• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதச் சாயம் கொண்ட பட்ஜெட்: அத்வானி

By Staff
|

Advani with Manmohan singh
டெல்லி: சிறுபான்மையினருக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த பட்ஜெட்டில் மதச் சாயம் மிக அதிகமாக உள்ளது என்றார் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

விவசாய கடன்கள் ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மிகவும் தாமதமான அறிவிப்பு. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆட்சி, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கடன் ரத்தை முன்பே செய்திருந்தால் தற்கொலைகளை தடுத்திருக்கலாம். மேலும் ரூ. 60,000 கோடி என்பது மிகவும் குறைவான தொகை. கூடுதல் தொகை ஒதுக்கியிருக்க வேண்டும்.

திருவள்ளுவரும் சிதம்பரமும்:

விவசாயிகளுக்கு போதிய கடன் வசதி, அன்பு, ஏழைகளுக்கு உதவி போன்றவை தான் சரியான நிர்வாகத்துக்கு அடையாளம் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார் என்று, பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது ப. சிதம்பரம் கூறினார்.

ஆனால், கடந்த 4 வருடமான இந்த குறளை ஏன் சிதம்பம் நினைவில் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

சிறுபான்மையினருக்கு அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த பட்ஜெட்டில் மதச் சாயம் மிக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட முகம்மது அலி ஜின்னா காலத்து லியாகத் அலியின் நினைவு தான் வருகிறது (தேசப் பிரிவினைக்கு ஜின்னாவுக்கு வலது கரமாக இருந்தவர் அலி) என்றார் அத்வானி.

அத்வானி மீது கபி்ல் சிபல் தாக்கு:

மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறுகையில்,

ரூ.7 லட்சம் கோடி அளவுக்கான ஒரு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 கோடிக்கும் குறைவான சில திட்டங்கள் சிறுபான்மையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கூட மதச்சாயம் பூச முயல்கிறார் அத்வானி. இது அவரது மதவெறி சிந்தனைகளுக்கு இன்னொரு அடையாளம்.

ரூ. 60,000 கோடி கடன் தள்ளுபடி போதாது என்று சொல்லும் அத்வானி, கடந்த பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடனை ஒரு பைசாவாவது ரத்து செய்தாரா என்றார் சிபல்.

தேர்தல் தேதி மட்டும் தான் பாக்கி-இடதுசாரிகள்:

பட்ஜெட்டில் நிதியமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மட்டும்தான் அறிவிக்கவில்லை என்று பட்ஜெட் குறித்து இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,

பட்ஜெட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக எதுவும் கூறப்படவில்லை. அதே சமயம் விவசாயக் கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது.

என்றாலும் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு மட்டுமே இதில் பயன் கிடைக்கும். தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இந்தப் பிரிவினர்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்த பட்ஜெட்டுக்கு மதச் சாயம் பூச அத்வானி முயல்வது கடும் கண்டனத்துக்குரியது. வெறும் தொழில்துறைக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும், பணக்காரர்களுக்கும் மட்டும் பட்ஜெட் போட முடியுமா.

ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோரும் இந்த நாட்டு பிரஜைகள் தானே. அவர்களுக்கும் திட்டங்களை அறிவிக்கத்தானே வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், இந்த பட்ஜெட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி ஒன்றை அறிவிக்காதது தான் மிச்சம். மற்றபடி எல்லாவற்றையும் சொல்லிவிட்டது காங்கிரஸ் என்றார் கிண்டலாக.

இக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜா கூறுகையில், பட்ஜெட் அறிவிப்புகள் காராணமாக தேர்தல் விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றார்.

சரத்பவார்:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சரும், கிரிக்கெட் வாரிய தலைவருமான சரத் பவார் கூறுகையில்,

இது தேர்தல் பட்ஜெட் அல்ல. தேர்தலுக்கு முன் இன்னொரு பட்ஜெட்டையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்யும். விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் 70 சதவீத விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

நாங்கள் கிரிக்கெட் வீரர்களை மட்டும் பாதுகாக்கவில்லை. விவசாயிகளையும் பாதுகாக்கிறோம் என்பதை இந்த பட்ஜெட்டைப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

ராம்விலாஸ் பாஸ்வான்:

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையி்ல்,

இதுவரையில் தாக்கலான அனைத்து பட்ஜெட்களிலும் இதுதான் மிகச் சிறந்த பட்ஜெட் என்றார்.

கே.வி. தங்கபாலு பாராட்டு:

மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான தங்கபாலு வெளியிட்டு்ள்ள அறிக்கையில், விவசாயிகளின் வாழ்க்கையில் இந்த பட்ஜெட் ஒளியேற்றி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளனர்.

அதே போல தமிழக முதல்வர் கருணாநிதியும் விவசாயிகளின் வங்கிக் கடன் சுமையை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரி்க்கையை ஏற்று, நாடு முழுவதும் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் இதயம் குளிரும் வகையில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X