For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தினம்: பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் தமிழகம்!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக் கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள டெல்லி வந்துள்ளதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் உல்பா தீவிரவாதிகள் விமானக் கடத்தில் ஈடுபடக் கூடும் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர உஷார் நிலை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னையில் ..

தலைநகர் சென்னையில் விமான நிலையம், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், தி.நகர் உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு அங்கு வருகிறவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மெகா மால்கள், வர்த்தக வளாகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு நுழையும் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மெரீனாவில் விமானம் பறக்க தடை:

பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக, மெரீனா கடற்கரை பகுதி மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் அருகே மெட்டல் டிடெக்டர் கருவி வைத்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் உதவியுடன் கடற்கரை சாலை முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அணிவகுப்பு புறப்படும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் ஊடுருவாமல் தடுக்க கியூ பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அணி வகுப்பு மற்றும் அலங்கார வண்டிகள் அணி வகுப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் போது மெரீனா கடற்கரை பகுதி மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல் படையும் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடல் வழியாக விடுதலைப்புலிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக ரோந்து பணி தீவிரமாக்கப் பட்டுள்ளது.

கோட்டை மற்றும் மெரீனா பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரையில் ..

மதுரையில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு வரும் ரயில்களும் தீவிரக் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். பயணிகளின் உடமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்கின்றனர்.

மதுரை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி விமான நிலையத்திலும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் உள்ள விடுதிகள், லாட்ஜுகள், கல்யாண மண்டபங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து விவரம் கேட்டு வருகின்றனர்.

கோவையில் ..

கோவை நகர் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை நடந்து வருகிறது.

கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீளமேடு விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நெல்லை, தூத்துக்குடியில் ..

குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் தமோர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் தினகரன், ஜெயசந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அனைத்து பயணிகளும் மெட்டல் டிடெக்டர் முலம் சோதனை செய்யப்படுகின்றனர். மோப்ப நாய் முலமும் ரயில்வே தண்டவாளம், பிளாட்பாரம் சோதனை செய்யப்படுகிறது. முக்கிய பாலங்கள், சிலைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஊடுறுவல் அபாயம் காரணமாக ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அது தீவிரமாக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X