For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் நமிதா-ஸ்ரேயா உடைகள் குறித்து விவாதம்

By Staff
Google Oneindia Tamil News

Namitha

சென்னை: தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகள் வரம்பை மீறுவதாகவும், நடிகைகள் மிக ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்,

தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் கலாச்சார சீர்கேட்டில் இறங்கியுள்ளன. ஆபாச பாடல்களும் ஆட்டமும் தமிழர்களின் பாரம்பரியத்தை கெடுக்கின்றன. மக்கள் தொலைக்காட்சி (இதை நடத்துவது பாமக) அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஆபாச ஆட்டம் பாட்டத்தை தான் பார்க்க முடிகிறது.

கலாச்சார உறவு முறைகளை சீரழிக்கும் வகையில் தனியார் டி.விக்களில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஆட்டம், கும்மாளம், குத்தாட்ட நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை.

இன்னொரு டி.வியில் முத்தக்காட்சி கூட அரங்கேறுகிறது. மற்றொரு டி.வியில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மிக மோசமாக காட்டப்படுகின்றன.

முதல்வரிடம் விருது வாங்க வந்த நடிகை ஸ்ரேயா மிக ஆபாசமாக உடையணிந்து வருகிறார்.

துணை சபாநாயகர்: நீங்கள் ஒவ்வொரு டி.வியிலும் இடம் பெற்ற நிகழ்ச்சிகளை வர்ணிப்பதை பார்த்தால் சீன் பை சீன்' பார்த்து இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: டி.வி. நிகழ்ச்சிகளில் நாட்டியம் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் ஏதும் இல்லை.

வேல்முருகன்: மானட மயிலாட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் நமீதா அணிந்து வரும் உடைகள் முகம் சுழிக்க வைக்கின்றன. மிக ஆபாசமாக உடையணிகிறார்.

ஆற்காடு வீராசாமி: நடிகைகள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சட்டம் போட முடியாது. அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்துக்கு என்ன அளவு கோல் உள்ளது. இத்தனை அங்குலம் சட்டை போடுவது, பாவாடை அணிவது என்று நாம் சொல்ல முடியாது. உடை அணிவது பற்றி நாம் சொல்ல முடியாது. உறுப்பினர் வேல்முருகன் நடித்த படத்தில் கூட 'ஜிங்கு ஜிக்கா' டான்ஸ் உள்ளது. ஆபாசம் என்பது மனதில் தான் உள்ளது, அதை பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது.

பாமக தலைவர் ஜி.கே.மணி: அமைச்சர் பேசுவைப் பார்த்தால் ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் உடையணியலாம். யாரும் ஏதும் சொல்லக் கூடாது என்பது போல் இருக்கிறது. அரை குறை ஆடை கட்டி நடுத் தெருவில் போக முடியுமா. எனவே இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். சமுதாய சீரழிவை தடுக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: கால மாறுதலுக்கு ஏற்ப உடைகளிலும் மாற்றம் வந்துவிட்டது. வேலை-வசதிக்கு ஏற்ப உடைகளை அணிகின்றனர். ஒரு காலத்தில் விவசாயிகள் என்றால் கோவணத்தில் தான் இருந்தார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது. பெண்கள் வசதிக்காக ஆண்களைப் போல உடையணிலாம் என்று தந்தை பெரியாரே கூறியிருக்கிறார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உடைகளில் இவ்வளவு தூரம் கட்டுப்பாட்டை பார்த்தால், உறுப்பினர் வேல்முருகன் வேஷ்டி-சட்டையில் தான் வந்திருக்க வேண்டும். அவர் எப்படி பேண்ட்-சட்டை போட்டு வரலாம் (அவையில் பலத்த சிரிப்பு)

வேல்முருகன்: இது ஒரு முக்கியமான விவகாரம். இதை மிகச் சாதாரண பிரச்சனையாக்க மூத்த அமைச்சரே முயலக் கூடாது. இன்று வரும் பாடல்கள் கூட கட்டிப்புடி, கட்டிப்புடிடா' என்று ஆபாசமாக உள்ளது. பெண்களை ஏன் இப்படி கூறுபோட்டு விற்க வேண்டும்.

இது தமிழர்கள் கலாச்சாரம் குறித்த விஷயம். இதனால் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு சென்சார் கொண்டு வர வேண்டும். நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தனியார் ரேடியோக்களும், டிவிக்களும் வந்த பிறகு தான் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி, பெற்ற மகளையே தந்தை மானபங்கம் செய்தார் போன்ற செய்திகள் எல்லாம் வருகின்றன. நான் சில பாடல்களின் வரிகளை சுட்டிக் காட்டி விளக்கியபோது முதல்வரே கூட அதிர்ந்துவிட்டார் என்றார் வேல்முருகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X