கர்நாடகத்திற்கு மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து-நிலைமை சகஜமாகிறது

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஓகேனக்கல் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.
கர்நாடகத்தில் தமிழ் சினிமா திரையிடப்பட்ட தியேட்டர்களில் போராட்டம் நடத்தி தமிழ் சினிமா காட்சிகளை ரத்து செய்ய வைத்தனர். மேலும் தமிழர்களையும் தாக்கினர்.
பதிலடியாக தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது. கர்நாடக பேருந்துகள் தாக்கப்பட்டன. சென்னையில் கன்னடர்கள் நடத்தி வரும் ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஓசூரில் நடந்த பந்த்தின்போது கர்நாடக அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக தமிழக அரசு பஸ்கள் கர்நாடகாவுக்கு இயக்கப்படவில்லை. இதேபோல் கர்நாடகா அரசு பஸ்களும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினமும் 5அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த அரசு பஸ்கள் கடந்த 4 நாட்களாக கர்நாடகாவுக்கு இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பதட்டம் தணிந்துள்ளது. அமைதி திரும்பியுள்ளது. போராட்ட களமாக மாறியிருந்த எல்லைப் பகுதியிலும் அமைதி திரும்பியுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்டத்திலிருந்து தமிழக அரசு பஸ்கள் கர்நாடகா செல்ல இன்று கர்நாடகா போலீசார் அனுமதி வழங்கினார்கள். அதன்பேரில் தமிழக அரசு பஸ்கள் இன்று காலை முதல் கர்நாடக மாநிலத்துக்கு சென்று வருகின்றன.
அதேபோல ஓசூர் உள்ளிட்ட மார்க்கங்களிலும் கர்நாடகத்திற்கு அரசுப் பேருந்து போக்குவரத்து சகஜமாகி வருகிறது.
ஆனாலும், முழு அளவில் இன்னும் பஸ்கள் இயக்கப்படவில்லை.