For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாலத்தின் பெயரால் சேது திட்டத்தை முடக்க சதி-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தின் 60 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அதை வேறு பாதையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, அதை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட வேண்டும் என்ற சதித் திட்டம் தான் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில்:

கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், எந்தப் பாதையில் என்பது முக்கியமல்ல, நமக்கு திட்டம்தான் முக்கியம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்: இதே கருத்தை நானும் தொடக்கத்திலே எதிர்ப்பு கிளம்பியதுமே தெரிவித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் வேறு பாதை வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லை என்கிறார்கள். மேலும் 60 சதவிகித அளவிற்கு மேல் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வேறு மாற்று வழித்தடம் என்று கூறுவது திட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்வதற்காகத்தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. ஆறு வழித் தடங்கள் என்று கூறப்பட்டு அத்தனை வழித்தடங்களை பற்றியும் 50 ஆண்டு காலத்திற்கு மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டு, நீண்ட இடைவெளிக்கு பின்னர்தான் தற்போதைய திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த காலத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போது, யாரும் ராமர் பாலம் பற்றி சொல்லவே இல்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்டபோதும் இத்தகைய எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவிகித பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் இந்த பெயரை சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திட்டத்தை நிறைவேற விடாமல் செய்வதற்கான சதி வேலை என்றுதான் கருதப்படுகிறது.

தென் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதிலே நம்முடைய ஆட்சிக்கு பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், பல்வேறு முயற்சிகளிலே அந்த சதிகாரர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

பாமகவுடன் ஊடலா?:

கேள்வி: "ஊடல்" என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திப் பேசப்போய் அது, திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே பெரிய விமர்சனப் பொருளாகி விட்டதே?

பதில்: ஊடல் என்றால் தவறாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை

"இல்லை தவறவர்க்காயினும் ஊடுதல்
வல்லதவரளிக்கும் ஆறு''

என்பது குறள். அதாவது எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது-இப்படி ஊடல் பற்றி உரைக்கிறது அய்யன் வள்ளுவன் வழங்கியுள்ள குறள்.

இந்த வார்த்தையைக்கூட நான் எப்போது கூறினேன் என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு என் பதில் உரையைத் தொடங்கும்போது, அதனைப் பாராட்டி பத்திரிகைகள் எழுதியிருந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டேன்.

இன்னும் கொஞ்சம் வேணுமா?:

அப்போது, "தமிழ் ஓசை" பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஏடு. இப்போது நமக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் ஊடல் இருந்தாலும் கூட (இல்லை என்கிறார் ஜி.கே.மணி. ஊடல் இருந்தாலும் கூட என்று சொன்னதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்). இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

கேள்வி: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாகவும், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. டெல்லியிலிருந்து வரும் "எகானிமிக் டைம்ஸ்" ஏட்டில் வெளிவந்துள்ள செய்திதான் இந்தக் கேள்வி. மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு நான் ஏற்கனவே விளக்கம் தந்திருக்கிறேன். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இடம் தராது.

ஞானசேகரனின் 'ஞானம்':

கேள்வி: காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் பேசும்போது உளவுத்துறையை முடுக்கிவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவரே பேசும்போது கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தமிழகத்திலே 102 பேர் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 40 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம் உளவுத்துறை முடுக்கி விடப்பட்டதுதான். மேலும் அவரே திலீபன், செல்வராஜ் ஆகியோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். அதற்குக் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டதுதான்.

கியூ பிராஞ்ச்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஞானசேகரன், உளவுத் துறையைக் கண்டித்தார். வேடிக்கை என்னவென்றால்-கியூ பிராஞ்ச் என்பதே உளவுத்துறையின் கீழே செயல்படுவதுதான். அது தெரியாமல் தமிழகத்தின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் அங்கே கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.

கேள்வி- இன்றைய ஜனசக்தி நாளிதழில் 'சட்டமன்றம் ஒரு பார்வை' என்ற தலைப்பில் இரா.பாஸ்கர் என்ற தோழர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையை படித்தீர்களா?

ப:- படித்தேன். அந்த கட்டுரையில் "பிரதான எதிர்க்கட்சி பற்றி குறிப்பிடும்போது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமா என்கிற சந்தேகம் எழுகிற அளவிற்கு அந்த இயக்கத்தின் பெயரையோ, அக்கட்சியின் பொது செயலாளர் பெயரையோ மாற்று கட்சியினர் உச்சரித்தாலே அதிமுகவினர் உரக்க குரல் எழுப்புவதும், அனைவருமாக எழுந்து நின்று கொண்டு கூச்சல் போடுவதுமே அக்கட்சியின் சட்டமன்ற சாதனையாக உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், "அதிமுக பொதுச் செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) ஏதோ சுவாரஸ்யமாக பேசுவதாகக் கருதி நிதியமைச்சரை நோக்கி நீ என்ன பேராசிரியரா? உதவிப் பேராசிரியர்தானே? சட்ட அமைச்சர் என்ன சட்ட நிபுணரா? தலைமை செயலர் திரிபாதி என்ன சட்ட மேதையா என்றெல்லாம் ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார். அன்றைக்கு ஜெயலலிதா அவையில் பேசிய விதமோ, தன்னை சட்ட மேதை போல கருதிக்கொண்டு சட்ட நுணுக்கங்களை புட்டு வைப்பது போல் இருந்தது.

ஆளும் கட்சி தரப்பில் எடுத்து வைத்த எதிர் கேள்விகளுக்கு கூட அவரால் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறிப்போய், என்னை திசை திருப்ப முயல்கிறீர்கள் என்று கூறி அவர்தான் திசை மாறினார்" என்றும் கட்டுரையாளர் எழுதியிருப்பது உண்மையை உணர்த்துவதாக உள்ளது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X