தலைமைச் செயலக போர்டிகோ உடைந்தது
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையி்ன் போர்டிகோ திடீரென உடைந்து விழுந்தது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை உள்ளன. இந்த வளாகத்தில் தான் பத்து மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது.
அதில், பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள், மற்றும் அவர்களது அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த கட்டிடத்துக்குள் செல்வதற்கான பிரதான வாயிலில் கார்கள் வந்து நிற்பதற்கு போர்டிகோ உள்ளது. தற்போது, இந்த கட்டிடத்தில் படிக்கட்டு மற்றும் சுவர்கள் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் நேற்று இந்தக் கட்டடத்தின் போர்டிகோ திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் பல்வேறு பகுதிகளும் சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. முழுமையாக இந்த கட்டடத்தைப் பராமரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.