5 மடங்கு உயரும் சாதா சிகரெட் விலை!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பில்டர் அல்லாத சாதாரண சிகரெட் மீதான வரி 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பில்டர் அல்லாத 60 மில்லி மீட்டர் நீளத்துக்கு அதிகம் இல்லாத சாதா சிகரெட் மீதான உற்பத்தி வரி முன் 1,000 சிகரெட்டுக்கு ரூ.168 ஆக இருந்தது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலான பட்ஜெட்டில் இது ரூ.819 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 5 மடங்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பில்டர் அல்லாத சாதாரண சிகரெட்டுகளின் விலை கடுமையாக உயரவுள்ளது. அதே நேரத்தில் பில்டர் சிகரெட்கள் மீதான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
பில்டர் அல்லாத சிகரெட்களால் உடலுக்கு அதிக தீங்கு ஏற்படுவதால் அதன் விலையை பில்டர் சிகரெட்டுக்கு இணையாக உயர்த்தும் வகையில் வரியை உயர்த்தியதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளில் வங்கிகளுக்கு இழப்பீடு:
இதற்கிடையே விவசாய கடன் தள்ளுபடியால் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு ஏற்படும் ரூ. 60,000 கோடி நஷ்டத்தை மத்திய அரசு 3 ஆண்டுகளில் ஈடுகட்டும் என சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், வங்கிகளின் சம்மதத்தை பெற்ற பிறகுதான் விவசாய கடன்களை ரத்து செய்வதை அறிவித்தேன்.
அந்த கடனை மத்திய அரசே வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தும். பொதுவாக, விவசாய கடனை திருப்பி வசூலிக்க 3 ஆண்டுகள் ஆகும். எனவே, 3 ஆண்டுகளில் இந்த கடனை மத்திய அரசு, வங்கிகளிடம் திருப்பித் தரும்.
நாங்கள் திருப்பிச் செலுத்துவதால், வாராக்கடன் என்ற நிலை மாறி, வங்கிகளுக்கு ரூ.60,000 கோடி நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது. இதனால் அவர்கள் மேலும் பலருக்கும் கடன் வழங்க முடியும்.
கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியவர்களையோ, அவர்கள் எவ்வளவு வாங்கினார்கள் என்றோ கண்டறிவது கடினம் என்றார் சிதம்பரம்.