போலீஸாருக்கு நார்கோ டெஸ்ட் முடிந்தது
பெங்களூர்: தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸார் 8 பேருக்கு பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளையும், வாக்கி டாக்கியையும் எடுத்துச் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர்.
தீவிர தேடுதல் வேட்டையில், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து காவல் நிலையப் போலீஸார் மீது சந்தேகம் திரும்பியது. அங்குப் பணியாற்றி வந்த அனைத்துப் போலீஸாரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு பேர் உள்பட மொத்தம் 8 போலீஸாரிடம் விசாரணைக் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது.
இறுதியில், அவர்ளை பெங்களூருக்குக் கொண்டு சென்று உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து நாமக்கல் எஸ்.பி. ஜான் நிக்கல்சன் தலைமையிலான போலீஸ் படையினர் 8 போலீஸாருடனும் பெங்களூர் வந்தனர். 26ம் தேதி முதல் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று இந்த சோதனை முடிவடைந்தது.
சோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து 8 பேரும் மீண்டும் தர்மபுரி கொண்டு செல்லப்பட்டனர். சோதனையில் 8 பேரும் என்ன சொல்லியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.