தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 26,000 கோடி

சென்னை தரமணியில், இந்திய சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ.) புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் கருணாநிதி.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் மையம், தமிழ்நாடு மாநில தரவு மையம் (எஸ்.டி.சி), தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு திட்டம், பொது சேவை மைய திட்டம், சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவி நிறுவுதல், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் டெலிமெடிசன் வசதி ஆகியவற்றின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
இந்த கட்டடங்கள்- திட்டங்கள்-மருத்துவ வசதிகளை தொடங்கி வைத்து கருணாநிதி பேசுகையில்,
வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து விண்வெளி வரை, மக்களின் வாழ்க்கையையும் அவர்களது பணிகளையும் தகவல் தொழில்நுட்பம் (IT) மாற்றி அமைத்திருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்துக்கு தகவல் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக விளங்குகிறது. நவீன சிந்தனைகளுக்கும் புதிய உலக நாகரீகத்துக்கும் தகவல் தொழில்நுட்பம்தான் முதுகெலும்பாக உள்ளது.
முன்னோடி மாநிலம் தமிழகம்:
தகவல் தொழில்நுட்பத்துறையை பொறுத்தவரை தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே சாப்ட்வேர் தொழில்துறைக்கென தனிக் கொள்கையை வகுத்த, முதல் மாநிலம் தமிழகம் தான். டைடல் பார்க் போன்ற தனி வசதிகளை ஏற்படுத்திய மாநிலமும் தமிழகமே.
இந்தியாவுக்குள் தகவல் தொழில்நுட்பம் நுழையும்போதே, அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி ஏற்படுவதற்கு அரசின் அந்த நடவடிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. அதனால் ஏற்படும் புரட்சிகரமான விளைவுகளை இன்று நாம் நேரில் கண்டு வருகிறோம்.
ஐடி-தமிழகத்தின் பங்கு 11%:
சாப்ட்வேர், ஹார்டுவேர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் தொழில்களில் (ITES) தமிழகம் இன்று முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் தகவல் தொடர்புத்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11 சதவீதமாகும்.
2011ம் ஆண்டில் இந்தப் பங்களிப்பை 25 சதவீதமாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.
தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 26,000 கோடி:
தமிழகத்தில் 2005-06ம் ஆண்டில் ரூ.14,400 கோடி மதிப்பில் இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி வர்த்தகம், 2006-07ம் ஆண்டில் ரூ.20,700 கோடியாகவும்,
2007-08ம் ஆண்டில் ரூ.26,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டால், அதன் எதிர்காலம் மேலும் பிரகாசமாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.
இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவும் தமிழக அரசோடு இணைந்து பீடு நடைபோடுகிறது. இன்று தொடங்கப்பட்டு உள்ள இந்த புதிய வசதிகள் மூலம் அதன் நடவடிக்கையில் மேலும் உத்வேகம் ஏற்படும்.
மதுரை, திருச்சி, ஒசூரில் ஐடி பூங்கா:
நமது அரசு ஏற்படுத்தியுள்ள ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய இருக்கும் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர், வேலூர் போன்ற இடங்களில் விரைவில் இதுபோன்ற வசதிகள் தொடங்கப்படும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
தொழிற்சாலைகள் வளர்ச்சிக்காக வளர்ந்து வரும் தேவைகளை சந்திப்பதற்காக ஐ.சி.டி. அகாடமி தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தேன். இந்தத் திட்டத்தில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு மத்திய அரசும் முடிவு செய்திருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இதற்காக ரூ.600 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
மனிதனுக்கு செய்யும் சேவை, இறைவனுக்குச் செய்வதாகும்' என்ற கருத்தையே நான் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், சாதாரண மனிதனை முன்னேற்ற முடியாது என்பதை பல விழாக்களில் நான் தெரிவித்திருக்கிறேன்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மையென்றாலும், சுகாதாரம், அரசு சேவைகள், வர்த்தகம் ஆகியவை சாதாரண குடிமகனுக்கும் கிடைக்கும்போதுதான் அதன் உண்மையான திறன் தெரியவரும்.
இந்தப் புரட்சியை, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கச் செய்யாமல் விட முடியாது. இங்கு தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், அரசின் முயற்சிகளை பிரதிபலிப்பதாக உள்ளது. அதனால் இந்த திட்டங்களை தொடங்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு அகலப்பரப்பு கணினி வளையம் திட்டமானது. இந்தியாவிலேயே முதல் வகை திட்டம் என என்னிடம் கூறப்பட்டது. மாநில தகவல் மையம் அமைக்கப்படுவதும் சிறப்பான முயற்சிதான். இந்த 2 திட்டங்களையும் அமல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நான் அறிவேன்.
இதற்காக, மத்திய அரசு, மாநில அரசு, எல்காட், எச்.சி.எல் மற்றும் டி.சி.எஸ். ஆகியவை அடங்கிய குழுவினரை நான் பாராட்டுகிறேன்.
வேண்டுகோள்:
தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும், அனைத்து தரப்பினருக்கும் தொழில்நுட்ப வசதிகளை எடுத்துச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் மட்டுமே செய்துவிட முடியாது. எனவே, அனைத்து தரப்பினரும் இதற்கு உதவவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.