஆனால், இந்த விவகாரம் நடந்தபோது முதல்வர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X