
ஏட்டு மனைவியை கொன்ற கைதி எஸ்கேப்
சென்னை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பும் வழியில் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய கொலைக் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூரில் கடந்த மாதம் 27ம் தேதி போலீஸ் ஏட்டு மனைவி மைதிலி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட அண்ணாதுரை (27) என்பவர் 30ம் தேதி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து சென்னை புழல் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்த அரியலூர் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தயாகரன், போலீஸ்காரர்கள் பிரபாகரன், இளங்கோவன், பழனிவேலு ஆகியோர் பாதுகாப்புக்காக உடன் வந்தனர்.
பின்னர் அண்ணாதுரையை மீண்டும் அரியலூருக்கு கொண்டு செல்லும் வழியில் திருவல்லிக்கேணி அருகே ஹோட்டலில் சாப்பிட்டனர். அண்ணாதுரை சாப்பிடுவதற்காக அவரது கைவிலங்கை அவிழ்த்துவிட்டனர்.
சாப்பிட்டு முடித்து வெளியே வந்த உடன் அண்ணாதுரையை வேனில் ஏற்ற போலீசார் முற்பட்டனர். அப்போது அண்ணாதுரை, இன்ஸ்பெக்டரையும், மற்ற போலீஸ்காரர்களையும் தள்ளி விட்டு தப்பியோடினார்.
போலீசார் விரட்டிச் சென்றும் அண்ணாதுரையை பிடிக்க முடியவில்லை. சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் இரவு முழுவதும் தேடியும் அண்ணாதுரை சிக்கவில்லை.
இதையடுத்து, நேற்று காலையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தயாகரன் புகார் செய்தார். திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தயாகரன் உள்ளிட்ட 4 போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.