For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்குப் பயந்து அத்வானிக்கு கிரீடம்!!

By Staff
Google Oneindia Tamil News

Advani
டெல்லி: குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் அத்வானியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

குஜராத் தேர்தலுக்குப் பின் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும், ஒரு வேளை காங்கிரஸ் குஜராத்தில் வென்றுவிட்டால் அந்தக் கட்சியே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகலாம் என்பதாலும் தங்களை தயார் நிலையில் வைக்கவே அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இது ஒரு காரணம்.

ஆனால், உண்மைக் காரணம் வேறு என்கின்றனர் பாஜகவை நன்றாக அறிந்தவர்கள்.

அந்தக் கட்சியில் இதுவரை வாஜ்பாய், அத்வானியைத் தவிர வேறு யாரும் பிரதமர் பதவிக்கு கண் வைத்ததில்லை. ஆனால், குஜராத்தில் வென்றால் அடுத்து தேசிய அளவில் தனக்கு முக்கியப் பதவியை மோடி கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தன்னை பிரதமராக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தால், அதை ஆர்எஸ்எஸ், விஎச்பியும் ஆதரித்தால் தனது நிலை மோசமாகிவிடும் என அத்வானி அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடிக்குக் கூடிய கூட்டத்தில் 10ல் ஒரு சதவீதம் கூட வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் கூடவில்லை. அங்கு தன்னைத் தவிர வேறு யாருக்கும் போஸ்டர் கூட ஒட்ட விடவில்லை மோடி.

இந்தத் தேர்தலையே அவர் தனியாகத்தான் சந்திக்கிறார். கட்சி ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரையும் அவர் பல காலமாகவே மதிப்பதில்லை. தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே சீட் தந்தார்.

மத்திய தலைவர்கள் யாரையும் இதில் தலையிடவே விடவில்லை மோடி.

குஜராத் தேர்தலில் பாஜக வென்றால் மோடியில் செல்வாக்கு மேலும் உயர்வது நிச்சயம் என்பதால் பாஜகவில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டுவிட்டதை காண முடிகிறது.

மோடி ஆதரவு தலைவர்கள், இப்போதே அடுத்த பிரதமர் மோடிதான் என்று கூற ஆரம்பித்துவிட்டதைக் கேட்டு அத்வானி கேம்ப் அதிர்ந்து போய் உள்ளது.

குஜராத்தில் பாஜக வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாலும் மோடியில் செல்வாக்கும் மேலும் உயர்வதை கட்சியின் பெரும்பாலான டெல்லி தலைகள் விரும்பவில்லை.

இப்போதே அத்வானியை ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்தும் மோடி அடுத்து ஆர்எஸ்எஸ், விஎச்பியின் துணையோடு தனக்கு பிரதமர் பதவியைக் கேட்டால் அத்வானியின் நிலைமை மிகவும் மோசமாகும்.

அதற்கான சாத்தியக்கூறைத் தடுக்கவே அத்வானி அவரச அவசரமாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதில் அத்வானி எதிர்ப்பாளர்களும் அவருக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது,
குறிப்பாக முரளி மனோகர் ஜோஷி. இவர் அத்வானியை எந்த காலத்திலும் தலைவராக ஏற்க மறுப்பவர்.

இவருக்கும் அத்வானிக்கும் இடையிலான பனிப் போர் உலகறிந்தது. ஆனால், நேற்று அத்வானியை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்த முக்கிய தலைவர் ஜோஷி தான். காரணம், இவருக்கும் மோடி பயம் தான்.

அத்வானியின் பெயரை ராஜ்நாத் சிங் அறிவித்தவுடன், முதல் ஆளாக ஜோஷிதான் அவருக்கு ஸ்வீட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல வாஜ்பாய் நெடுங்காலமாக தன்னை அத்வானி தரப்பு ஒதுக்கி வருவதை மெளனமாக சகித்துக் கொண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தார்.

போபாலில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்திலேயே அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஆனால் அக் கூட்டத்தில் பங்கேற்காத வாஜ்பாய் திடீரென ஒரு கடிதத்ைத அனுப்பி அத்வானி ஆதரவாளர்களை கடுப்படித்தார்.

அந்தக் கடிதத்தில் இப்போது நான் உடல் நலமில்லாமல் இருக்கலாம். ஆனால் விரைவில் உங்களுடன் இணைந்து செயல்பட வருவேன் என்று கூறியிருந்தார் வாஜ்பாய்.

இப்போது மோடியின் வளர்ச்சி வாஜ்பாயையும் தனது நிலையை மாற்றிக் ெகாள்ளச் செய்துவிட்டது.

அத்வானியை பிரதமர் வேட்பாளராக்க வாஜ்பாயை சம்மதிக்க வைப்பதை விட ஆர்எஸ்எஸ், விஎச்பி தரப்பை சம்மதிக்க வைப்பது தான் அத்வானி தரப்புக்கு இதுவரை கஷ்டமாக இருந்து வந்தது.

காரணம், விஎச்பி-ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவும் மோடிக்கு இருந்து வந்தது. ஆனால், மோடியின் சர்வாதிகாரமான செயல்பாடு விஎச்பி-ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டுவிட்டது.

பாஜக தலைவர்களை மாத்திரமல்ல விஎச்பி-ஆர்எஸ்எஸ்சின் முக்கியத் தலைவர்களையும் மோடி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்தவரான விஎச்பி சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கும் மோடிக்கும் இடையே தீவிர மனக் கசப்பு நிலவி வருகிறது. மோடிக்கு வெற்றிக்கு அயராமல் உழைத்த தனது அமைப்பினரையே மோடி ஒதுக்குவதை தொகாடியாவால் ஜீரணிக்க முடியவில்லை.

மோடிக்கு எதிராக காய் நகர்த்த காத்திருந்தவருக்கு கிடைத்தார் அத்வானி. அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தனது முழு ஆதரவைத் தெரிவித்துவிட்டார் தொகாடியா.

ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் இதே பிரச்சனை தான். தங்களை மதிக்காத மோடிக்கு பாடம் கற்பிக்க அத்வானிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துவிட்டது.

ஆர்எஸ்எஸ், விஎச்பியின் ஆதரவு கிடைத்துவிட்ட நிலையில் வாஜ்பாயின் ஆதரவும் சேர்ந்துவிட தான் நினைத்ததை சாதித்துக் கொண்டுவிட்டார் அத்வானி.

இப்போதைய நிலையில் குஜராத்தில் பாஜக வென்றால் அதற்கு முழுக் காரணமும் மோடியாகத்தான் இருக்க முடியும். இதன் மூலம் வாஜ்பாய்க்கு அடுத்து, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி உருவெடுத்து விடுவார். அது அத்வானிக்கு நல்லதல்ல.

இதனால்தான் மிக வேகமாக செயல்பட்டு அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

அதிலும் அறிவித்த நேரம் மிக மிக முக்கியமானது. இன்று தேர்தல் நடக்கும் நிலையில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது.

இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் கூட, மோடி மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. அத்வானி அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பும் ஒரு காரணம் என்றும் கூறிக் கொள்ள முடியும் என்பதால் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது என்கிறார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும், இதன் மூலம் வாஜ்பாயின் அரசியல் அத்தியாயத்தை பாஜக முடித்து வைத்துவிட்டது.

இந் நிலையில் இதே கருத்தைத் தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிப்படுத்தியுள்ளார்.
வதோராவில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மோடியைப் பார்த்து அவர்கள் பயந்து விட்டனர். மோடிக்கு செல்வாக்கு உயர்ந்து வருகிறது. அவரால் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்துதான் அத்வானிக்கு முடி சூட்டியுள்ளனர் என்றார் மன்மோகன் சிங்.

தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்த பிரதமர், இது பாஜகவின் உள் கட்சி விவகாரம். இதற்கு மேல் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறி விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X