விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் கொலை-ஒரத்தநாட்டில் கலவரம்
ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉழூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற ராஜீவ்காந்தி (வயது 26). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தார். இவர் மீது இன்னொரு ஜாதியைச் சேர்ந்த சிலர் காட்டத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அங்குள்ள கருவக்காடு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாரியப்பன் தூக்கில் பிணமாக தொங்கினார்.அவரது உடம்பில் ரத்தக் காயம் காணப்பட்டது.
தகவல் அறிந்ததும் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். மாரியப்பன் கொலை செய் யப்பட்டுவிட்டார் என்ற தகவலை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இதற்கிடையே தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கடைகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. கடைகள் சூறையாடப்பட்டதால் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு ஓடினர். அக்கும்பல் கடைகளை மூடச்சொல்லி வியாபாரிகளை வற்புறுத்தினர்.
மேலும் சாலையில் சென்ற வாகனங் களையும் வழிமறித்தனர். சிலர் கல்வீசிலும் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் திரண்ட 500 பேர் தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. அமித்குமார்சிங் வர வேண்டும், விசாரணை நடத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.
மேலஉழூர் கிராமத்தில் கலவரம் ஏதும் மூளாமல் இருக்கவும், பதட்டத்தை தணிக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.