For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் ஆட்சி மலர பாடுபடுங்கள்: சோனியா காந்தி அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi
காரைக்குடி: தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டுமானால் காங்கிரஸார் அனைவரும் ஒருங்கிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்காக பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அங்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது தந்தை பழனியப்ப செட்டியார் நினைவாக, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டியுள்ள ஆடிட்டோரியத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

பின்னர் அழகப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தார் சோனியா. அங்கு நடந்த விவசாயக் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு சோனியா பேசினார்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.பி. ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலருமா என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் மனதிலும் உள்ளது. காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டுமானால், காங்கிரஸார் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்க்க பாடுபட வேண்டும், போராட வேண்டும்.

மீண்டும் மலரும் காமராஜர் ஆட்சி:

மக்களின் கஷ்டங்கள், சிரமங்களை போக்க உழைக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் செயல்பட வேண்டும். அப்படி நடந்தால் நிச்சயம் காமராஜர் ஆட்சி மீண்டும் மலரும். மீண்டும் காமராஜர் ஆட்சி மலர காங்கிரஸார் உறுதி பூண வேண்டும்.

நாட்டிலேயே மிகவும் சிறந்த, வளர்ந்த, முற்போக்கான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக மக்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். காமராஜரின் பொற்கால ஆட்சியை இன்னும் பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள்.

பெருந்தலைவர் காமராஜர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்தபோது ஏராளமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், முத்தாய்ப்பாக மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை காமராஜர் ஆட்சி தமிழகத்திற்குக் கொடுத்துள்ளது.

அந்த எழுச்சி மீண்டும் வர வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டியது நமது கடமை. காமராஜரின் லட்சியத்தை நாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த, எடுத்து வரும் முடிவுகள் அனைத்தும் ஏழை மக்களை பிற வர்க்கத்தினரின் வரிசைக்கு உயர்த்தும் நோக்கில்தான் எடுக்கப்படுகின்றன. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஏழைகளும், நலிவடைந்த பிரிவினரும் உயரிய நிலைக்கு வர வேண்டும் என்று எங்களது அரசு உறுதியுடன் செயலாற்றுகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால்தான் சமத்துவமான, வளர்ந்த சமுதாயத்தை நாம் அடைய முடியும். காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இத்தகைய லட்சிய நோக்கம் இல்லை.

காங். ஆட்சியில்தான் அதிக நிதி ஒதுக்கீடு:

கடந்த கால தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஐந்து மடங்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2008-09ம் ஆண்டுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கல்வித்துறைக்கு ரூ. 34, 400 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் வெறும் ரூ. 7024 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

அதேபோல சுகாதாரத் துறைக்கு ரூ. 16,534 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே ரூ. 6900 கோடியைத்தான் ஒதுக்கியது.

நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதுதவிர மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் அவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து எழுந்துள்ள விமர்சனங்களைக் கண்டு காங்கிரஸ் கவலைப்படவில்லை. விவசாயிகளுக்காக தொடர்ந்து அது பாடுபடும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் பணி ஜூன் 30ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.

விவசாயத்துறையை மேம்படுத்த நீர்ப்பாசனத் திட்டங்களை வேகமாக மேற்கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. 1 கோடி ஹெக்டேர் பாசன நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இல்லாமல் நாடு இல்லை, நாகரீகமும் இல்ைல என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது.

இந்த ஆண்டு விவசாயக் கடனாக ரூ. 2.80 லட்சம் கோடியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அடிக்கடி தமிழகம் வருவேன்:

இப்போது போல ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக நீங்கள் கூட்டம் போட்டால் நான் அடிக்கடி தமிழகம் வரத் தயார். என்னால் முடிந்த அளவு அதிக நேரத்தை உங்களுடன் செலவிட நான் தயார் என்றார் சோனியா.

காரைக்குடியில் சோனியா கலந்து கொண்ட கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

காரைக்குடி கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் சோனியா காந்தி திருச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து டெல்லி திரும்பிச் சென்றார்.

விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் சவுண்டய்யா, திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் சோனியாவை வழியனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X