For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு 'கட் அடிக்கும்' விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை 96 நாட்கள் சட்டப் பேரவை நடைபெற்றுள்ள நிலையில் 31 நாட்கள் தான் விஜயகாந்த் பேரவைக்கே வந்திருக்கிறார். அதுவும் வந்து கையெழுத்துப் போட்டு விட்டு உடனே திரும்பிப் போன நாட்களே அதிகம் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநெல்வேலியில் ஒரு திருமண விழாவில் தமிழக அரசையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் கடுமையாகத் தாக்கி தமிழகத்தில் அலங்கோலமான ஆட்சி நடக்கிறது என்றும், அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவதாகவும், மக்கள் நலனில் அரசுக்கு அக்கறையே இல்லை என்றும், தேசிய கட்சியும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என் றும் மற்றும் பல்வேறு குற்றச் சாட்டுக்களையும் சுமத்திப் பேசியிருந்தார்.

அதற்கு முதல்வர் கருணாநிதி விரிவாக விளக்கம் அளித்ததோடு விஜயகாந்த் வெளியிலே எழுப்பிய கேள்விகளை எல்லாம் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலே ஆளுநர் உரை விவாதத்தின் போது பேசியிருக்கலாமே என்று கேட்டதற்கு, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு கொடுக்கப்படுகின்ற காலம் குறைவு என்று சொல்லி இருக்கிறார்.

2006ம் ஆண்டு மே மாதம் ஐந்தாவது முறையாக திமுக பதவி பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை 96 நாட்கள் சட்டப் பேரவை நடைபெற்றுள்ளது. இதில் 31 நாட்கள் தான் விஜயகாந்த் பேரவைக்கு வருகை தந்திருக்கிறார். வந்த நாட்களிலும் கையெழுத்துப் போட்டு விட்டு உடனடியாக சென்ற நாட்களே அதிகம்.

குறிப்பாக 2007ம் ஆண்டு 49 நாட்கள் பேரவை நடைபெற்றதில் 8 நாட்கள் பேரவைக்கு வந்திருக்கிறார். இந்த 96 நாட்களில் ஒட்டு மொத்தமாக 1 மணி 15 நிமிடங்கள் தான் அவர் பேசியிருக்கிறார். 2007ம் ஆண்டு ஒரு முறை கூட அவர் பேரவையில் பேசவில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு கொடுக்கப்படுகின்ற காலம் குறைவு என்று அவர் கூறியதாவது உண்மையா? பேரவை நடைபெற்ற 96 நாட்களில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்காக அளிக்கப்பட்ட நேரம் 27 மணி 8 நிமிடங்கள். பிரதான எதிர்க் கட்சியான அதிமுக பேசிய நேரம் 41 மணி 17 நிமிடங்கள்.

தேமுதிகவிற்கு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டும் பேசிய நேரம் 1 மணி 15 நிமிடங்கள்.

திமுக தலைவர் எதிர்க் கட்சியில் இருக்கும் போது சட்டப் பேரவை பக்கமே போனதும் கிடையாது, பேசியதும் கிடையாது என்றும் விஜயகாந்த் சொல்லி யிருக்கிறார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்கள் எதையும் பேசுவார்கள்.

1957 முதல் 1962 வரையில், 1962 முதல் 1967 வரையில் மொத்தம் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் தான் கருணாநிதி இருந்தார். 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அடுத்து வந்த தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையிலே தான் கருணாநி இருந்தார்.

அந்த கால கட்டங்களில் சட்டப் பேரவை வரலாற்றில் நிலைத்து விட்ட எருக்கஞ்சேரி பிரச்சினை, பல்கேரியா-பால்டிகா கப்பல்கள் பிரச்சினை போன்றவைகள் கருணாநிதியால் நீண்ட நேரம் பேசப்பட்ட பேச்சுக்களாகும்.

தேனி முத்துதேவன்பட்டியில் கருணாநிதி அவருடைய மகன் மு.க.அழகிரி பெயரில் தோட்டம் ஒன்று வாங்கியிருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஒருவர் பேரவையில் பேசி, அதை பேரவையிலே நிரூபிப்பதாக முதல்வர் எம்.ஜி.ஆர் நேராகவே சவால் விட்டு, அதற்கு கருணாநிதி எதிர் சவால் விட்டு, அதன் பின்னர் விசாரணை நடைபெற்றது.

அமைச்சரின் கூற்று தான் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டு அதனை அன்றைய அதிமுக ஆட்சியின் பேரவை தலைவராக இருந்த ராஜாராம் பேரவையிலே தீர்ப்பாகக் கூறியது எல்லாம் கருணாநிதி எதிர்க்கட்சி வரிசையிலே இருந்து பேசியபோது எடுத்து வைத்த வாதங்களின் அடிப்படையிலே தான் என்பது சட்டமன்ற நடவடிக்கை புத்தகங்களில் பதிவாகி இருப்பதை இப்போதும் எடுத்து படித்து பார்க்கலாம்.

அவர் எதிர்க் கட்சியாக இருந்த போது பேரவை விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைக்கின்ற செயலாகும்.

ஆணவமாகவோ, அகம்பாவமாகவோ தான் என்றைக்கும் பேசியது இல்லை என்று விஜயகாந்த் தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். கடந்த 10ம் தேத கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் எங்களிடம் தாருங்கள். யாராக இருந்தாலும் அவர்களது சட்டையை பிடித்து மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று உலுக்கி கேட்பேன். டெல்லியையே கலக்குகிறேன் என்று எல்லாம் பேசி அந்த பேச்சு ஏடுகளில் வந்துள்ளதே, அது அவரது அடக்கத்தின் வெளிப்பாடான பேச்சு என்கிறாரா?

எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்து திமுகவை முழு மூச்சோடு எதிர்த்து போட்டியிட்ட காலத்திலே தான் 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதி 40 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றார்.

ஏன் இப்போது 2006ம் ஆண்டு தேர்தலில் அந்த எம்.ஜி.ஆரும் இல்லாத நிலையில் கறுப்பு எம்.ஜி.ஆர். என்று தன்னைக் கூறிக் கொள்கின்ற இவரும் எதிர்த்த நிலையிலே தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

கருணாநிதியை போன்ற அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்து விட்டதாகவும் விஜயகாந்த், அறிக்கையில் கூறி இருக்கிறார். இவரை நம்பி மோசம் போனவர்கள் கருணாநிதியிடம் வந்து கண்ணீர் விட்ட கதை எல்லாம் தெரியாதா என்ன?

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X