For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

By Staff
Google Oneindia Tamil News

Bashaகோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், பாபு, ஜாகீர் உசேன் உள்ளிட்டோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா, அவரது மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இறுதியில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டுவிட்டது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந் நிலையில் கொலை, சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாஷா, அன்சாரி, நவாப்கான் உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இதற்காக இவர்கள் அணி அணியாக நீதிபதி உத்திராபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

Ansariஅப்போது அல்-உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இது தவிர மேலும் ஒரு குற்றச்சாட்டின் மீது பாஷாவுக்கு மேலும் 3 வருட சிறை தண்டனையும் விதித்தார்.

அல்-உம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கூடுதல் சிறை தண்டனை விதித்தார். இதன் மூலம் அன்சாரிக்கு மொத்தம் 68 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அவர் அனுபவிப்பார்.

பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், அப்துல் ஓஜார், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், பாபு, ஜாகீர் உசேன், சித்திக் அலி, அப்துல் சலாம், தடா அஸ்லாம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், அப்பாஸ், ஜப்ரூ, இஸ்மாயில், மக்கான் ஜாபர், முகமது அம்ஜத் அலி, அமானுல்லா உள்ளிட்டோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அப்துல் ஓஜாருக்கு 4 ஆயுள் தண்டனைகளும் மேலும் சில சிறை தண்டனைகளையும் சேர்த்து மொத்தம் 138 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சப்ருதீன் என்பவருக்கு 2 ஆயுள் தண்டனைகளுடன் மொத்தம் 91 வருட சிறையும், ஜஹாங்கீர் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனைகளுடன் மொத்தம் 60 வருட சிறை தண்டனயும், முஸ்தபா என்பவருக்கு 2 ஆயுள் தண்டனைகளுடன் 47 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

முகமது ஜமேசா, ஷாஜகான், அப்துல் ஜாபர், அமானுல்லா உள்ளிட்ட 7 பேருக்கு தலா 10 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. இதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 4 பேரும் ஏற்கனவே 9 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.

தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்துக் கொண்டிருந்தபோது தண்டனை பெற்ற முகம்மத் பாசித் என்பவர் நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார். நீதிமன்றத்தில் உரத்த குரலில் பேசிய அவர், எங்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி தான் தந்தோம். இதற்காக எங்களுக்கு தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், பாபர் மசூதியை இடித்த முக்கிய குற்றவாளியான அத்வானியும் நரேந்திர மோடியும் தண்டிக்கப்படவில்லை. மாறாக இசட் பிளஸ் பாதுகாப்பில் சுற்றிக் கொண்டுள்ளனர் என்றார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தண்டனை விவரம் வெளியிடப்பட்டதையொட்டி கோவை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் விடிய விடிய தீவிர வாகனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.கோவை முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X