மதுரை காவல் நிலையம் எதிரே 2 பேர் வெட்டிப் படுகொலை
மதுரை: மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் எதிரே ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ள இரு கொலைக் கைதிகள் இன்று பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த மாடசாமி மற்றும் திருமலை வேலு ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமி என்பவரைக் கொலை செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்கள்.
மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மதுரையில் தங்கியிருந்து கையெழுத்துப் போட்டு வந்தனர் இருவரும். இன்று காலையும் வழக்கம் போல கையெழுத்துப் போட இருவரும் வந்தனர்.
காவல் நிலையம் எதிரே அவர்கள் வந்தபோது பத்து பேர் கொண்ட கும்பல் திடீரென பாய்ந்து வந்து அவர்களை மடக்கி சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர்.
இந்த சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெறி தீரும் வரையில் இருவரையும் வெட்டிய அக்கும்பல் இருவரின் தலைகளையும் துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பட்டப் பகலில் பலர் முன்னிலையில், காவல் நிலையம் எதிரே நடந்த இந்த பயங்கர கொலையால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெரியசாமி கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்த இரட்டைப் படுகொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கொலைக் கும்பலைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.